Wednesday, February 24, 2016


விபீஷணன் உரைத்ததைக் கேட்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டான்… கண்களில் தீப்பொறி பறப்ப, “ தீயெழ நலந்திகழ் ஆரமும் மார்பும் குலுங்க..” வார்த்தைகளை மொழியலானான்…

 

“ ஐயனே… நான் விரும்பக்கூடிய மொழிகளைச் சொல்லுவதாகச் சொன்னாய்.. ஆனால்…பித்தர் கூறும் சொற்களையே பகர்ந்தாய்.. என் பெரு ஆற்றலை இகழத்தக்க மானிடர் வெல்வர் என்று நீ சொன்னது அவர்களிடம் உள்ள பயத்தினாலா… அல்லது அவர்களிடம் உனக்குத் தோன்றிய அன்பு காரணமாகவா…. என்ன காரணம்…? “

 

“ மானிடப் பசுக்களை வெல்வதற்கான வரம் நான் கேட்கப் பெறவில்லை என்று கூறினாய்… என்னிடம் குறை கற்பித்தாய்… எட்டுத் திக்குகளையும் செருக்கோடு தாக்குகின்ற யானைகளை வென்று, ஈசனின் கயிலாய மலையைப் பெயர்க்க நான் முன்பு வரம் பெற்றதுண்டோ….? “

 

“ சிந்திக்காமல் பயனற்ற சொற்களை மொழிந்தாய்… தேவர்களின் கொடிய போர்க்கருவிகள், போர்க்களத்தில் என்னை என்ன செய்துவிட்டன….? என்னைப் பற்றியது ஒருபுறமிருக்கட்டும்…. ஒரு தாய் வயிற்றில் என்னுடன் சகோதரனாகப் பிறந்த உன்னைக் காட்டிலும், அந்த மனிதர்கள் வலிமையுள்ளவரோ….? “

 

“ தேவர்கள் என்னிடம் பலமுறை தோற்றும், என்னை வெற்றி கொள்ளும் வன்மை ஒரு தடவையேனும் எய்தினாரில்லை…. விண்ணுலகத்தையும் பெயர்க்கும் வன்மை வாய்ந்தவன் யான்…. என்னையும், என் சுற்றத்தாரையும் கொல்லக்கூடிய வலிமையுள்ளவரும் இருக்கின்றனரா….? “

 

“ நந்தி கொடுத்த சாபத்தினால் நம்மை குரங்கு அழிக்கும் என்பாயாகில், நம்மிடம் வந்து சேர்ந்த சாபங்கள் எத்தனையோ… அவைகள் நமக்கு என்ன வன்மையைச் செய்துவிட்டன….? ஈசனிடம் வாலி பெற்றிருந்த வரத்தின் பெருமையை நான் அறியவில்லை…. யான் மனம் சோர்ந்திருக்க, என் வலிமையின் பாதி அவன்பால் சென்றடைந்துவிட்டது…. அதனாலேயே வாலியிடம் நான் தோல்வியுற்றேன்… மற்றும் வேறாக உள்ள குரங்குகள் எல்லாம் என்னை வெற்றி கொள்ளும் என்று எவ்வறு சொல்கிறாய்….? “

 

“ நீலகண்டனும், ஆழிப்படையேந்திய திருமாலும் நேர்ப்பட எதிராக நின்று எதிர்த்தாலும், அவர்களின் வலிமையிற் பாதி     அவ்வாலியைச் சென்றடையும்.. அத்தன்மையை நன்கு ஆராய்ந்து, அந்த மனிதனும் ( இராமனும் ) வாலிக்கு நேராகச் சென்று சண்டையிடுவதைத் தவிர்த்து, மறைவாக நின்று அம்பெய்து கொன்றான்…. “

 

இந்தச் செய்தி வான்மீகத்தில் குறிப்பிடப்படவில்லை…. இராமன் ஏன் வாலியை மறைந்திருந்து கொன்றான் என்பது பற்றி கம்பன் ஆராய்ந்திருக்க வேண்டும்… வாலி ஈசனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டுதான் இராமன் அவ்வாறு மறைந்திருந்து அம்பெய்தான் என்கிறான் கம்பன்….

 

“ முன்னரே பழுதுபட்டிருந்த ஈசனின் வில்லை முறித்து, உளுத்துப்போன மராமரத்துள் அம்பைச் செலுத்தி, கூனியின் வஞ்சனையால் அரசினைக் கைவிட்டு, மரங்களடர்ந்த வனம் புகுந்து,     நான் செய்த சூழ்ச்சியால் மனைவியை இழந்து, இன்னுயிர் சுமக்கும் அந்த மனிதனின் ஆற்றலை நீ அல்லாமல், பெருமையாகக் கருதுபவர் வேறு யார் இருக்கின்றனர்….?! “

 

இராவணன் இராமபிரானை இகழ்கிறான்… பிறன்பாற் கண்ட குறைவுகளைக் கூறி இகழ்வதைத் தமிழ் இலக்கணத்தில் இளிவரல் ( வழக்குத் தமிழில் நக்கலடிப்பது ! ) என்பார்கள்…. ஒன்றுக்கும் உதவாத பணிப்பெண் ( கூனி ) சூழ்ச்சியைக் கூட வெல்ல முடியாதவன் இராமன் என்று இகழ்கிறான்…

 

இத்தனையும் பேசி முடித்துவிட்டு, விபீஷணனைப் பார்த்து, ” நீ ஆராய வேண்டும்… அறிவில்லாதவனா என்ன…? “ என்றான்…. அங்கு கூடியிருந்த அரக்கர்களை நோக்கி, “ நாம் போருக்குப் புறப்படுவோம்… என்னுடன் எழுந்து வருக… “ என்று கூறினான்….

 

அப்போது விபீஷணன், “ இன்னும் ஓரு நன்மை பயக்கும் செய்தி ஒன்று நான் கூறக் கேட்பாயாக….” என்று சொன்னான்….

 

“ தன்னின் முன்னிய பொருளிலா வொருதனித் தலைவன்

அன்ன மானிட னாகிவந் தவதரித் தமைந்தான்

சொன்ன நம்பொருட் டும்பர்தஞ் சூழ்ச்சியின் துணிவால்

இன்னம் நேர்குதி போலுமென் றடிதொழு திரந்தான்…. “

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப் படலம்….

 

தன்னிலும் முற்பட்ட பொருள் ஒன்றும் இருக்கப் பெறாத, ஒப்பற்ற தனித்தலைவனான பரம்பொருள், தேவர்களின் ஆலோசனையின் முடிவால்; நம்மைக் கொல்வதற்காகவே மானிடனாக வந்து பிறந்துள்ளான்… இன்னமும் அவனுடன் எதிர்த்து நிற்பாய் போலும்….” என்று இராவணனின் அடிகளை வணங்கிக் கெஞ்சினான் விபீஷணன்…..

 

“ பிரான் பெருநிலங் கீண்டவன் பின்னும்

விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்

மராமர மெய்த மாயவன் என்னுள்

இரானெனில் பின்னை யானொட்டு வேனோ….! “

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

Tuesday, February 23, 2016


தமிழ்க் காதலி…. ( 5 )

 

நுட்பமான அரசியலறிவும், அதனை அஞ்சாது கூறும் துணிவும் கொண்ட ஒளவை…அதியமான நெடுமான்அஞ்சி தவிர, அவன் மகன் பொகுட்டெழினிக்காகப் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் உள்ளன…. அதுதவிர, நாஞ்சில் வள்ளுவன் என்றொரு மன்னனைப் போற்றி ஒருபாடல் பாடியிருக்கிறாள்…. புறநானூற்றில் 33 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும்,     குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களுமாய் 59 பாடல்கள் சங்ககால ஒளவை தமிழுக்கு அளித்த கொடை….!

 

ஒளவையின் அகத்திணைப் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்..

தலைவனைப் பிரிந்த தலைவி, தன்னுடைய துயரமிகுதியைத் தோழிக்குச் சொல்வதாக ஒருபாடல்…

“ உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது

இருப்பின் எம் அளவைத்து அன்றே, வருத்தி

வான்தோய் வற்றே காமம்,

சான்றோர் அல்லர்; யாம் மரீஇ யோரே….”

குறுந்தொகை…. பாடல் 103….

உள்ளினுள்ளும் வேமே---மனதுள் நினைத்தது,  வான்தோய் வற்றே---வானமளவு வளர்ந்து,  யாம் மரீஇ யோரே---யாம் அன்புடன் தழுவியவர்.

தோழி…. நம் தலைவரை நினைந்தோமாயின், அவர் நம்மை நினைக்காமல் பிரிந்திருத்தலை எண்ணியதும்; நம் உள்ளம் வேவத் தொடங்கிவிடும்… அதற்காக அவரை நான் நினையாதிருப்போம் என்றாலோ, அதுவும் நம்முடைய ஆற்றலின் அளவிற்குட்பட்டு அமைவதன்று…. காமநோய் நம்மை வருத்தி, வானத்தைச் சென்று தோய்வதுபோல வளர்ந்து பெருகுகின்றது… யாம் அன்புடனே தழுவியவர் என்பதன்றி, அவர் எம்பால் அன்புடையவரன்று….!

 

அகநானூறு, நற்றிணைப் பாடல்கள் எல்லாம் மிக நீண்ட வரிகளையுடையது…. 15 வரிகளுக்கு மேற்பட்டதாய் அமைந்திருக்கிறது…. சிலவரிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் முழுப்பாடலின் பொருள் மாறுபடுகிறது…. ஆகவே, சிறிய பாடலான குறுந்தொகையிலிருந்தே, ஒளவையின் தமிழாளுமைக்கு மற்றுமொரு சான்று எடுத்துக் கொள்ளலாம்…..

 

அந்தக்காலத்தில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ( ஓடிப்போய் ) திருமணம் செய்வதற்கு உடன்போக்கு என்று சொல்வார்கள்….  அப்படிப் போவதைப் பெற்றோர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியந்தான்…! எத்தனைச் சுதந்தரமான சமூகம் பாருங்கள்….?!

 

தலைவனுடன் சென்றுவிடத் துணிந்தாள் தலைவி…. அதனைத் தோழி சொல்லக் கேட்டதும், தலைவன் பாலைவழியின் கொடுமையையும்,, தலைவியின் மென்மையையும் கருதி; அதற்கு உடன்பட மறுக்கிறான்…. அவனுக்குத் தோழி சொல்வது இது…

 

“ நீர்க்கால் யாத்த நிரைஇதழ்க்குவளை

கோடை ஒற்றினும் வாடாதாகும்

கவணை அன்ன பூட்டுப்பொருது அசாஅ

உமண்எருத்து ஒழுகைத் தோடுநிரைத் தன்ன

முளிசினை பிளக்கும் முன்புஇன் மையின்

யானை கைம்மடித்து உயவும்

கானமும் இனியாஅம், நும்மொடு வரினே… “

குறுந்தொகை…. பாடல்…388.

 

கவணை அன்ன பூட்டு---- கவண்கருவி போன்று தோல்பட்டையில் செய்யப்பட்ட நுகத்தடியில் பூட்டப்படும் எருது,

அசா---வருந்துதல்,  உமண்எருத்து ஒழுகை---உப்பு வணிகரின் எருதுகள் பூட்டிய வண்டிகள்,  தோட் நிரைத்தன்ன ---தொகுதியை வரிசையாக வைத்தது போல,  முளிசினை---உலர்ந்த மரக்கிளை,  கானம்---பாலை நிலங்கள்.

 

வரிசையான இதழ்களைக் கொண்டது குவளைமலர்.. அது நீரைத் தன்னடியிலேயே கட்டி வைத்திருக்கும் தன்மையுடையது… அதனால் கோடைக்காற்று வீசினாலும் வாடாதிருக்கும்…கவணைப் போன்ற பூட்டுப் பொருந்தியமையால் வருந்துகின்றன உப்பு வணிகரின் வண்டிகளில் பூட்டப்பெற்றிருக்கும் எருதுகள்….அவ்வண்டிகளைத் தொகுத்து வைத்தாற்போன்று தோன்றும் உலர்ந்த மரக்கிளைகளைப் பிளக்கும் ஆற்றல் இல்லாமையால் யானையானது தம் துதிக்கையை மடித்தபடியே நின்று வருந்துகின்ற பாலை நிலங்களும்…. உன்னோடு வந்தால் என் தலைவிக்கு இனிமையுடைதே…. ( சும்மா சாக்குபோக்கு சொல்லாதே…என் தலைவியை உடனே கூட்டிக்கொண்டு போ.! )

 

இப்படி.. ஒளவையின் தமிழ்ப்பணி தடையறாது சென்று கொண்டிருக்கிறது….

பறம்புமலையை ( பிரான் மலை ) ஆண்ட குறுநில மன்னன் பாரி இறந்தபிறகு, அவனுடைய மகளிர் அங்கவை சங்கவையை யாருக்காவது மணமுடிக்க நினைக்கிறார் பாரியின் நெருங்கிய நண்பரும், புலவருமான கபிலர்… மூவேந்தர்களுக்குப் பயந்து யாரும் மணம் செய்ய மறுக்கின்றனர்… அந்தப் பெண்களை அந்தணர் ஒருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, கபிலர் வடக்கிருந்து ( உண்ணா நோன்பு ) உயிர் விடுகிறார்… ஒளவை மூவேந்தர்களுக்கு அறிவுறுத்தி, அங்கவை சங்கவையைத் திருக்கோவலூர் மலையமான் மக்கட்கு மணமுடித்தாள் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்…

 

நாடு போற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வி ஒளவை…. அறிவிலே திருவுடைய பெண்கள் எல்லாம் ஒளவை என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனர்… பைந்தமிழ் பரப்பிய பெருமாட்டியைத் தமிழ் கூறும் நல்லுலகு என்றும் போற்றிக் கொண்டேயிருக்கும்….!

 

நிறைந்தது.…

 

 

 

Saturday, February 20, 2016


தமிழ்க் காதலி….. ( 4 )

 

ஒளவை.. அதியமான் நெடுமான்அஞ்சிமீது அன்பு வயப்பட்டிருந்தாள் என்று இந்தத் தொடரின் துவக்கத்திலேயே நான் எழுதினேன்…

 

அவன் போரில் புண்பட்டு வந்தபோதெல்லாம், அவனைத் தேற்றிப் பாடல் பாடியிருக்கிறாள் ஒளவை….. யாராலும் தேறுதல் கூறமுடியாத அந்த நாளும் வந்தது…. போரில் மாண்டான் அதியமான்.. ஒளவையின் துக்கம் எழுதவொண்ணாதது…. அவள் கதறியழுத பாடல்கள் மூன்று பாடல்களாக புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன… இரங்கற்பா வகையைச் சேர்ந்தவை… ஒரு பெண்பாற்புலவர் தான் மிகவும் நேசித்த மன்னனுக்காகப் பாடிய இரங்கற்பாக்களில் இவை முதன்மையானவை என்று கூறலாம்…. தமிழ் இலக்கணத்தில் இம்மாதிரியான சூழலைக் கையறு நிலை என்று கூறுவது வழக்கம்…..

 

“ இல்லா கியரோ காலை மாலை

அல்லா கியர்யான் வாழும் நாளே

நடுகல் பீலி சூட்டி நார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

கோடு உயர் பிறங்குமலை கெழிஇய

நாடு உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே…. “

 

கோடுகள் உயர்ந்த மலைகள் செறிந்த தம்நாடு முழுவதையும் கொடுப்பினும், அதனை ஏற்றுக்கொள்ளாத பண்பாளன் அவன்…. அவனுக்காக நடுகல்லை நாட்டி, அதற்குப் பீலியுஞ் சூட்டி, நாரால் அரிக்கப்பட மதுவைச் சிறிய கலத்தால் விடுகின்றீர்களே…. அதனை அவன் ஏற்றுக்கொள்வானோ…? அவனோ மறைந்தான்…. காலையும், மாலையும் இனி இல்லையாகுக…. என் வாழ்நாளும் இனி இல்லாது மறைவதாக….!

 

அவனுடைய கொடைத்திறத்தைச் சொல்லி ஆற்றிக்கொள்கிறாள் ஒளவை…. மிக நீண்ட பாடலிது… சில வரிகளை மட்டும் இங்கே எடுத்தாள்கிறேன்…

“ சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே !

பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே

என்பொடு தடிபடும் வழியெல்லாம் எமக்கீயும் மன்னே

அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே

இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை….”

 

சிறிய அளவு உணவு கிடைத்தால் அதனை எமக்கே அளித்து விடுவான். பெரிய அளவு கிடைத்தாலோ, யாம் பாட எமக்கும் அளித்து, அவனும் உண்பான்… வேட்டையில் கிடைக்கின்ற பொருட்களையெல்லாம் எமக்களித்து, அம்பும், வேலும் நுழையும் போர்க்களமெல்லாம் தானே மேற்கொள்வான்… இனிப் பாடுவதற்கு எவருமில்லை… பாடுவார்க்கு ஒன்று தருவாரும் எவருமில்லை….

 

அதியமான் நெடுமான்அஞ்சியின் உடல் எரியூட்டப்பட்டது…. அதைக் கண்டு ஒளவையின் உள்ளம் கசிந்தது….

“ எரிபுனக் குறவன் குறையல் அன்ன

கரிபுற விறகின் ஈம ஒள்அழல்

குறுகினும் குறுகுக குறுகாது சென்று

விசும்புஉற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

திங்கள் அன்ன வெண்குடை

ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மாயலவே…. “

 

எரிந்த தினைக்கொல்லையிலே குறவன் வெட்டிய கட்டைத்துண்டு போல, விறகு அடுக்கிய ஈமத்தீயிலே அஞ்சியின் உடல் உள்ளது… இனி அந்த ஈமத்தீ அவன் உடலைச் சிதையாமல். சிறுகினும் சிறுகுக; அல்லது வானம் முட்டச்சென்று நீண்டாலும் நீள்க… ஆயினும் குளிர்ந்த கதிர்களையுடைய சந்திரன் போன்ற வெண்கொற்றக்குடையையுடைய, ஒளிவீசும் கதிரவனையொத்த அஞ்சியின் புகழோ என்றும் அழியாதது….!

 

பெற்ற வெற்றியெல்லாம் வெந்து தணியும் ஈமத்தீயில்…..!

 

தொடரும்….

 

 

 

 

Friday, February 19, 2016





தமிழ்க் காதலி….. ( 3 )

 

அதியமானுக்கும், தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்தினாள் ஒளவை…. அவள் பாடிய வஞ்சப்புகழ்ச்சிப் பாடல் இது…

“ இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்

கண்திரள் நோன்காழ்  திருத்தி நெய்யணிந்து

கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில மாதோ….. “

இவ்வே—இவைதாம்,  கண்திரள்—உடலிடம் திரண்ட,  காழ்—காம்பு,  கடியுடை—காவலுடைய,  கொல்துறை—கொல்லப்பட்டறை.

இங்கே இருக்கிற படைக்கலங்கள் மயிற்பீலியணிந்து, மாலைசூட்டி, திரண்ட வலிய காம்பு அழகுபடச் செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலுடைய நின் அரண்மனையிலே உள்ளன….ஆனால் அங்கே அதியமானின் வேல்களோ, பகைவரைக் குத்துவதால் நுனி முரிந்து, கொல்லனின் கொட்டிலில் உள்ளன…

 

தொண்டைமானின் படைகலங்கள் அழகாக இருக்கின்றன என்று சொல்வதன் மூலம், அவன் போர்த்திறம் இல்லாதவன் என்பதைப் புகழ்வதுபோலப் பழிக்கிறாள் ஒளவை…. அதியமானின் படைக்கலங்கள் கொல்லனின் பட்டறையில் உள்ளன என்று சொல்வதன் மூலம், அதியமான் மிகுந்த போர்த்திறம் படைத்தவன்… அதனாலேயே அவனுடைய படைக்கலங்கள் உருச்சிதைந்து, சீர்செய்ய உலைக்களத்தில் உள்ளன என்று பழிப்பதுபோல அதியமானின் போராற்றலைப் புகழ்ந்து தொண்டைமானுக்குப் புலப்படுத்தினாள் ஒளவை….

 

ஒரு புலவர் இன்னொரு புலவரைப் பாராட்டுதல் என்பது பெரிய விஷயம்… அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூர் மீது படையெடுத்துச் சென்று மலையமான் திருமுடிக்காரியை வென்றான். அப்போது பரணர் அவனைப் புகழ்ந்து பாடினார்.. அதைப்பார்த்து மகிழ்ந்த ஒளவை பரணரைப் பாராட்டினாள்…

 

அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அரசர்களை நம்பியே இருந்தனர்…. மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற வாழ்க்கை அவர்களுடையது…. அதை இப்போது படிக்கும்போது மனம் சொல்லொணாத் துயரடைகிறது…. தமிழ் யாசிக்கும் நிலையில் இருந்திருக்கிறதா….? தமிழ்ப்புலவர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்களா….?

 

ஒளவை மிகவும் சுயமரியாதை உடையவள்…. அது அவள் பாடல்களில் எதிரொலிக்கும்.. ஒருமுறை அதியமானை நாடி ஒளவை வந்தபோது, வாயிற்காவலன் அவளைத் தடுத்தி நிறுத்தி விட்டான்…

“ வாயிலோய்…

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன் அறியலன் கொல் என்னறியலன் கொல்

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே

மரங்கொல் தச்சன் கைவல்சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே…. “

வாயில் காப்போனே…. நெடுமான் அஞ்சி தன் தரமறியானோ…. அன்றி என் தரம் அறியானோ…. அறிவும், புகழும் உடையார் பசியால் இறந்தார் என்னும் வறுமையுற்ற உலகமன்று இது…. மரம் வெட்டும் தச்சன் காட்டுக்குச் சென்றால், ஏதாவது ஒருமரம் கிடையாது போகுமோ….? அதுபோல, பரந்த இவ்வுலகிலே எந்தத் திசையில் சென்றாலும் அந்தத் திசையில் எனக்குச் சோறு கிடைக்கும்….!

 

ஒளவையின் இந்த சுயமரியாதைக் குணத்திற்காகவே அவளைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடலாம். தப்பேயில்லை…!

 

தொடரும்….

 
 
 
 

Thursday, February 18, 2016


தமிழ்க்காதலி….. ( 2 )

 

ஒளவை தன்னைத்தானே வருணித்துக்கொள்ளும் பாடல் புறநானூற்றில் வருகிறது….

“ இழையணிப் பொலிந்த ஏந்து கோட் டல்குல்

மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி….”

அல்குல்---இடை,  மடவரல்---பேதைப்பெண்,  உண்கண்---மையுண்ட கண்,  வாள்நுதல்---ஒளி பொருந்திய நெற்றி,  விறலி---நடனப்பெண்.

மணிக்கோவையான அணிகள் அணிந்த இடையையுடைய, மையுண்ட கண்களும், ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய, பேதப்பெண்ணான விறலி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் ஒளவை….! அவள் பேரழகியாக இருந்திருக்கிறாள் என்பதும் தெரியவருகிறது…

 

கோதை உட்பட எல்லாப் பெண்பாற் புலவர்களும் நல்ல அழகிகள்தான் போல….! அழகுணர்ச்சியின் நீட்சிதான் காமம்…. அதனாலேயே இன்பத்துப்பாக்கள் மிக எளிதாக எழுத வந்திருக்கிறது இந்தப் பெண்களுக்கு… தன் மனதுக்கினியவனை அவள் வருணிப்பதிலேயே தெரிகிறது அந்தக்காதலை பூரணமாக அனுபவித்து அவள் எழுதுகிறாள் என்பது….! தமிழின் பெண்பாற் புலவர்களின் அத்துணைப் பாடல்களிலும் காதல் நீக்கமற நிறைந்துள்ளது….

 

வெள்ளிவீதியார் அகத்திணைப்பாடல்கள் மட்டுமே படியிருக்கிறாள்….ஆண்களை விடவும் பெண்கள்தான் காதலை மிகவும் கொண்டாடியிருக்கிறார்கள்…. அதுவும்கூட பலதாரமணம் இருந்த சமூகத்தில், காதல்திருமணம் தான் பிரதானமாக இருந்திருக்கிறது…. கருத்துரிமை பெற்ற உயர்ந்த குடியாக தமிழ்க்குடி தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது…. ஒரு அகத்திணைப் பாடலில் கூட தலைவி, ஒரே சாதியைச் சார்ந்த தலைவனைக் காதலித்ததாக எந்தச் சான்றுமில்லை…. சங்ககாலப் பெண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்…. என்ன… இப்போது நமக்கிருக்கிற சட்டப்பாதுகாப்பு அவர்களுக்கில்லை…

 

“ எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை….” 

கணையமரம் போன்ற முழந்தாளளவு நீண்ட கையையுடையவனே….( அரசர்க்குரிய சாமுத்திரிகா லட்சணம் என்று இதைச் சொல்வது வழக்கம். ) என்று விதவிதமாக அதியமானை அழகுற வருணிக்கிறாள் ஒளவை….!

 

கிடைத்தற்கரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல், தன்னை ஆழமாக நேசிக்கும் ஒளவைக்கு அளித்தான் அதியமான்….! அந்தக் கொடைத்திறனை வியந்து வாழ்த்தினாள் ஒளவை…

“ நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே…. “

நீல மணிமிடற்று ஒருவன்…. நீலகண்டன் என்னும் சிவபெருமான்….ஆலகால் விஷத்தை அருந்தியதால் ஈசனின் கழுத்து நீலமாக இருக்கும்…  பெருமலை---பெரியமலை,  விடரகத்து---மலைப்பிளவுகளையுடைய,  அருமிசை---ஏறுதற்கரிய உச்சி,  தீங்கனி---இனிய பழம்.

பெரிய மலையின் உச்சியில் பறிக்கப்பட்ட சிறிய இலையையுடைய அரிய நெல்லிக்கனியை, கனி உண்டால் பெறப்போகிற பயனை ( நீண்ட ஆயுள் ) உன் மனத்துக்குள் அடக்கி, சாகாவரத்துடன் நான் இருக்கும்படியாக, நீ அந்தக் கனியை எனக்கு அளித்தாய்… நீலமணி கழுத்துடைய சிவபெருமானைப் போல நிலைபெற்று வாழ்வாயாக…!

 

“ இனியை பெரும எமக்கே

இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே…”

எனக்கு நீ இனிமையானவனாய் உள்ளாய்…. பகைவர்க்கு இன்னாதவனாய் உள்ளாய்…..!

 

தொடரும்….

Wednesday, February 17, 2016


தமிழ்க்காதலி…. ( 1 )

ஒளவையார் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது; கே. பி. சுந்தராம்பாள் நடித்து, கொத்தமங்கலம் சுப்பு எழுதி, இயக்கிய, ஜெமினி. எஸ். எஸ். வாசன் தயாரித்த ஒளவையார் படம்தான்… எல்லா ஒளவையார்களையும் ஒரே ஒளவையாக்கித் திரைக்கதை அமைத்த படம் அது… ஆனால் உண்மை அதுவல்ல….

 

ஒளவை என்கிற பெயரில், வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்று பேர் இருந்திருக்கிறார்கள்…. அவர்களுடைய படைப்புகளில் வரும் தமிழ்ச் சொல்லாட்சியை வைத்து மொழி வல்லுநர்கள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்….

 

சங்ககாலத்து ஒளவை…. கபிலர், பரணர், அதியமான், பாரி காலத்தில் இருந்தவள்…. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு… என 59 பாடல்களைப் பாடியிருக்கிறாள்…. பக்தி இலக்கிய காலத்தில் இருந்த ஒளவை…. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை எழுதியிருக்கிறாள்…. கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்திலிருந்த ஒளவை… விநாயகர் அகவல் பாடியிருக்கிறாள்….

 

நான் இன்றைக்கு தமிழ்க்காதலியாக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறவள்….. கடைச்சங்ககாலத்தில் இருந்த மிகப் பிரபலமான பெண்பாற்புலவர் ஒளவை…. நாம் நினைப்பதுபோல் அவளொன்றும் மூதாட்டி இல்லை…. பாணர் குலத்தில் தோன்றி, பேரழகியாக விளங்கிய விறலி…( ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் அதை நடன அசைவுகளால் ஆடிக்காட்டுபவள் ) பெரும் புலமை பெற்றவள்…. புறநானூற்றில் ஒளவையின் 28 பாடல்கள் உள்ளன…. அதில் 19 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சிக்காகப் பாடியவை….!

 

தகடூரை ( தர்மபுரி ) ஆண்ட கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமானுக்கும், ஒளவைக்கும் இடையே ஆழமான காதல் உண்டு…. போரில் அதியமான் இறந்தபோது, ஒளவை பாடிய இரங்கற்பா ( ஒப்பாரிப் பாடல் ) தமிழில் எழுதப்பட்ட ஒப்பாரிப்பாடல்களில் முதன்மையானதாகும்… இந்தத் தொடரில் விரிவாக அதைப்பற்றி நான் எழுதுகிறேன்….

 

ஒளவை பாடிய பொதுவியல் திணைப்பாடல்களும் பிரபலமானவையே…. அவள் பாடிய மிக அழகான பொதுப்பாடல் இது…..

ஆண்கள் உலகம்:

“ நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே…. “

நாடானால் என்ன…. காடானால் என்ன… மேடானால் என்ன…. பள்ளமானால் என்ன…. எவ்விடத்தே ஆடவர் நல்லவராக விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் நிலமே நீயும் நன்றாக விளங்குவாய்… ஒருநாட்டின் வாழ்வும், தாழ்வும் நாட்டையாள்கின்ற மன்னரைப் பொறுத்தே அமைகிறது என்கிறாள் ஒளவை….!

 

ஒளவையின் உள்ளம் குடிகொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி…

எம்முளும் உளன்:

” களம்புகல் ஓம்புமின் தெவ்வீர் ! போர் எதிர்ந்து

எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்

எண்தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால்அன் னோனே…. “

களம்—போர்க்களம்.. ஓம்புமின்---போற்றுமின், பொருநன்---வீரன், திங்கள் வலித்த---ஒருமாதமாகச் செய்யப்பட்ட, கால் அன்னோன்--- தேர்க்காலின் வலிமையும், அழகும் ஒப்பவன்..

பகைவர்களே… போர்க்களம் சேர்வதைப் போற்றுங்கள்… உங்களை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவன் என் உள்ளத்திலும் ஒருவன் இருக்கிறான்… ஒருநாளைக்கு எட்டுதேர் செய்யும் தச்சன், ஒருமாதங் கூடிச்செய்த தேர்க்காலைப் போன்ற அழகும், வலிமையும் உடையவன் அவன்….!

 

அதியமானை எத்தனைக் காதலுடன் வருணிக்கிறாள் ஒளவை….?!

“ கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்

விழவுமேம் பட்ட நற்போர்

முழவுத்தோள் என்ஐயைக் காணா ஊங்கே…. “

கதிர்விடு நுண்பூண்---ஒளிரும் கவசம் அணிந்த,  அம்பகட்டு மார்பின்---அழகிய மார்பினன், விழவு மேம்பட்ட நற்போர்--- களவேள்வி ஆற்றிச் சிறந்த, நல்ல போரைச் செய்பவன், முழவுத்தோள்---- முழவு என்பது மிருதங்கம் போன்றதொரு இசைக்கருவி… பலாமரத்தில் செய்யப்படுவது… முழவு போன்ற வலிமையான தோளினை உடையவன்….என் ஐயை----அவன் என் இறைவன், காணா ஊங்கே---காண்பதற்கு முன் அஞ்சுவீர்…. !

 

தமிழின் மூத்த காதலி என்று ஒளவையைச் சொல்லலாம்…. ஒரு நாடாளும் அரசன் மீது அன்புவயப்பட்டு, அதிக அளவில் பாடல்கள் பாடிய ஒரே பெண் ஒளவைதான்…..!

 

தொடரும்…..

 

 

 

 

 

Monday, February 15, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… ( 5 )

 

கோதை தெய்வாம்சம் பொருந்திய பெண்....அவள் காமவயப்பட்ட்தாக நீ எப்படி எழுதலாம் என்று தோழிகள் என்னிடம் விவாதம் செய்தனர்…. கோதை தெய்வத்தன்மையுடய பெண்ணாகவே இருந்துவிட்டுப் போகட்டும்…. இந்தப் பாடல்களையெல்லாம் அவள்தான் எழுதினாள் என்பதை மறுப்பதற்கில்லையே….  எதையும் மதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல்; இலக்கியரசனையோடு, பகுத்தறிந்து புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும்….

 

அக்காலச் சமூகத்தின் வெளிப்படைத்தன்மையை, கோதையின் பாடல்கள் மூலம் நாம் அறியலாம்…. அக்காலப் பெண்கள் காதல், காமம் போன்ற சுயவிருப்பம் சார்ந்த விஷயங்களில் எத்துணை கருத்துச்சுதந்தரத்தோடு இருந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்… இருபதாம் நூற்றாண்டுப் பெண்ணான எனக்குக் கோதையின் பாடல்கள் புரட்சியாகத் தோன்றுகிறது என்றால், நாம் எப்பேர்ப்பட்ட பிற்போக்கான சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதும் புரியும்….

 

கோதையின் காதல்பாடல்கள் தமிழிலக்கியத்தில் ஒரு மைல்கல்… அவளைப்போல காதல் ததும்பி, ததும்பி வழிய எழுதியவர் எவருமில்லை… அவள் கோடியில் ஒருத்தி…. இனியொருவர் அவளைப்போல பிறக்கப் போவதுமில்லை….!

 

கோதை, மாயவன் மதுசூதனனை மணம் செய்து கொள்வதுபோலக் கனாக் கண்டுரைத்த மொழி வாரணமாயிரம்…. ஆயிரம் வாரணம் ( யானை ) சூழ வலம்வந்து, மணவிழா நிகழ்வதாகக் கனவு காண்கிறாள்… அந்தப் பத்துப்பாடல்களிலும், அக்காலத்தில் வழக்கத்திலிருந்த மணநிகழ்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்….

“ இம்மைக்கும் ஏழேழ்பிறவிக்கும் பற்றாவான்

நம்மையுடையவன் நாராயணன் நம்பி

செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி! நான்…!.... “

அவன்மேல் எத்தனை காதல் இருந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாள்….?! இந்தப் பிறவியில் மட்டுமல்ல….இனியெடுக்கப்போகிற எல்லாப்பிறவியிலும் அவன்தாள் பற்றுவதைத் தவிர இந்த ஜென்மம் கடையேறும் உபாயம் ஏது….?!

 

எம்பெருமான் எப்போது வந்தென்னை ஆட்கொள்ளப் போகிறான்….?

“ அழகப்பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்

தழுவிநின்று என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே….”

அவன் என்னை அணைத்துக் கொள்ள மாட்டானா….? பிரிவாற்றாமையால் வருந்துகிறாள் கோதை….

 

என் உள்மெலிவு எப்போது தணியும்….?!

” ஓத்நீர் வண்ணனென் பானொருவன்

தண்ணந் தொழாயென்னும் மாலைகொண்டு

சூட்டத்தணியும்…..”

அவன் அணிந்திருக்கும் துளசிமாலையை எனக்குச் சூடினால்; மனங்குழைவும், வாய்வெளுப்பும், உண்ணலுறாமையும் தணியும்…!

 

என்னரங்கத்து இன்னமுதனை நான் எங்கேயும் போகவிடமாட்டேன்….

“ குற்ற மற்ற முலைதன்னைக்

குமரன் கோலப் பணைத்தோளோடு

அற்ற குற்றம் அவைதீர

அணைய அமுக்கிக் கட்டீரே…. “

 

ஒருகட்டத்தில் அவளால் அவன் பிரிவை இனியும் தாங்க முடியாது என்று முடிவுக்கு வருகிறாள்….

“ கொள்ளும் பயன் ஒன்றில்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்

எறிந்து என் அழல் தீர்வேனே…. “

உள்ளே உருகி எத்தனை நாள்தான் இத்துன்பத்தை நான் தாங்குவது….?

சிலப்பதிகாரத்தில் கண்ணகி, தன் மார்பகத்தைப் பறித்து வீசியெறிந்ததை இங்கே நினைவு கூறுகிறேன்…. அதீதக்காதல் வந்துவிட்டால், பெண்கள் தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது….

 

கோதையை நீண்டநாட்கள் காக்க வைக்காமல், செம்மையுடைய திருமார்பில் அவளைச் சேர்த்துக்கொண்டான் திருவரங்கன்….!

 

கோதையின் திருப்பாவை, மார்கழி மாதம் முப்பது நாட்களும் எல்லா விண்ணகரங்களிலும் பாடப்படுகிறது… அவளுடைய வாரணமாயிரம் வைணவத் திருமணங்களில் இசைக்கப்படுகிறது…  மணப்பெண்கள் அவளைப்போலவே அலங்கரித்துக் கொள்கிறார்கள்…. இதெல்லாம் தமிழ்ச்சமூகம் கோதைக்குக் கொடுத்த மிகப்பெரிய கெளரவம்…..!

 

தமிழ் உள்ளளவும் கோதையும், அவள்தம் காதலும் நீங்காது நிலைப்பெற்றிருக்கும்….!

 

கோதைவாய்த்தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே…!

 

நிறைந்தது…..

 

Friday, February 12, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து…. ( 4 )

 

கோதைக்கு கோவர்த்தனன் மீதிருந்த அதீதக்காதல்…… நாயக, நாயகி பாவம்…. ஜீவாத்மா, பரமாத்மாவோடு இணைய நினைக்கும் ஒரு யுக்தி…. என்றெல்லாம் இங்கே தீவிரமாக விவாதிக்கப்படுகிறது… கோதையின் காதலை Platonic love என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்…. காமம் சார்ந்த ஆன்மீக அனுபவம் என்று நான் இதற்கு உரை எழுதுவேன்….

 

தேவாரத்தில் அப்பர், சம்பந்தர் போன்றோர் நாயக—நாயகி பாவத்தில் பதிகங்கள் எழுதியிருக்கிறார்கள்… திவ்யப்பிரபந்தத்திலும் நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இவ்வகையான பாடல்களைக் கையாண்டிருக்கிறார்கள்…. ஆனால் கோதையின் திருமொழி, இவை எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்டது…. அவளுடைய காதலில் பாவனையே இல்லை… அத்தனையும் சத்தியம்…. காலம், நேரம், பஞ்சபூதங்கள் தாண்டிய மெய்யியல் கோட்பாடு அது…

 

தனக்கென்று ஒரு உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு, திருவில்லிப்புத்தூரையே பிருந்தாவனமாக நினைத்து, அதிலே கண்ணனோடு அவள் வாழ்ந்திருக்கிறாள்…. ஸ்தூல ரூபத்திலான கோதையும், சூட்சும ரூபத்திலான இறையும் இணைந்திருக்கிறார்கள்….

 

காமம் என்பது அனுபவம் சார்ந்த விஷயம்….. உடற்சார்ந்த அனுபவத்தை உணராமல் எழுத முடியாது…

” பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை

புணர்வதோர் ஆசையினால் என்

கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து

ஆவியை ஆகுலஞ் செய்யும்…. “

இந்த உணர்வு கலவியில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற உணர்வு…. இதைக் கற்பனையாக அவள் எழுதியிருப்பாள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…. காமம் கிளர்ந்த நிலையல்லவா இது…?! இவ்வகைப் பாடல்களைப் பக்தி என்று சொல்லிவிடக்கூடுமோ…?

 

உள்ளிருக்கும் ஆன்மா காதல் வயப்படுகிறதென்றால், அதைப் போர்த்தியிருக்கும் உடல் ஏன் உருகவேண்டும்….?

“ என்புருகி இனம்வேல் நெடுங்கண்கள் இமைப்பொருந்தா பலநாளும்

துன்பக்கடல்புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்

அன்புடையாரைப் பிரிவுறு நோயது

நீயும் அறிதி குயிலே….. “

காதலென்னும் துன்பக்கடலில் எத்தனை நாள்தான் உழல்வது…? வைகுந்தன் என்கிற தோணி எப்போது என்னை மீட்கப் போகிறது..? அவன் மீதான காதல் என் எலும்பை உருகவைக்கிறது….பலநாட்கள் உறங்காத இந்த வேலையொத்த கண்களுக்கு எப்போது ஓய்வு….?!

 

கோதையளவு இறைவனை உடற்சார்ந்து காமவயப்பட்டவர்கள் எவருமேயில்லை….!

“ மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கிறேன்…”

காதல் ததும்பி வழிந்த நிலை இது….!

 

“ பழுதின்றி பாற்கடல் வண்ணனுக்கே

பணிசெய்து வாழப் பெறாவிடில்

அழுதழுது அலமந்தம் மாவழங்க….”

காதல் மீதூறினால் அழுகை தன்னைப்போல் வரும்… அவன் மார்பில் சும்மா கிடந்து அழுவது சுகம்…!

 

அவளை அலைக்கழிக்கின்ற கண்ணனை நினைக்கும் போதெல்லாம்,

“ கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை

பெண்ணீர்மை யீடழிக்கும்….”

பெண்மை என்னும் மையழிய, பெருகும் கண்ணீர் மார்பை நனைக்கிறது….

 

உன்னை நினைத்து நினைத்து உருகும் எனக்கு ஒரேயொரு உதவி செய்யக்கூடாதா…?! என் மார்பில் பூசியிருக்கும் சந்தனக்குழம்பு அழிய, ஒருநாள் என்னுள் புகுந்து, உயிர்பெய்து, என் ஆவியோடு இணைய மாட்டாயா….?!

“ செங்கண்மால் சேவடிக்கீழ்

அடிவீழ்ச்சி விண்ணப்பம்

கொங்கைமேல் குங்குமத்தில்

குழம்பழியப் புகுந்து ஒருநாள்

தங்குமேல் என்னாவி

தங்குமென் றுரையீரே….”

 

தொடரும்….