Monday, September 28, 2015


நிறைமதி நாளில், முழுத்திங்கள் போன்ற முகமுடைய மாதவியை அணைத்து வாழ்ந்த வாழ்க்கையை நெகிழவிட்டவன் ஆனான் கோவலன்….
 “ ஏவலாளருடன் சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்க்
 கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்புக்குக்
 காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்…
 பொழுது போயிற்று. புறப்படலாம் எழுக. “ என்றான்.. ஆனால் அவளுடன் செல்லாது, ஏவலாளர் சூழ்ந்துவரக் கோவலன் குதிரையேறி வேறுபுறம் சென்றான்… அவன் சென்றபின்பு, ஏதும் பேசாது, யாதொன்றும் செய்வதறியாது திகைத்த நெஞ்சினளாய், மூடுவண்டியில் ஏறி உள்ளே அமர்ந்தாள்…. காதலனுடன் செல்வதன்றி வருந்தித் தனியே தன் மனை நோக்கிச் செல்லலானாள்….


இந்தச் சம்பவத்திற்குப் பிறகு; மாதவியும், கோவலனும் நேரில் சந்தித்ததாகக் குறிப்புகளில்லை…. அவன் வருவான் வருவான் என்று மாதவி காத்துக் கிடந்ததுதான் மிச்சம்…. அவனை நினைந்து நினைந்து ஏங்கினாள்…. தன்
பிரிவாற்றாமையை யாழிசை மூலம் வெளிப்படுத்தினாள்… கோவலன் நினைவு வரும்போதெல்லாம் பூங்கொடி
போன்ற மாதவி மயங்கினாள்….

இனியும் அவன் பிரிவைப் பொறுக்காதவளாய், கோவலனுக்கு ஒரு திருமுகம் ( மடல் ) வரைந்தாள்… முதிர்ந்த தாழம்பூவினது வெள்ளிய இதழிலே, பித்திகையின் கொழுவிய முகையை எழுத்தாணியாகக் கொண்டு; அதனை செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எழுதினாள்… தனிமைத்துயர் மிக்க அந்த அந்திமாலைப் பொழுதிலே, தோழி
வசந்தமாலையை அழைத்து, “ இத்தூய மலர்மாலையில் நான் வரைந்துள்ள சொற்களின் தெளிந்த பொருள்களையெல்லாம் கோவலன் மனம் ஏற்குமாறு எடுத்துக்கூறி, இங்கே, இப்பொழுதே அழைத்து வருவாயாக….” என்றுரைத்து, முடங்கல் அடங்கிய மாலையைக் கொடுத்தனுப்பினாள்….


“ பசந்த மேனியள் படருறு மாலையின்….” என்கிற வரிக்கு, காதலன் பிரிவால் பசலைநோய் படர்ந்தது என்று பொதுவாக உரை எழுதலாம்… ஆனால் என்னுடைய அனுமானத்தில், மாதவி அப்போது கருவுற்றிருந்திருக்கிறாள்….
( கோவலனின் மரணத்திற்குப் பின் பிறந்தவள் மணிமேகலை. )

வசந்தமாலை, அந்த முடங்கலைக் கொண்டுபோய், புகாரின் கூலக்கடை வீதியிடத்தே; கோவலனைக் கண்டு அம்மாலையைத் தந்தாள்…. அதனை ஏற்க மறுத்த கோவலன், இதுகாறும் தன்னுடன் மாதவி வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வெறும் நடிப்புத்தான். உண்மையல்ல.. என்று பழித்துரைத்தான்…( பெண்மனம் அறியா மூடன்..) ” அவள் ஒரு நாடக மகள். என்னைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றி விட்டாள்..’’ என்று கூறி வர
மறுத்துவிட்டான் கோவலன்…

அவன் வரமறுத்ததை அறிந்த மாதவி, “ அவர் ஏதோ என் மேலுள்ள கோபத்தால் அப்படிக் கூறியிருக்கிறார். எப்படியும் இம்மாலைப்பொழுதினுள் இங்கு வருவார்… இல்லாவிடினும், நாளைக்காலை இங்கு நிச்சயம் வருவார்…” எனக் கூறி, இமைப்பொருந்தாமல்; காதலனை எண்ணியெண்ணி ஏங்கிக் கிடந்தாள்… அவள் நினைத்த மாலைப்பொழுதும், காலைப்பொழுதும் வராமலேயே போய்விட்டது….!


கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு, புகார் நகரத்தை விட்டுச் சென்றுவிட்டான் என்றறிந்த மாதவி, கோசிகன் என்கிற ஒரு பிரம்மசாரியிடம், கோவலனுக்கு ஒரு முடங்கல் எழுதி, அவனை எப்படியாவது கண்டுபிடித்து, அவனிடம் சேர்க்கும்படி வேண்டினாள்… கோசிகனும் கோவலனைத் தேடிக்கொண்டு, மதுரைக்குப் பயணமானான்….


காட்டுவழியில் கோவலனைக் கண்டுபிடித்தான்… மாதவியின் முடங்கலை அவளிடம் சேர்ப்பித்தான்… அன்பு மிகுந்து, அவள் கதறி எழுதியிருந்த( காதலால் கசிந்து கண்ணீர் மல்கி..! ) முடங்கலைப் படித்தபின்பு,
“ அவளிடம் குற்றமேதுமில்லை…” எனத் தெளிந்து, மாதவிக்காக மனம் வருந்தினான்…. அந்த முடங்கலில்
அவள் கூந்தலில் பூசியிருக்கும் நெய்யின் மணம் வீசியது அவனை நெகிழவைத்தது…. அவளோடு வாழ்ந்த
காதல் வாழ்க்கையை நினைத்து ஏங்கினான்…! “ மாதவி யோலை மலர்க்கையின்நீட்ட
 உடனுறை காலத் துரைத்த நெய்வாசம்
 குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்தி….”
 சிலப்பதிகாரம்…. மதுரைக் காண்டம்..


கோவலன் மனதில் எப்போதும் தனக்கோர் இடமிருக்கிறது என்பதைக் கோசிகன் மூலம் தெரிந்து கொண்டிருப்பாள் மாதவி…! அதைப்பற்றி இளங்கோவடிகள் எழுதவில்லையென்றாலும், அது மறைப்பொருளாக உணர்த்தப்படுகிறது….!


மதுரையில் கோவலன் கொல்லப்பட்ட செய்தியறிந்த மாதவி, மனம் உடைந்தாள்… அதற்கடுத்து அவள் செய்ததுதான், அவளின் காதலை உன்னத நிலைக்குக் கொண்டு சேர்த்தது…!


தான் அணிந்திருந்த தலைமாலையைக் கூந்தலுடன் ஒருசேரக் களைந்தெறிந்து விட்டு, தன் செல்வத்தையெல்லாம் புண்ணியம் தரும் தானம் புரிந்து, புத்தத்துறவியான அறவணஅடிகள் முன்பு துறவறம் பூண்டாள்…!
 “ இறந்த துயர்கேட்டு மாதவி மடந்தை
 கணிகையர் கோலம் காணா தொழிகெனக்
 கோதைத் தாமம் குழலொடு களைந்து
 போதித் தானம் புரிந்தறங் கொள்ளவும்….”
 சிலப்பதிகாரம்…. வஞ்சிக்காண்டம்….


இதையெழுதும் போது, சொல்லவொண்ணாத
துக்கம் ஏற்படுகிறது….

அவள் மகள் மணிமேகலையையும்
புத்தப்பள்ளியில் சேர்த்து, துறவற நெறியை மேற்கொள்ளச் செய்தாள்…. “ மணிமேகலைதன் வான்துறவு உரைக்கும் “ காப்பியம் மணிமேகலை….!


தன்னுடைய ஒப்பற்ற காதலால், தமிழ் இலக்கியத்தில் மிகவுயர்ந்த இடத்தைப் பிடித்த பெண்மணி மாதவி, கண்ணகியை விட ஒருபடி உயர்ந்து நிற்கிறாள்…..!

நிறைந்தது….!
 

முழுநிலவு நாளில், புகார் மக்கள் கடலாடி மகிழ்வது வழக்கம்…தாழை, புன்னை மரங்களடர்ந்த சோலைகளையுடைய கடற்கரையிலிருந்து; கடல்விளையாட்டைக் காண்பதற்குப் போகவேண்டும் என்று விரும்பினாள் மாதவி… கோவலனும் அழைத்துச் செல்ல இசைந்தான்..
 “ மடலவிழ் கானற் கடல்விளையாட்டு
 காண்டல் விருப்பொடு வேண்டினளாகி….”
 இரவுநேரம்… வானத்தில் முளைத்த வெள்ளி நிலத்தில் செறிந்த இருளை விலக்கியது… மாலையணிந்த மார்பினையுடைய கோவலனுடன், அழகான ஆபரணங்களை அணிந்த மாதவியும் புறப்பட்டாள்… கோவலன் குதிரையில் ஏறினான்… மாதவி பல்லக்கில் வந்தாள்…
புகார் நகரத்தின் பல தெருக்களையெல்லாம் கடந்து, நெய்தல்நிலத்துக் கடற்கரைச்சோலையை அடைந்தனர்… தன் தோழி வசந்தமாலையின் கையிலிருந்த யாழை வாங்கி மீட்டினாள்… கோவலனுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தாள் மாமலர் நெடுங்கண் மாதவி… கோவலனிடத்து யாழினை நீட்டி இசைக்கச் சொன்னாள்..

கடற்கரையில் அங்கங்கே கூடாரம் போன்று அமைக்கப்பட்டிருந்தன… புன்னைமர நிழலில், வெண்மணல் பரப்பில், ஓவியங்களால் எழுதப்பட்ட சித்திரத் திரையைச் சுற்றிலும் சேர வளைத்துக்கட்டி, மேல்விதானமும் இடப்பட்ட, யானைத் தந்தத்தாலான கட்டிலின் மீது; கோவலனும், மாதவியும் அமர்ந்திருந்தனர்…( என்னவொரு ரம்மியமான சூழல்…! )
 “ புன்னை நீழற் புதுமணற் பரப்பில்
 ஓவிய எழினி சூழவுடன் போக்கி
 விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை….”


கோவலன் கானல்வரிப் பாடல்களைப் பாடத் தொடங்கினான்…. காவிரியாற்றையும், புகார் நகரத்தையும் புகழ்ந்து பாடினான்… புகார் நகரத்தைப் பற்றிப் பாடும்போது; தலைவன், தலைவி, தோழி, பாங்கன் என்று அமைத்து அகப்பொருள் பாடல்களைப் பாடினான்… ஒன்றிரண்டு பாடல்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்..


” வெண்சங்கையும், வெண்முத்தினையும் கண்டு; வெண்திங்களும், விண்மீன் கூட்டமும் என மயங்கி, ஆம்பல் மலர்கள் பகலிலும் மலர்ந்ததாம்..( ஆம்பல் இரவில் மலரக்கூடிய மலர்.. ) அப்பேர்ப்பட்ட புகார் அன்றோ எம்முடைய ஊர்…?! உன்னுடைய பொய்ச்சொற்களை, மெய்ச்சொற்கள் என மயங்கினாள் என் தலைவி…” என்று தோழி, தலைவனிடத்து உரைப்பது போலப் பாடினான் கோவலன்…

அதேபோல, தலைவன்; தலைவியைப் பிரிதல் ஆற்றாதவனாய், தன் நெஞ்சுக்குக் கூறியவையாகச் சில பாடல்களைக் கோவலன் பாடினான்…
 “ வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
 தளைஅவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே
 முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
 இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே..”


கொஞ்சும் தமிழ்…! “ நெஞ்சையள்ளும்
சிலப்பதிகாரம் “ என்று இதனால்தான் சொன்னார்களோ…?! “ புகார் நகரத்தின் அழகைச்

சொல்லி, என் தலைவி உலவிய இடம்… இவையெல்லாமே என்னைத் துன்புறுத்தின…” என்று தலைவன் பாடுவதாகக் கானல்வரிப் பாட்டைப் பாடினான் கோவலன்…


கோவலனுடைய கானல்வரிப் பாட்டைக் கேட்ட மாதவி, அதன் உட்கருத்தைப் புரிந்து கொள்ளாமல், “ இவன் உள்ளத்தே வேறொரு பெண்ணைப் பற்றிய குறிப்புப் பொருள் உள்ளது.. இவன் தன் தன்மையிலே வேறுபட்டான்…” எனக் கருதினாள்…. அகத்தில் ஊடலோடு, கோவலனிடமிருந்து யாழை வாங்கி; தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்றுமாறு, கானல்வரிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தாள்…. தலைவி, தலைவனை நினைத்துப் பாடுவதாகப் பாடல் அமைத்துப் பாடினாள் மாதவி…
 “ கானல் வேலிக் கழிவாய் வந்து
 நீநல் கென்றே நின்றார் ஒருவர்
 நீநல் கென்றே நின்றார அவர்நம்
 மானேர் நோக்கம் மறப்பார் அல்லர்….”
 “ புகார் நகரத்தின் சோலை

சூழ்ந்த கழியினிடத்தே தாமாகவே ஒருவர் வந்து, “ நீ எனக்கு அருள் செய்வாயாக..” என்று
வேண்டி நின்றார்… அவர் நம் மான்போலும் மருண்ட பார்வையை மறப்பாரல்லர்… மீண்டும் வருவார்…”
என்று தலைவி, தோழிக்கு உரைத்தவையாகப் பாடினாள் மாதவி…

மாதவியின் கானல்வரிப் பாட்டைக் கேட்ட கோவலன், “ நான் கானல்வரி பாடினேன்… அவள் அவ்வாறு பாடாது, வேறொன்றன் மேல் மனம் வைத்து, வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றையும் கூட்டிப் பாடினாள்…” என எண்ணினான்….


யாழிசையைக் காரணமாகக் கொண்டு
ஊழ்வினை சினந்து வந்து பயனைத் தரத் தொடங்கியது….!

“ கானல்வரி யான் பாடத் தானொன்றின் மேல் மனம் வைத்து
 மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென
 யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினை வந்து உருத்ததாகலின்…… “
 சிலப்பதிகாரம்…. புகார்க் காண்டம்…. கானல்வரி….

தொடரும்…..
 

மாதவியின் புகழ் சோழநாடெங்கும்
பரவியது… தன் காதலன் கோவலனோடு இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்…

“ நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
 கலவியும் புலவியும் காதலற்கு அளித்தாங்கு
 ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு
  கோலங் கொண்ட மாதவி…. “
 சிலப்பதிகாரம்…. புகார்க்
காண்டம்….


வசந்தகாலத்தில், காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா எடுப்பது வழக்கம்… இந்திரனுடைய கோவிலில் கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைப்பர்… புகார் நகர வீதியெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும்… காவிரிநீரை பொற்குடத்தில் ஏந்திவந்து, இந்திரனின் திருவுருவச்சிலைக்கு மஞ்சன நீராட்டுவர்…
 இந்திரன் தவிர; சிவபெருமான், ஆறுமுகவேள், திருமால், பிரமதேவன் கோவில்களும் மஞ்சன நீராட்டப்பெற்றன…. இந்தக்கடவுளர் தவிர; அருகர் ( சமணர் ), புத்தர் பள்ளிகளிலும் விழா ஏற்பாடுகள் சிறப்புடன் நிகழ்ந்தன…

இந்திரவிழாவன்று, சிறைப்பட்ட பகைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்… இரவுபகல் ஓயாது முழவுகள்
முழங்கின… குறுந்தெருக்களும், நெடுஞ்சாலைகளும் இந்திரவிழாவின் களிப்பில் மூழ்கித் திளைத்தன….


கோவலனுடைய குணம் என்று ஒரு வரியைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள்…. காமமொழிகளைப் பேசித் திரிகின்ற பரத்தரோடு, ஊர் சுற்றும் இயல்புடைய கோவலன்…( ரொம்ப நல்ல குணம்….! )
 “ நகரப் பரத்தரொடு தரிதரு
மரபிற் கோவலன் போல…”


இந்திரவிழாவின் கடைநாளில் காமதேவனுக்கு வழிபாடு நடக்கும்… சிலப்பதிகாரத்தில் சிருங்காரரசம் மிக்க பாடல்கள் ஏராளமாய் உண்டு… எதற்கு நான் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், பண்டைய தமிழகத்தில்; நாம் அந்தரங்கம் என்று நினைக்கின்ற விஷயங்கள் எல்லாம் மிகவும் வெளிப்படையாக நடைப்பெற்றிருக்கின்றன…


இந்திரவிழாவில்; மாதவியின் ஆடல்சிறப்புப் பிறரைக் கவருமாறு அமைந்ததால், கோவலன் அவளிடம் சற்றே ஊடல் கொண்டிருந்தான்… அவனது ஊடலைப் போக்க எண்ணிய மாதவி, தன்னைப் பலவாறு ஒப்பனை செய்துகொண்டாள்…. இந்த ஒப்பனைகளைப் படித்தவுடன் எனக்கு மூச்சே நின்றுவிட்டது….!


“ பத்துத் துவரினும் ஐந்து
விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும்
 ஊறின நன்னீர் உரைத்த நெய்வாசம்
 நாறிருங் கூந்தல் நலம்பெற
ஆட்டிப்
 புகையிற் புலர்த்திய பூமென்
கூந்தலை….”
 இப்படி இரண்டு பக்கத்திற்கு
நீள்கிறது ஒப்பனைப் பட்டியல்…! கண்ணகிக்கு இந்த ஒப்பனை தெரியாமல் போய்விட்டது பாருங்கள்….?!


அகிற்புகையூட்டி ஈரம் போக்கிய
கூந்தலை; வகையாக வகுத்து, வகைதோறும் கஸ்தூரிக் குழம்பு ஊட்டினாள்..( தடவினாள் )… அழகிய
சிவந்த சிறிய அடிகளில் செம்பஞ்சுக் குழம்பைத் தடவினாள்… நலத்தகு மெல்லிய விரல்களில்
நல்லணி ( மெட்டி போன்றது ) அணிந்தாள்…. கால்களில் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை,
அரியகம் ( கொலுசு, சிலம்பு, தண்டை போன்றவை ) என்னும் அணிகளைப் பொருத்தமாக அணிந்தாள்….
குரங்குசெறி என்னும் அணிகளைத் துடைகளில் அணிந்தாள்..( ஒரு இடத்தைக் கூட விடவில்லை…! )


முப்பத்தியிரண்டு பெரிய
முத்துக்கோவைகள் கோர்த்து செய்த விரிசிகை என்னும் அணியுடன் கூடிய மேகலையை, அழகான இடையில்
உடுத்திக் கொண்டாள்… முத்துவளையைத் தோளுக்கு அணிந்தாள்… மாணிக்கமும், வைரமும் பதிக்கப்பட்ட
கடகமும் ( கையணி ), பொன் வளையலும், நவமணிகள் பதித்த வளையல்களும்,

“ அரிமயிர் முன்கைக் கமைவுற
அணிந்து…” அவளுடைய கையில் பூனைமுடி இருந்தது என்று சொல்கிறார்…( வேக்ஸிங் எல்லாம் அவர்களுக்குத்
தெரிந்திருக்கவில்லை..! )

கைவிரல்களில் மாணிக்கம் பதித்த மோதிரம் அணிந்தாள்… வீரச்சங்கிலியும் பொற்சரடும், முத்தாரமும் கழுத்திலே அணிந்து கொண்டாள்…. நீல வைரத்தால் கட்டப்பட்ட குதம்பை ( வைரத்தோடு ) என்னும் அணியைக் காதில் அணிந்து கொண்டாள்…. தொய்யகம் என்கிற தலையணியைக் கரிய கூந்தல் அழகு பெறுமாறு அணிந்து
கொண்டாள்….

இத்தகைய பேரழகுடன் வந்த மாதவி, கோவலனுக்கு இன்பத்துப்பால் பாடமெடுத்தாள்…!


“ கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
 பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தாள்….”
 ( முடியலைடா சாமி…. ! )

தொடரும்…..                                                                         
 
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில்
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்—இவையிரண்டும் சமண நூல்கள்… மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி—இவை
மூன்றும் பெளத்த நூல்கள்… இதில் வளையாபதியையும், குண்டலகேசியையும் இதுவரை கண்டுபிடிக்க
முடியவில்லை… மீதி மூன்று நூல்களையும்; பனையோலைச் சுவடியில் இருந்தவற்றைத் தொகுத்து,
இப்போதிருக்கின்ற நூல்வடிவத்தில் அச்சிட்ட பெருமை தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரையேச்
சாரும்.

சிலப்பதிகாரத்தில் சமணசமயக்
கொள்கைகள், அடிநாதமாய் காப்பியத்தோடு ஒட்டி வருகின்றன…

சோழமன்னனும், மாதவியும்,பாண்டியமன்னனும் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இளங்கோவடிகள் சுட்டிக்காட்டவில்லை…கோவலனும், கண்ணகியும் சமணசமயத்தைச் சார்ந்தவர்கள் என்பது பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது…

 மாதவி :
 மாதவி என்கிற பெயருக்கு,குருக்கத்தி கொடி ( ஒருவகை மலர் ) என்று பொருள்… மாதவிப்பந்தல் என்கிற சொல்லை கோதை நாச்சியார், நாச்சியார் திருமொழியில் கையாண்டிருக்கிறாள்…

 தங்களின் பெண் குழந்தைகளுக்கு“ மாதவி ” என்று பெயரிட்டு அழகு பார்த்தது நேற்றைய தமிழ்ச்சமூகம்.. மாதவி என்கிற பெயர்கொண்ட பெண்கள் என் தலைமுறையோடு நின்றுவிட்டதாகவே நினைக்கிறேன்.. என்மகன் படித்த பள்ளியில், பதினைந்து வருடங்களில்; “ மாதவி “ என்று எந்தப் பெண்குழந்தையையும் நான் சந்திக்கவேயில்லை…“ மாதவி “ என்கிற பெண்ணுக்குத் தமிழ் இலக்கியத்தில் மிகப்பெரிய பங்குண்டு என்பதே, இன்றைய இளைய சமூகத்தினருக்குத் தெரியாது.

 தவிர, திரைப்படங்களிலும் மாதவியைப் பற்றிய தவறான கண்ணோட்டங்கள் பரப்பப்பட்டு வந்திருக்கின்றன… குறிப்பாக பூம்புகார்( கதை, வசனம்… மு. கருணாநிதி ) திரைப்படத்தில்; மாதவியின் பாத்திரப்படைப்பு தவறான புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு… “ காவிரிப் பெண்ணே நீ வாழ்க…. “ பாடலில், “ ஆயிரம் வழிகளில் ஆடவர்
செல்வார்… அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்…” என்று ஒரு வரி வரும்… சிலப்பதிகாரத்தில்,
இப்படியொரு பொருள் வருகின்ற வரியை இளங்கோவடிகள் எழுதவேயில்லை… கோவலனும், மாதவியும்
பாடிய கானல்வரிப் பாட்டின் உட்கருத்தை, ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் போனதால்தான்;
அவர்களுக்கிடையே பிரிவு வந்தது… கானல்வரிப் பாட்டைப் பற்றி நான் விளக்கமாக எழுதப்போகிறேன்…
அப்போது உங்களுக்குப் புரியும்…

மாதவி கணிகையர் குலத்தில் பிறந்திருப்பினும். அவளைத் தேவமகளான
ஊர்வசியின் மரபிலே தோன்றியவள் என்கிறார் இளங்கோவடிகள்…
 ” மலைப்பருஞ் சிறப்பின்
வானவர் மகளிர்
 சிறப்பிற் குன்றாச் செய்கையோடு
பொருந்திய
 பிறப்பிற் குன்றாப் பெருந்தோள்
மடந்தை…”
 சிலப்பதிகாரம்… புகார்க் காண்டம்…
 இந்த வரிகளே, மாதவியின்
பாத்திரப் படைப்பின் உன்னதத்தை நமக்கு உணர்த்துகின்றன…

 அவளுடைய ஐந்தாம் வயதில் ஆடலும், பாடலும் கற்க ஆரம்பித்தாள்.. ஏழு ஆண்டுகள் நன்கு பயின்ற பின்னர், பன்னிரெண்டாம் வயதில் சோழமன்னனின் அரசவையில் அவளுடைய நடன அரங்கேற்றம் நடைபெற்றது…

 ஆடலைக் கண்டு, மகிழ்ந்த சோழவேந்தன், “ திருமாவளவன் “ என்றொரு குறிப்பு வருகிறது… கரிகால்சோழனாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு…
 மாதவியின் நடனத்தைக் கண்டு,வியந்து அவளுக்குத் ”  தலைக்கோல் ” ( நடன மாமணி ) என்னும் பட்டத்தையும், ஆயிரத்தெட்டுக்கழஞ்சு பொன்மணிகள் பதிக்கப்பெற்ற பச்சைமாலையையும் பரிசாகக் கொடுத்தான்..

 மாதவியின் தாய் சித்திராபதி, “ இந்த மாலையை விலை கொடுத்து வாங்குவோர், மாதவிக்கு மணமகனாக ஆவார்…” என்று கூறி, ஒரு கூனியின் கையில் அந்த மாலையைக் கொடுத்து, நகரத்து வாலிபர் உலாவரும் பெருந்தெருவில், அம்மாலையை விலைக்கு விற்பவள் போல நிறுத்தினாள்…

 பரிசமாலையைக் கோவலன் விலைகொடுத்து வாங்கி, மாதவியின் மனையை அடைந்தான்… அவளது அழகிலே மயங்கி, தன் மனைவியையும்,வீட்டையும் மறந்தான்..
 “ மணமனை புக்கு மாதவி தன்னொடு
 அணைவுறு மயங்கி வைகலின் அயர்ந்தன
 விடுத லறியா விருப்பினன் ஆயினன்
 வடுநீங்கு சிறப்பின் தன் மனையகம் மறந்தென்… “
 சிலப்பதிகாரம்… புகார்க் காண்டம்….  :) :)

 தொடரும்….
 
சிலப்பதிகார மாதவியைப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன்... மாதவி பிறந்த குலமான கணிகையர்குலம் பற்றி அறிய, சங்கநூல்கள் சிலவற்றை நான் படிக்க நேர்ந்தது... சிலப்பதிகாரம் தவிர, தொகை நூல்களைப் படித்துக் குறிப்புகள் எடுத்தேன்... படிக்க, படிக்க ஒரே அதிர்ச்சிதான்... இந்தக் கட்டுரையை எழுதும்போது, சொல்லொண்ணாத துக்கம் என்னை ஆட்கொண்டது.. பேதைப்பெண்கள் என்று சொல்லியே, நம்மை ஏமாற்றிப் பிழைத்திருக்கிறது பெரும்பான்மை ஆண்சமூகம்... சங்ககாலத்தில், பெண் தனி மனித சுதந்தரமில்லாமல், அடிமையாகத்தானிருந்திருக்கிறாள்.. இதில் மாற்றுக் கருத்தேயில்லை...
சங்ககாலத்தில் கோவில்களோ அல்லது அதனுடன் இணைந்த தேவரடியார்களோ இல்லை.. கி.பி. நான்காம் நூற்றாண்டில், தமிழகத்தைக் கைப்பற்றி, ஆட்சிபுரிந்த பல்லவர்கள் முதலில் சமணசமயம் சார்ந்தவர்களாக இருந்தார்கள்... மகேந்திரவர்மபல்லவன், திருநாவுக்கரசரால் சைவசமயத்தைத் தழுவப்பெற்றான்... அதன்பிறகுதான், பல்லவர்கள் தமிழகத்தில் கற்றளிகளைக் கட்ட ஆரம்பித்தனர்... பிறகு வந்த சோழர்கள் காலத்தில்தான், தேவரடியார்கள் கோவில்களுடன் இணைந்துவிட்ட அமைப்பாக மாறினர்..
கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான கால இடைவெளியைச் சங்ககாலம் எனலாம்...
அரசர்கள் மற்றும் ஆண்டைகளின் ( குறுநிலப் பிரபுக்கள் )  பாலியல் வக்கிரங்கள் மற்றும் அக்கிரமங்கள் குறித்துச் சங்கஇலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன... “ ஒருவனுக்கு ஒருத்தி “ என்பது திராவிடக் கலாச்சாரம் என்று முழங்குவதெல்லாம் சுத்த பொய்... “ ஒருத்திக்கு ஒருவன் “ என்பதுதான் சரியான விளக்கம்.. காரணம்.. ஆண் பலதாரமுடையவனாக இருந்திருக்கிறான்... ஆசைநாயகியரின் எண்ணிக்கைக் குறித்துக் கலித்தொகை கூறும் செய்தி, அதிர்ச்சித் தகவலாக உள்ளது..
“ ஓர் ஊர தொக்கு இருந்த நின் பெண்டிர்...”... கலித்தொகை (68)... ஒரு மருதநிலத் தலைவனுக்கு, ஒரு ஊர் முழுக்கவே அவனது காதற் பரத்தையர்கள்தானாம்... !
அரசர்களும், ஆண்டைகளும் பல மனைவியருடன் வாழ்ந்துள்ளனர்... மனைவியர் மட்டுமல்லாது இற்பரத்தையர், காதற் பரத்தையர், கணிகையர் என ஆசைநாயகியர் பலர் இருந்துள்ளனர்... புகார் நகரத்தில், அரசனின் அரண்மனை அமைந்திருந்த பட்டினப்பாக்கத்தில்; அரண்மனையை அடுத்து சாந்திக்கூத்தர், காமக்கிழத்தியர், பதியிலாளர், பரிசம் கொள்வார் என்ற பெயரில் பரத்தையரின் இல்லங்கள் அமைந்திருந்தன...
“காவற் கணிகையர் ஆடற்கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவற்சிலதியர்...”
சிலப்பதிகாரம்.. புகார்க் காண்டம்...
சுட்ட ஓடுகளால் வேயாது, பொற்தகடுகளால் வேயப்பட்ட காவல்மிக்க மனைகளில் அரங்கக்கூத்தியர் வாழ்ந்தனர்... கூத்துகளை நிகழ்த்தி, மன்னர்களை மகிழ்விப்பதே அவர்கள் வேலை..
“ சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடியரசு ஒடுங்கும் கடிமனை வாழ்க்கை...”
சிலப்பதிகாரம்.
அரசர்களின் காதற்கணிகையரான இம்மங்கையர்க்கு, மூடுவண்டியும், பல்லக்கும், மணிகள் பதித்த கால்களையுடைய கட்டிலும், சாமரையாகிய கவரியும், பொன்னாலான வெற்றிலைப்பெட்டியும், கூரியமுனை பொருந்திய வாளும் பரிசிலாகக் கொடுத்தனர்... அரசருடன் சேர்ந்து அக்கணிகையர் விளையாடி மகிழ்வதற்கு; விளையாட்டுப் பொழிலும் அமைத்துக் கொடுத்தனர்...
“ வையமும் சிவிகையும் மணிக்கால் அமளியும்
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும்
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும்
கூர்நுனை வாளும் கோமகன் கொடுப்பப்
பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கை
பொற்றொடி மடந்தையர்....”
சிலப்பதிகாரம்.
பகைவர் மனையோராய்ப் பிடித்து வரப்பட்ட மகளிர், “ கொண்டி மகளிர் “ என்று அழைக்கப்பட்டனர்... இவர்களையல்லாது, பருவம் எய்தாச் சிறுமியருடனும் பாலியல் ரீதியான வல்லுறவு கொண்டுள்ளனர்... படிக்கப் படிக்க கொடுமையாக இருக்கிறது... விதவிதமாகப் பெண்களை அனுபவித்திருக்கிறார்கள்... அடியோடு பெண்சமூகத்தைச் சிதைத்திருக்கிறார்கள்...
சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள்; புனைந்துரையாக, மிகையான கூற்றாக இருக்குமோ என்று நான் பலசமயம் கருதியதுண்டு... ஆனால் அரசர்களின் அந்தப்புரங்கள் குறித்து, வரலாற்று ஆவணங்களில் பதிவாகியுள்ள செய்திகள் சங்க இலக்கியங்களின் உண்மைத்தன்மையை உணர்த்துகின்றன...
மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் இறந்தபொழுது, அவரது மனைவியர் மற்றும் காமக்கிழத்தியர் இருநூறுபேர் உடன்கட்டை ஏறினர்... இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதி இறந்தபோது, நாற்பத்தைந்து பேர் உடன்கட்டை ஏறினர்... தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆசைநாயகியர்க்கு திருவையாற்றில், மங்கள விலாசம் “ என்ற பெயரில் மாளிகை அமைக்கப்பட்டது...
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அன்றைய காலக்கட்டத்தில் மிக அதிகமாக இருந்திருக்கிறது.. சுதந்தர இந்தியாவில் பிறந்தது நம்முடைய கொடுப்பினை என்றுதான் சொல்லவேண்டும்... :) :)
தொடரும்...
 
 

கும்பகர்ணன் தொடர்ந்து, இராவணனுக்கு அறிவுறுத்தினான்….

“ சான்றோர்கள் செய்யும் செயலை நீ செய்யவில்லை… குலத்திற்குச் சிறுமை செய்தாய்… போகட்டும்… மட்டவிழ் மலர்க்குழலினாள் சீதையை, இத்தனை விபரீத நிகழ்ச்சிகள் விளைந்தபிறகும் விட்டுவிடுவோமேயாகில்; கேவலமாகக் கருதப்படுபவர் ஆவோம்… அந்த மானிடர் நம்மை வெற்றிகொள்ள, அதன் முடிவாக நாம் இறப்போமேயானால், அதுவும் நன்றே….”

 

” தூதன் மூலம் நமது நிலைமை யாவும் அறிந்து, அவர்கள் போருக்கு ஆயத்தமான நிலையில் நாம் பின்வாங்குவது வீரமாகாது….”

தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற கூற்றை மெய்ப்பித்தவன் கும்பகர்ணன்….

 

“ மரன்படர் வனத்தொருவனே சிலை வலத்தால்

கரன்படை படுத்தவனை வென்று களைகட்டான்….”

“ மரங்களடர்ந்த காட்டில், இராமபிரான் தனது கோதண்டம் என்னும் வில்லின் வன்மையால்; கரன் முதலான அசுரர்களை அழித்து வெற்றி கொண்டான்…. இனியடுத்து நடக்கப்போகிற செயல்….? அந்த மானிடர்கள் கையால் நமது வன்மை ஒழிதலேயாகும்….”

அரக்கர்குலமே அழியப்போகிறது என்பதை கும்பகர்ணன் முன்னரே யூகித்துவிட்டான்… முக்காலமும் உணரவல்ல தீர்க்கதரிசி…!

 

” மானிடர் வென்றிடுவாரேயானால், தேவர்களும் அவர்களோடு ஒன்று சேர்ந்து நம்மை எதிர்க்கத் துணிவர்… இருவர் பகைமையை நம்மால் சமாளிக்க இயலாது…”

“ ஊறுபடை யூறுவதன் முன்னமொரு நாளே

ஏறுகட லேறிநரா வாநரரை யெல்லாம்

வேறுபெய ராதவகை வேரொடு மடங்க

நூறுவது வேகரும மென்பது நுவன்றான்….”

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப்படலம்..

“ மென்மேலும் எழும் சேனை பெருகி நிறைவதன் முன்னரே, ஒரு குறிப்பிட்ட நாளில் கடலைத்தாண்டி; மனிதர்களையும், அவரொடு கூடிவரும் தேவர்கள் என்ற எல்லோரையும், பிற இடங்கட்குச் செல்லாதபடி மடக்கி, வேரொடும் ஒருசேர அழிப்பதே நாம் புரியத்தக்கக் காரியம்….” என்று சொன்னான்….

 

இதைக்கேட்ட இலங்கேஸ்வரன், ” இளையோய்… நீ நன்கு சொல்லினை… நானும் இவ்வாறே கருதினேன்… இனியொன்றும் ஆய்தல் பழுது… பகைவர் அனைவரையும் கொன்றே திரும்புவோம்… வீணைக்கொடியுடைய நம்முடைய சேனைகள் எல்லாம் இப்பொழுதே எழுக….” என்று பணித்தான்….

 

இராவணன் மொழிந்த காலையில், தனயன் இந்திரஜித், தந்தையைப் பார்த்து, “ அரசே… சிறுமானிடரிடம் நீ போய் போர் செய்வதா…? எம்மனோரைப் போன்ற வீரர் பலரிருக்க… நீ யுத்தம் செய்யக் கிளம்புகிறேன் என்கிறாய்… எம் வீரம் மிகவும் நன்றாக இருக்கிறது…?! “ என்று கூறி நகைத்தான்….

இராவணன் மந்திராலோசனையில், விபீஷணனுக்குப் பிறகே, இந்திரஜித் பேசியதாக வான்மீகத்தில் வருகிறது…. கம்பன் முன்கூட்டியே இந்த உரையாடலை அமைத்திருக்கிறான்….

 

“ ஈசனிடமும், பிரமனிடமும் வரங்கள் பலபெற்று, கொடிய ஆயுதங்களைத் தாங்கிப் பலர் இங்கே ஆயத்தமாக நிற்கின்றனர்… ( இந்திரஜித், இந்திரனிடம் பிரம்மாஸ்திரத்தை வரமாகப் பெற்றவன்..) தந்தையைப் போருக்கு அனுப்பிவிட்டு, பிறர் பழிக்குமாறு நானும் உயிர் தரிக்க வேண்டுமா…?...”

 

” மூன்று உலகம் முழுவதும் சினந்து எழுந்த போதும், வெற்றி உனதாக விளையாது ஒழியின், என்னைப் பெற்றும்; பெறாதவனாகக் கருதப்படுவாய்… வானரப்படையை ஒழித்து, இராம இலக்குவரின் சிரங்களை வீழ்த்தி, மலைச் சிகரங்களைப்போலக் கொண்டு வருவதை நீ காண்பாயாக…. இதனால் சீதை மிகுந்த துயரத்தை அடையப் போவதையும் நீ காணுதி….” என்று சூளுரைத்தான்…

 

“ நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்றன்

வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று

வீடாடி வீற்றிருத்தல் வினையெற்ற தென்செய்வதோ?

ஊடாடு பனிவாடாய் ! உரைத்தீராய் எனதுடலே….”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

 

Tuesday, September 1, 2015


இராமபிரான் கடற்கரையில் நின்று, இனி ஆக வேண்டிய காரியங்களை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில்; இலங்கையில் அநுமன் எரியூட்டிச் சென்றபின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்

 

அநுமனால் அழிவுண்ட இலங்கையைத் தேவதச்சன் மயனைக் கொண்டு, இராவணன் புதுப்பிக்கச் செய்தான்

அரசவையில் அமர்ந்து, ” என் மாட்சி அனைத்தும் ஓர் குரங்கினால் மறுகி மாண்டதுஇப்பொன்னகர் அழிந்து; என் மகன், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் இறந்துபட்டனர்கிணற்றில் நீருக்குப்பதில் உதிரம் ஊறுகின்றது.. பொன்னகரில் இடப்பட்ட அழல்ஆறு இன்னமும் தணியவில்லைஅந்தக் குரங்கை அழித்தொழிக்க முடியவில்லையேஇனி நாம் செய்து முடிக்கக்கூடிய வினை யாதுள்ளது….? “ என்று வினவினான்.

 

சேனைக்காவலனான பிரகதத்தன் எழுந்து வணங்கி, “ அரசேஉன்னிடம் சொல்லவேண்டிய பொருள் ஒன்று இருக்கின்றது.. ஒருங்கு கேள் எனா…” என்றான்

வேந்தேமனிதர்க்கு வஞ்சனை செய்து, ஒளிபொருந்திய நெற்றியையும், செம்பஞ்சு போன்ற மென்பாதங்களையுடைய, மயில் போன்ற சாயலுடையவளான சீதையைக் கைப்பற்றுதல், “ வாணுதற் பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல் வீரர் தொழிலன்று….” என்று நான் முன்னரே உமக்கு அறிவித்தேன்அந்த வார்த்தையை நீ உணரவேயில்லைகரன் முதலான அரக்கரை அழித்தவரும், உன் தங்கை மூக்கரிந்த வீரருமான இராமஇலக்குவரைக் கொல்லாமல் விட்டிருக்கின்ற நீஇப்போது மனம் தளர்கின்றாய் போலும்..”

 

வண்டுகள் விரும்பியமர்கின்ற மாலையைத் தரித்தவனேமூன்று உலகும் உற்ற நீஒரு குரங்கிற்காக நடந்ததையெண்ணி வருத்தப்படலாமாஅந்தக் குரங்கை ஏவியவர்களின் உயிரைக் குடித்து, நம்மனத்துயர் ஆற்றுவோம்…” என்று இராவணன் மனதில் படும்படி சொன்னான்

 

பிரகதத்தனைத் தொடர்ந்து, உபதலைவர்களான மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு, யக்ஞஹா, தூமிராட்சன் போன்றோரும் தம் கருத்தைக் கூறினர்இதன்பிறகு, இராவணனின் தம்பியான கும்பகர்ணன் பேசத் தொடங்கினான்

 

நான் உன் தம்பி.. உன் நன்மையையே கருதுவேன் என்ற திடமான எண்ணம் உனக்கு என்பால் இருக்குமானால், நான் சில அறிவுரைகளைக் கூறுகிறேன்….”

 

பிரமதேவனை ஆதியாகக் கொண்ட குலத்திலே பிறந்து, தன்னிகரற்றவனாக உள்ளாய்ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்… “ வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறைவைத்த செயனன்றோ…” உன் பெருமையைக் குலைத்தது….? நெருப்பைத் தீண்டினால், அது எரித்துவிடுமே என்று எண்ணாது மயங்கினாய்ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதை நீ அறியவில்லையா…. இப்பழியைக் காட்டிலும் வேறுமோர் பழியும் உண்டா…? இத்தனை மனைவியர் உன் ஒருபார்வைக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது, பிறன்மனை நோக்குதல் தகுமோ…? என்று தவமகளைச் சிறை வைத்தாயோ; அன்றே அரக்கர் புகழ் அழியத் தொடங்கிவிட்டது….”

 

ஆய்மறை துறந்து சிறை வைத்தாய்…” என்கிறான் கம்பன்நான்கு வேதங்களையும் கற்றவன் இலங்கேஸ்வரன்அப்படிப்பட்ட வேதநெறியைக் கைவிட்டு, திருமகளாம் பிராட்டியைச் சிறையெடுத்ததன் மூலம், தான் பிறந்த குலத்துக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டான்

 

எம்பிராட்டியை, இராவணன் மனச்சிறையில் வைத்ததோடு மட்டுமல்லாமல், பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்துவந்து அசோகவனத்திலும் சிறைவைத்தான்..

 

இராவணன் இதயமாம் சிறையிற் சுரந்த காதல்; இராமபிரானின் கோதண்டத்திலிருந்து புறப்படும் கணையாக, அவன் ஆவி துறக்கக் காரணமாயிருந்ததுஅதைக் காதலென்று சொல்வதே காப்பியப் பிழை…!

ஒருத்தன் மனையிற்றாழ் பொன்னடி தொழத் தொழப் பேணுவது காமம்…” என்கிறான் கம்பன்…!

 

நெஞ்சூ டுருவ வேவுண்டு

நிலையும் தளர்ந்து நைவேனை

அஞ்சே லென்னான் அவனொருவன்

அவன்மார் வணிந்த வனமாலை

வஞ்சி யாதே தருமாகில்

மார்பில் கொணர்ந்து புரட்டீரே….”

கோதை நாச்சியார்நாச்சியார் திருமொழி….