Thursday, May 14, 2015


இராவணன் மாளிகையில் இருந்த தேவ மகளிரும், மற்றும் உள மகளிரும்; அனைவரும் மறுகி போன திக்கு அறிகிலர்… இலங்கைக்கோன், அந்தத் தேவர்தம் தலைநகராகிய அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல, நிலை குலைந்து வருந்தினர்…

 

இராவணன் அரண்மனையில் வைத்திருந்த கஸ்தூரியும், மணமிக்க கலவைச் சாந்துகளும், கற்பக மலர்களும், சந்தனமும், அகில் கட்டைகளும்… என்று சொல்லத்தக்க இவ்விதமான வாசனைப் பொருட்கள் எல்லாம் எரிந்து புகையாக, “ தண் செறி மழை பெரும் குலம் என…” குளிர்ச்சி நிறைந்த மேகக்கூட்டம் போல, எல்லாத் திசைகளிலும் உள்ள தெய்வமகளிருடைய நறும் குழல்களும் பரிமளம் ( நன் மணம் ) பரவப் பெற்றவை ஆயின…. புகையாக எரிவதை; அதற்கு மாற்றாக புனல் கறுத்த முகில் கூட்டத்தோடு ஒப்பிடுகிறான் கம்பன்…. நெருப்பினூடே தண் தமிழையும் ரசிக்க வைக்கிறது கம்பனின் கவித்திறன்….!

 

“ தண் தமிழின் மிகுநேயா… முருகேசா…” என்பார் அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில்…! பண் தமிழ், தண் தமிழ், செந்தமிழ், கன்னல் தமிழ், முத்தமிழ், பைந்தமிழ், இசைத்தமிழ், இன்பத்தமிழ்…..வேறெந்த மொழிக்காவது இத்தனை பட்டப்பெயர்கள் இருக்கிறதா….?!

“ தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…!...”

பெரும் நாகரிகம் கொண்டது தமிழ்க்குடி… சொல்நயமிக்க, என்றும் இளமை மாறாத ஒரு மொழியில் இதிகாசக் காப்பியங்களை இயற்றுவதும், இன்றளவும் நாம் அதைப் படித்து இன்புறுவதும்    எத்துணை இனிமையானது….?!

 

சூழும் வெம்சுடர் தொடர்ந்திட, யாரும் அணுகவொண்ணாத, ஆழி வெம்சினத்து இலங்கைக்கோன் மனையின்; நீண்டு உயர்ந்த எழுநிலை மாடங்களும், ஊழி வெம்கனல் உண்டிட, மேலேழுலகங்களும் அழிவன போல் எரிந்து அழிந்தன…

 

இராவணனின் அரண்மனை பொற்கூரை வேய்ந்திருந்தபடியால், அவை யாவும் நெகிழ்வுற உருகி, தென் திசைக்கும் ஒரு மேருமலை உள்ளது என்றும் சொல்லும்படியாக விளங்கியது…

மேருமலையைப் பற்றி கிஷ்கிந்தா காண்டப் பதிவுகளில் ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்… குமரிக்கண்டத்தில் மேருமலை இருந்ததாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன… எம்பெருமானின் வசிப்பிடமான கயிலையங்கிரியே மேருமலை என்பது ஸ்ரீ மகாப்பெரியவாளின் கூற்று… இங்கே கம்பன், “ தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என…” என்று குறிப்பிட்டிருப்பதால், கயிலை மலையையே மேரு என்று ஒப்புக்கொள்கிறான்….!

 

கம்பராமாயணத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு ஏராளமான தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன…. மொழியியல், வரலாறு, வானவியல், அறிவியல்… என்று பல துறைகளைப் பற்றிய தகவல்கள் கம்பராமாயணத்தில் உண்டு… கம்பனை வெறும் தமிழ்ப்புலவனாக மட்டும் எண்ணிவிட முடியாது… பல்வேறு துறைகளில் அவனுக்கிருந்த பாண்டித்தியம், அவன் எழுதிய இராமாவதாரத்தை முழுமையாகப் படிக்கும்போது நமக்குத் தெரிய வருகிறது…!

 

இராவணன் அரண்மனை தீப்பற்றி எரிந்த போது; இராவணனும், அவனது உரிமை மகளிரும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானம் மீதேறி மேலே சென்றனர்…( ஃபிளைட்லே எஸ்கேப் ஆயிட்டான்..! ) இராவணனைப் போலவே அரக்கர்களில் சிலர், தவம் மேற்கொண்டு மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்தனர்… அவர்கள் தாம் நினைத்த இடத்திற்குச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள்… மாயாசக்தி என்று சொல்லலாம்… அவ்வரக்கரும் அந்த இடத்தை விட்டு இராவணனோடு அகன்றனர்… அவ்வாறு செல்லும் சக்தியற்ற அஃறிணைப் பொருளான, திருகூட மலையின் மேலிருந்த இலங்கை நகர்; அங்கேயேயிருந்து நெருப்பில் அழிந்தது…!

 

தன்னுடன் வந்த அரக்கர்களை, சினத்துடன் பார்த்து, “ ஊழிக்காலத்தில் பதினான்கு உலகங்களும் தீயால் அழியும்… அந்தப் பிரளய காலம் வந்து உற்றதோ…? பிறிது வேறு உண்டோ…? நகர் பாழி ( பெருமை ) தீ சுட வெந்தது ஏன்…? என்று வினவினான்…

 

தம் சுற்றத்தார்களைக் காணாதவர்களாய் இரங்குகின்ற வல் அரக்கர் தம் கரங்களைக் கூப்பி, ஈது இயம்பினர்……” இறையோய்… கடல் அலையிலும் நெடியதான, அக்குரங்கு தன் வால் இட்ட தழலால் சுட்டது ஈது….” என்றலும், இராவணன் கொதித்தான்….

 

“ இன்று ஒரு புன் தொழில் குரங்கு தன் வலிமையினால், இலங்கை நகர் நின்று; எரிந்து பெரும் சாம்பல் எழுந்து கிளம்புகிறது…. நெருப்பு நகரை உண்டு ஏப்பம் விடுகின்றது… இராவணன் போர்வலி நன்று நன்று என… தேவர்களும் நகைப்பார்கள்….” எனக்கூறி வெகுளியாகச் சிரித்தான்…..

 

“ சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்

காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்

ஓதல் செய் நான்மறை ஆகி, உம்பர்

ஆதல் செய் மூவுருவானவனே…!....”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….