Thursday, April 30, 2015


கருகி உதிர்ந்து போகும்படி, கொடிய நெருப்பு தொடர்ந்து தம் உடல்களைப் பற்றி மூடிக்கொள்ள; மேல் தோலுரிந்த மெய்யினர்….அரக்கர்…ஓடி கடல் நீரிடை புகுந்து ஒளிந்து கொள்வாராயினர்…. அரக்கரின் பெண்டிர், ஆடவர் என்ற இருபாலாரின் தலைமயிறும் செந்நிறமாய் இருந்ததால்; அந்த எறி திரை கடல் தானும் எரிந்து வேகின்றது ஒத்தது….!

 

ஆயுதச்சாலையில் இருந்த விற்கள், வேல்கள், கொடிய எறியீட்டிகள் முதலிய பல படைக்கலங்கள் விறகுகளாய் அமைய எஃகினால் அமைந்த அவற்றின் பாகங்கள் யாவும் அத்தீயில் உருகி, சிறு உருண்டையாகத் திரண்டு கிடந்தன…

 

மாயைத் தொடர்பால் பல்வேறு பிறவிகளில் உழன்று, பின் ஆத்மஞானம் அடைந்தோர் அப்பிறவிகளினின்றும் விடுபட்டு முன் நிலையை அடைவது போல; பல்வேறு ஆயுதங்களாய் உருவெடுத்திருந்த எஃகு, தீயில் உருகத் தம் உருவங்கள் மாறிப் பழைய இரும்பின் வடிவத்தை அடைந்தன…

“ தொல்லை நன்னிலை தொடர்ந்த பேருணர்வினர் தொழில் போல்..” ஆயுதங்களாய் இருந்த நிலை பல்வேறு பிறவிகளுக்கும், அநுமன் இட்ட தீ அஞ்ஞானத்தைப் போக்கும் ஞான உணர்வுக்கும் உவமைகளாயின…

 

ஓடை வெம் களிறு உடல் எரி நுழைய, காலில் கட்டப்பட்ட கனமான விலங்கையும், கழுத்தில் இடப்படும் கயிற்றையும் சிதற விட்டு, தம்மைக் கட்டியிருந்த வலிய கம்பங்களை எளிதில் பிடுங்கி எறிந்து, வால் முதுகினில் முறுக்கி, துதிக்கைகளை மேலே தூக்கிக் கொண்டு; வாய்விட்டு கதறி ஓடின….

 

மனத்து ஓர் அருளில்லாத வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் போல, பறவைகள் வெருளும் வெம்புகை படலையின் மேல் கடந்து செல்ல அஞ்சி, இருளும் வெம்கடல் வீழ்ந்தன…. அப்படி விழுந்த பறவைகளைப் பெரிய மீன் கூட்டங்கள் விழுங்கின… வஞ்சகருக்குக் கடலும், மீன்களும் உவமைகள்….! கம்பனை விஞ்சக்கூடிய கவி, ஓராயிரம் ஆண்டுக்குப் பின்னும் இன்னமும் பிறக்கவில்லை என்ற கூற்றுக்கு ஒரேயொரு உதாரணம் தருகிறேன்..

“ தேரெரிந்தன வெரிந்தன திறற்பரி யெவையும்

தாரெரிந்தன வெரிந்தன தருக்குறு மதமா

நீரெரிந்தன வெரிந்தன நிதிக்குவை யிலங்கை

ஊரெரிந்தன வெரிந்தன வரக்கர்தம் முடலம்….”

….சுந்தர காண்டம்…. இலங்கை எரியூட்டுப் படலம்…..

 

எல்லோருக்கும் சரளமாய் புரியும்படியாகப் பாடல் இயற்றுவது கம்பனுக்குக் கைவந்த கலை…! கம்பனுக்குக் கொடுக்க வேண்டிய கெளரவத்தை நாம் கொடுக்கத் தவறி விட்டோமோ….? இந்தத் தலைமுறைக்கு கம்பன் யாரென்றே தெரியாது என் மகன் உட்பட…! அம்மா ஏதோ பொழுது போகாமல் எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதாகத்தான் அவன் நினைக்கிறான்…!

 

தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்குக் கூட கம்பன் அந்தளவுக்குப் பரிச்சயமில்லை…ஏதோ தமிழ்ப்பாடத்தில் வரும் நாலைந்து செய்யுட்களை இயற்றியவர் என்கிற அளவில்தான் கம்பனை நினைவில் கொள்கிறார்கள்… அவன் கவிச்சக்கரவர்த்தி, கொண்டாடப்பட வேண்டிய ஓர் மகாகவி என்பது புரிந்து கொள்ளப்படவேயில்லை….
திரைப்பட பாடலாசிரியருக்கு கவிப்பேரரசு என்றெல்லாம் பட்டம் கொடுத்து, பொற்கிழி கொடுக்காத குறையாகக் கொண்டாடுகிறார்கள்… வள்ளுவனும், ஒளவையும், கோதையும், கம்பனும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் பாடலாசியர்கள் தமிழுக்குச் செய்து விட்டார்களா….? இன்றைய தமிழ்ச்சமூகம் தமிழின் தொன்மையை மறைக்கப் பார்க்கிறது…. பாரதி இறக்கும் வரை வறுமையில் அல்லவா இருந்தான்…? பாரதிக்குப் பக்கத்தில் நிற்கக் கூட தகுதியில்லாத இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு..?! பாரதியின் ஒரு பாட்டுக்கு ஈடாகுமா கீதாஞ்சலி…?! பாரதியின் படைப்புகள் பரவலாக முக்கிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படாதது மிகப்பெரிய குறை…

இலங்கை எரியூட்டுப் படலத்தில் என் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி விட்டேன்….!

 

அநுமன் இட்ட உயர் தீ… கடல், குளம் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போகும்படி, அவற்றிலுள்ள நீரை உறிஞ்சி, மா நெடும் நிலம் தடவி, மரங்களைச் சுட்டெரித்து, மலைகளைத் தழல் செய்து, தனி மா மேருவைப் பற்றி எரிகின்ற ஊழிக்காலத்து வெம்கனல் போல, அவ்விலங்கை நகர் முழுவதையும் எரித்தழித்து, இராவணன் மனை புகுந்தது…

 

“ பிரான் பெருநிலங் கீண்டவன் பின்னும்

விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்

மராமர மெய்த மாயவன் என்னுள்

இரானெனில் பின்னை யானெட்டுவேனோ… “

….நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

Thursday, April 23, 2015


அநுமன் வாலிலிட்ட கடும் கனல், இலங்கை நகரின் கடிய மா மனை தோறும்; கட்டப்பட்டிருந்த கொடிகளைப் பற்றிக்கொண்டும், சித்திர ஆடைகளால் அமைக்கப்பெற்ற விதானங்களை எரித்தும், “ தாள் நெடிய தூணைத் தழுவி, நெடுஞ்சுவர் முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்று…” அம் மாளிகைகள் முழுதும் எரித்தழித்தது….

 

நிலை தளர்ந்த அந்நகரவாசிகள் யாவரும் போகும் வழியறியாது, முன்னும் பின்னுமாக ஊஞ்சல் ஆடுவது போல ஓடி, உலைந்து போய் பேரொலியை உண்டாக்கினர்…நெடும்புகை வானத்தை மறைத்தமையால் போன திக்கு அறியாது புலம்பினர்.. வெம்மை தாங்க முடியாமல் ஆடவரும். மகளிரும் தம் தலைமேல் நிரம்ப நீரைச் சொரிவாராயினர்… இந்த இடத்தில் கம்பனின் கன்னல் தமிழ் துள்ளி விளையாடுகிறது….

 

“ இல்லில் தங்கும் வயங்கு எரி யாவையும்

சொல்லில் தீர்ந்தன போல் அரும்

தொல் உரு புல்லிக் கொண்டன…”

அரக்கர் வீடுகளில் இதுகாறும் தங்கி விளங்கி வந்த நெருப்புக்கள் யாவும், இராவணனுடைய கட்டளைச் சொல்லினின்று விடுபட்டவை போல; அநுமன் வைத்த தீயுடன் ஒன்றுபட்டு, தம் பழைய உருவை மேற்கொண்டன…

அரக்கர்தம் வீடுகளில் பணி புரிந்த நெருப்பான மாயைப் புணர்வுற்ற ஆன்மா… அநுமன் வைத்த தீயான பரமாத்மாவோடு இணைந்தது என்கிற சரணாகதித் தத்துவத்தை கம்பன் இந்தப் பாடலில் மறைப்பொருளாக வைத்திருக்கிறான்…. அகத்து நெருப்பும், அநுமன் இட்ட தீயும் ஒன்றானது….! கம்பனின் கவிப்புலமையைச் சொல்லவும் வேண்டுமோ…?!

 

இலங்கை எரியூட்டும் படலம் முழுக்க முழுக்க கம்பனின் தமிழ் பேரரருவியாய்ப் பொங்கிப் பாய்கிறது….

ஓர் குறள் உருவாய்… வாமன உருவமாய் வந்து, ஓங்கி உலகளந்த உத்தமன்… திரிவிக்கிரமன்… புருஷோத்தமன்… புண்டரீகாக்ஷன்… பேருருவோடு விண்ணோக்கி எழுந்த கருமுகில்வண்ணன்…. கமலக்கண்ணன்… எம்பெருமானின் திருமேனியைப் போல, இலங்கை நகரெங்கும் வெம்புகை மேலெழுந்து போய் எங்கும் பரந்ததாக ஆயிற்று….!

 

கருநிறமுடைய யானைகள், தம் மேல் நெருப்புச் சூழ்ந்து பற்றிக் கொண்டதால்; அவற்றின் தோல் உரிந்து போக, தேவேந்திரனின் ஐராவதம் என்னும் யானையைப் போன்று வெண்மையாகக் காணப்பட்டனவாம்…. என்னவொரு அழகான கற்பனை….?!

 

பொடித்து எழுந்த பெரும் பொறி… மேலே போவனவும், கீழே விழுவனவுமாக, எங்கணும் இடிக்கூட்டங்களைப் போல வெடித்தன… கடல் வெப்பம் மேலிட; மீன்குலம் துடித்து, வெந்து, புலர்ந்து, உயிர் சோர்ந்தன…

 

நெருப்பு மடுத்தமையால், மாளிகைச்சுவரில் பதிக்கப்பட்டிருந்த பொற்தகடுகள் உருகித் தாரையாய் கடலினுட் புகுந்து, கடல்நீரில் குளிர்ந்து, முறுக்குக்கள் அமைந்த நீண்ட பொன் தண்டுகள் போல திரண்டு விளங்கின…இலங்கை நகரின் செல்வச் செழிப்புதான் என்னே..?!

 

உலகு உண்ணும் எரி அது… பன்மணி மாளிகையோடும், நீள் நெடும் சோலைகளோடும் எரித்தது நிற்குமோ….? நிற்காது.. மற்ற இடங்களில் நெருப்பு பற்றினால் தரையாவது எரிந்து போகாது தங்கும்… ” தரையும் வெந்தது  பொன் எனும் தன்மையால்…” இலங்கை நகரின் நிலமும் பொன்னால் அமைந்திருந்தமையால், அதுவும் உருகி வெந்தழிந்தது….. பொன்னகர் இலங்கை…!

 

சொன்னவுடனேயே எரிக்கும் தன்மை வாய்ந்த பெரியோரின் சாப    மொழியைக் காட்டிலும், “ சொல்லொக்குங் கடிய வேகம்..” … விரைவாகப் பற்றிய தீ என்கிறான் கம்பன்…!

 

வானுலகத்து கற்பக வனம் இராவணனால் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில் வைக்கப்பட்டிருந்தது… அவை இயற்கையிலேயே ஒளியுடையவை… அநுமன் இட்ட தீயால், எரிந்தவை, எரியாதவை.. அறிந்துகொள்ள முடியாதபடி விளங்கின….” வெம்கனல் பரந்தவுந் தெரிந்தில கற்பகக் கானம்…”…

 

மிக்க வெம்புகை சூழ்ந்ததால், வெள்ளியங்கிரியான கயிலைமலையும் கருநிறமடைந்தது… அன்னப்பறவைகளும் காக்கைகளைப் போல கரிய உருவாயின… எங்கெங்கும் வேறுபாடு தெரியாதபடி, எல்லாம் கருநிறமாகக் காணப்பட்டன…!

 

“ உள்ளெலாம் உருகிக் குரல் தழுத் தொழுந்தேன்

உடம்பெலாம் கண்ணநீர் சோர

நள்ளிருளளவும் பகலும் நானழைப்பேன்

நாராயணா என்னும் நாமம்….”

….திருமங்கையாழ்வார்….பெரிய திருமொழி….

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, April 15, 2015


எம்பெருமான் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி பால் அன்பின் நார் அறாத சிந்தை அநுமன், வெம் தீ தம் வாலினை விழுங்கி நிற்பினும், தன்னைச் சுட்டு வருத்தாது குளிர்ச்சியோடு விளங்கிய தன்மையை; தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து, உணர்ந்து, ” ஜனகன் பாவை கற்பினால் இயன்றது இது…” என்று தீர்மானித்து மிகவும் களிப்புற்றவனானான்

 

பிராட்டியைத் தேடியலைந்த போது, பார்க்காத இடங்களை; இப்பொழுது அரக்கர்கள் இழுத்துச் செல்லும்போது, இலங்கையின் ஒவ்வோரிடத்தையும் நன்றாய் விளங்கப் பார்த்தான்முன்னம் இராத்திரி கண்டும், காணாதது; இன்று நன்றாய் பார்த்துக் கொள்ளும் தீக்கொளுத்த…. என்று அரக்கர்களே காட்டிக் கொடுத்தது போலாகிவிட்டது…!

 

இப்படி..இலங்கை நகர் முழுக்க இண்டு, இடுக்கு விடாமல் பார்த்துக் கொண்டே நெடுகச் சென்ற அநுமன், “ இனி யான் நீங்க வேண்டிய காலம் இதுவாகும்…” என்று எண்ணினன்…. தன்னை வலிதில் பற்றித் தழுவிய அரக்கர்கள் பிணித்த கயிறுகளோடு, தூண்கள் போலத் தொங்க; விண் மேல் உயர எழும்பினான்அவ்வரக்கர் கூட்டமெல்லாம் கீழே விழுந்தனமுற்றும் அழிந்தன….

அரவுகளாற் சுற்றப்பட்டு வானில் எழுந்து செல்லும் கருடனைப் போல விளங்கினான் அநுமன் என்று கருடத்தாழ்வானை அநுமனுக்கு உவமையாக்குகிறான் கம்பன்…!

அரவின் சுற்றம் பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன்…..”…!

 

பகைவருடைய நகரை முற்றும் சுட்டெரிப்பதான தொழிலை மேற்கொள்ளப் போகிறேன்அவ்வரக்கர் வாழும் மாளிகைகள் எல்லாம் பற்றிக் கொள்ள எரி மூட்டுவேன்…” என்று தம் மன்னனை, தாமரைமலர்க் கண்ணனை, தயரதன் புதல்வனை, திருத்துழாய் மார்பனைபலமுறை வாழ்த்தித் துதித்து; பொன்மயமான அந்த இலங்கை நகரின் மேலே, போர்த்திறத்தில் சிறந்து விளங்கும் தன் வாலைச் செல்லுமாறு அநுமன் செலுத்தினான்

 

நீர் மிக்க கடல் வரையிலும் விளங்கிய பேர் இலங்கை நகரை; எல்லாப் பக்கங்களின் எல்லை வரையிலும் எரிந்து போக, ஒரு கணத்து எரித்த அந்த அநுமனின் மூரி போர் வால்; பவழம் போன்று செந்நிறமான திருமேனியுடைய எம்பெருமான் பரமேஸ்வரன்மேருமலையாகிய தன் வில் வளைய, தோளால் திரிபுரங்களின் மீது தூண்டிய அம்பு போன்றிருந்தது….! அநுமன் வாலுக்கு முப்புரம் எரித்த அம்பை உவமையாகக் காட்டுகிறான் கவிச்சக்கரவர்த்தி….!

முன்னையிட்ட தீ முப்புரத்திலே

பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்… “

பட்டினத்தடிகள்….

 

வெள்ளியாலும், பொன்னாலும், பிரகாசிக்கின்ற அழகிய இரத்தினங்களாலும் அமையும்படி; சிற்ப வித்தையில் தேர்ந்த தெய்வச் சிற்பியான விஸ்வகர்மன் தன் கைவன்மையால் முயற்சி செய்து, அருமையாக அமைத்த மாளிகைகள் தோறும் வரிசை வரிசையாக, தாவித் தாவி ஒள் எரி ஓடும் தன் வால் நெருப்பை ஊழி வீழ் காலத்து இடியையொத்த அநுமன் பற்ற வைத்துக் கொண்டு செல்வானாயினான்

 

கருநிறமுள்ள அரக்கர்கள்; எங்கும் நெய்யைப் பொழிந்து செய்யும் வேள்விகளை வேதியர்கள் செய்ய விடாமல் தடுக்கஅதனால் வேள்வித்தீ உண்ணாமல் பசித்திருக்கும் அக்கினிதேவனும், மாருதி வாலை அன்பால் பற்றி, “ உலகெலாம் உண்ணும் காலம் இதுவே..” என்றுணர்ந்து, இலங்கை நகரைக் கடிதின் உண்டான் அக்கினிதேவன்…! பிரளயத் தீயை அநுமன் வாலின் தீக்கு உவமையாக்குகிறான் கம்பநாட்டாழ்வான்…!

 

மாயனார் திரு நன்மார்பும்

மரகத உருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும்

துவரிதழப் பவள வாயும்

ஆயசீர் முடியும் தேசும்

அடியரோர்க் ககல லாமே…?!....”

தொண்டரடிப்பொடியாழ்வார்திருமாலை….