Monday, July 6, 2015


தென்திசை நோக்கி வணங்கிய அநுமன், ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நோக்கி, “ அண்டர் நாயக… கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்…! தென்திரை அலைகடல் இலங்கை தென்னகர் தன்னில்…இனி ஐயமும், பண்டு உள துயரமும் தவிர்த்தி….” என்றான்…

 

இரவில், கருநிறத்தரக்கியர் குழுவினிடையே மின் போல ஒளி வீசிய பிராட்டியின் திருவுருவம்; அநுமன் கண்களுக்கு நன்கு புலப்பட்டது என்பதை, “த்ருஷ்ட ஸீதா” என்று அநுமன் கூறியதாக வான்மீகத்தில் வருகிறது… கம்பன் அதைக் “ கண்டனென் கண்களால்..” என்கிறான்….

 

“ ஐயனே… உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உம்மைப் பெற்ற தசரதச்சக்கரவர்த்தியின் பெருமைக்கேற்ற மருமகள் என்னும் சிறப்புக்கும், மிதிலை வேந்தன் தன் பெரும் தனயை என்னும் தன்மைக்கும், தகைமை சான்ற என் பெரும் தெய்வமாய் உள்ளாள்…  இன்னமும் யான் அறிந்து கொண்ட செய்திகளைக் கேட்டருள்வீராக..”

 

“ கோதண்டராமனே…வீங்கு நீர் இலங்கை வெற்பில், நல்பெரும் தவநெறியில் பொருந்திய, பொன்னை ஒத்து இருப்பது போல பொறையில் நின்றாள் தையல் நல்லாள்… அவள் கண்களிலும், கருத்தினும், வாயினின்று தோன்றும் சொற்கள் ஒவ்வொன்றிலும். அண்ணல் வெம்காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப் புண்ணினும்; எங்கெங்கிலும் நீங்காது நீயே இருக்கின்றாய்…”

இராமபிரானை மனம், மெய், மொழி என்பவற்றால் எப்பொழுதும் பிரியாதிருந்தாள் பிராட்டி.. என்று அநுமன் வாயிலாகக் கம்பன் கூறுகிறான்…

 

“ ஐயனே… பொன்மயமான கற்பக விருக்ஷங்கள் உள்ள அசோக வனம் என்னும் சோலையின் உள்ளே, முன்னர் உன் தம்பி இலக்குவன், புற்களால் வேய்ந்து அமைத்த பர்ணசாலையில் தங்கியிருக்கிறாள்…. வானுயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சிய இலங்கேஸ்வரன், அவளிருந்த தரையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான்…”

 

“ இராவணன் பிராட்டியைத் தீண்டிலன் என்னும் உண்மையை; யான் எவ்வாறு உணர்ந்தேன்…? பிரமதேவன் படைத்த அண்டகோளம் பிளந்து போகவில்லை… ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம் கிழிந்து போகவில்லை… கடல்கள் பொங்கியெழுந்து, மேற்கிளம்பி, உலகங்களை அழித்துக் கொண்டு செல்லவில்லை….சூரிய, சந்திர சுடர்கள் யாவும் விழுந்தில…. என்ற இந்நிலைமைகள் வாய்மையால் நிலைபெற்றுள்ளன என்பதால் என் நாயகனே… எம் பிரானே.. நீ உணர்தி…”

 

அநுமன் இலங்கை முழுவதும் நாடி, பிராட்டியைக் கண்டடைந்த வரலாற்றைக் கூறினான்… “ கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்…”

“ பிராட்டி தன்னுயிரை போக்கிக் கொள்ளவிருந்த சமயத்தில், எளியேனான அடியேன் தடுத்து, அவள் பொன்னடி வணங்கி, இராமநாமம் சொன்னபோது; எம்பெருமானின் நாமம் சொல்லி எனக்குச் சுவர்க்கம் அளித்தவனானாய் என்று மகிழ்ந்து கூறினாள் பிராட்டி… நின் திருவாழியை யான் பேரடையாளமாகக் காட்ட அதனைப் பெற்றுக் கொண்டாள்…. இன்னும் ஒரு மாதகாலம் தான் உயிர் வைத்துக் கொண்டிருப்பேன் என்று அறுதியிட்டுக் கூறினாள்…. தன் துகிலின் வைத்திருந்த சூடாமணியை அடியேனிடம் கொடுத்தருளினாள்…. செங்கண்மாலே… என் உலகுடை நாயகனே…. இதைப் பெற்றுக் கொள்வாயாக…. “ என்று கூறி, சூடாமணியை இராமபிரானிடம் கொடுத்தனன் அநுமன்…

 

சூடாமணியைக் கண்ட இராமனின் நிலை…

“ பொடித்தன உரோமம் மேன்மேற் பொழிந்தன கண்ணீர் பொங்கித்

துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி

மடித்தது மணிவாய் ஆவி வருவது போவதாகித்

தடித்தது மேனி என்னே யாருளர் தன்மை தேர்வார்…”

சுந்தர காண்டம்… திருவடி தொழுத படலம்….

 

தமிழை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு இந்தப் பாட்டுக்கு உரை சொல்ல வேண்டிய அவசியமில்லை… இராமாவதாரத்தில் எம்பெருமான் காதலில் கசிந்து, கண்ணீர் மல்கியது போல், வேறெந்த அவதாரத்திலும் தன்னை வருத்திக் கொள்ளவில்லை… அதனாலேயே இராமாவதாரம் சிறப்புடையதாயிற்று….

 

அப்பொழுது சுக்ரீவன் இராமபிரானைத் தேற்றி, “ ஐயனே… இனியும் நாம் காலம் தாழ்த்த வேண்டியதில்லை… விரைவாக வானரச் சேனையை அழைத்துச் செல்வோம்…” என்று கூறி, தென்திசை நோக்கிப் படைகளை விரைவுபடுத்தினான்…. வானரச்சேனை பன்னிரெண்டு நாட்கள் வழிநடந்து சென்று, தென்திசையில் உள்ள கடலை வந்தடைந்தனர்….

 

இந்தப் பதிவோடு சுந்தர காண்டம் நிறைவடைகிறது… அடுத்தப் பதிவு முதல் யுத்த காண்டம்… மீதி காண்டங்களை விடவும் சுந்தர காண்டத்தில் மனித உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… எப்படி எழுதப் போகிறோம் என்று எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது… எளியேனையும் எழுத வைத்தது எம்பெருமானின் கருணையல்லவோ…?! அவனருளாலே அவன் தாள் பணிகிறேன்…!!!

 

“ நாறு நறும் பொழில் மாலிருஞ்

சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான்

இன்று வந்திவை கொள்ளுங்கொலோ….”

கோதை நாச்சியார்… நாச்சியார் திருமொழி….