Thursday, January 28, 2016


விபீஷணன் இலங்கேஸ்வரனுக்குக் கூறிய அறிவுரைகள், யுத்த காண்டத்தில் கிட்டத்தட்ட முப்பது பாடல்களில் வருகின்றன… இராவணனுக்கு இளவலாய்ப் பிறந்திருந்தாலும் மிகச்சிறந்த விவேகி என்கிறான் கம்பன்... “ மூதுணர்வின் மிக்கான் அடல் வீடணன்...”

 

மகாபாரதத்தில் கர்ணன் தன் ஆருயிர் நண்பன் துரியோதனனுக்காக, “ செஞ்சோற்றுக்கடன் கழித்தது “ போன்றதொரு செயலை விபீஷணன் செய்யவில்லை... தந்தைபோல் கொண்டாடிய தமையனுக்காக போர்முனைக்குச் செல்லவில்லை... போர் தொடங்குவதற்கு முன்னரே இராமனிடம் சரணாகதி அடைந்துவிட்டான்... ஆனால் கும்பகர்ணன் கடைசிவரை இராவணன் பக்கம் நின்று, போரிட்டு மடிந்தான்... கும்பகர்ணன் பாத்திரப்படைப்போடு ஒப்பிடும்போது, விபீஷணன் சற்று மாற்றுக் குறைவுதான்.

 

இலங்கைக்கு மன்னனாக வேண்டும் என்றொரு மறைமுக ஆசை அவன் மனதில் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது... கம்பன் அதை வெளிப்படையாக எழுதவில்லை. தமையன் செய்தது தவறென்று நினைத்தவன்; தந்தைபோல் நினைத்த தமையனுக்கு, தந்தைக்கு மகனாற்றும் கடமையைச் செய்யவில்லை… ” துஷ்டனைக் கண்டால் தூர விலகு “ என்று எண்ணியே இராவணனை விட்டு விலகினான் விபீஷணன் என்று நாம் வாதம் செய்யலாம்… நாணயத்திற்கு மறுபக்கமும் உள்ளது அல்லவா….?

 

விபீஷணின் அறிவுரை தொடர்கிறது....

“ எண்பொருட்டு ஒன்றிநின்று எவரும் எண்ணினால்

விண்பொருட்டு ஒன்றிய உயர்வு வீழ்ச்சியும்

பெண்பொருட்டு அன்றியும் பிறிது உண்டாமெனின்

மண்பொருட்டு அன்றியும் வரவும் அல்லதோ… “

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப்படலம்….

 

மனத்தை ஒருமைப்படுத்தி எவரும் யோசித்தால், ஆகாயத்தை அளாவுமாறு உயர்ந்த தலைமைப்பதவியின் வீழ்ச்சியும் பெண்மேல் வைத்த காதலினால்தான்… அன்றி வேறுவகையாக நிகழுமென்றால், அது மண்மேல் வைத்த ஆசைதான்… இவையல்லாமல் ஒருவனுக்கு அழிவு நிகழ்வதுமுண்டோ….?!

 

வாலிவதையின்போது, இராமபிரானின் கூற்றாக, கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பன் கூறியதை நினைவுபடுத்த விழைகிறேன்…

“ மங்கையர் பொருட்டால் எய்து மாந்தர்க்கு மரணமென்றால்

சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால்…”

 

“ மீனுடை நெடுகடல் இலங்கைவேந்தன் என்பான், தானாற்றிய அருந்தவம் தளர்ந்து, சாய்வது ஒரு மானிடப் பெண்ணினால் என்னும் வாய்மொழி இன்று தீர்ந்ததோ…?! “

 

“ பிரமதேவனிடம் மனிதரை வெல்வதற்கான வரம் கேளாது விடுத்தனை… இப்போது அவர்களை எப்படி வெற்றி கொள்ளப் போகிறாய்…? கயிலையங்கிரியைப் பெயர்த்தெடுத்த முன்னாளிலே; நந்திதேவர், ” கூலம் வான் குரங்கினால் கோள் குறுகும்..”..வாலையுடைய பெரிய குரங்கினால் உனக்குக் கெடுதி நேரும் என்று விடுத்த சாபத்தின் விளைவை, வாலி உன்னை வென்றது கொண்டு தெரிந்தோம்….”

 

“ வேதவதி என்ற பிராமணப்பெண்ணை நீ தீண்டியதால் அக்னிபிரவேசம் செய்த அவள், “யான் உனக்கு நோய்… மேவு சிந்தையின் மாதரை மெய்த்தொடில்

தேவு பொன்றலை சிந்துக நீ…”  ( பொன்றலை: பொன்னாலான மணிமகுடத்தை அணிந்த தலை..) என்று சாபமிட்டாளே… மறந்து விட்டாயா…? அவள்தான் இந்தப் பிறவியில் சீதையாகத் தோன்றியிருக்கிறாள்…. முன்னாளில் அமிழ்திற் பிறந்த திருமகளும் இவளே… “

 

“ எமது தலைவனே… கங்கையை பூமிக்கண் தருவித்த பகீரதன் வழித்தோன்றலான, தயரதனின் புதல்வர்களே இப்பொழுது உன் பகைவர்களாக வந்துள்ளவர்கள்…. நாம் புரிந்துள்ள வினையின் விளைவாக, மானிட வடிவமேற்று வந்திருக்கிறார்கள்….  தெய்வம் மனுஷ்ய ரூபேண….! “

 

” வலந்தரும்; மற்றுந்தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும்;

நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்….”
திருமங்கையாழ்வார்….. பெரிய திருமொழி.... :) :)