Sunday, June 7, 2015


ஆண்டகை, அஞ்சனை மைந்தன் அநுமன்; பிராட்டியின் கற்பாகிய தவச்சிறப்பை, வானரர்களுக்கு விளங்கும்படி தெளிவாகச் சொல்லி, அவளின் பேரடையாளமாக சூடாமணி என்னும் தலையணியைத் தான் கைக்கொண்டு வந்துள்ளதும் கூறித், தன் வெற்றிச் சிறப்பைத் தானே கூறிக்கொள்ள வெட்கமுற்றவனாய்; இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகளையும், தான் அந்நகரை நெருப்பிட்டுக் கொளுத்தி மீண்டதுமான செய்திகளை விளக்கமாக விளம்பினான்…

 

வானரர்கள் அநுமனை நோக்கி, “ நீ சொல்லாவிடினும், நீ அங்கு போர் புரிந்ததை உன் உடலில் காணப்படும் புண்களே தெரிவிக்கிறது… பிராட்டி உன்னுடன் திரும்பி வராத செயலிலேயே. தேவியின் கற்பின் திண்மையைத் தெரிதர உணர்ந்தோம்…இனி ஆலோசிக்க வேண்டியது யாதுமில்லை… நாம் இனி செய்யத்தக்கது…. இராமபிரானின் தேவியாகிய பிராட்டியைப் பார்த்து வந்த செய்தியைத் தாமதிக்காமல் விரைவில் சென்று அண்ணலிடத்தில் கூறி, அண்ணல் உள்ளத்து அரும்துயர் அகற்றல் ஆம்… நாம் இராமபிரானிடம் உடனே போவதே அறிவுள்ள காரியமாகும்…” என்று கூறி, விரைவில் எழுந்து சென்றனர்… அநுமன் இராமபிரான் இருக்குமிடம் நோக்கிச் சடுதியில் சென்றான்…

 

செங்கண்மாலான இராமபிரான், பிராட்டியைப் பிரிந்த துயரத்தால் சோர்வுற்று, ஓய்ந்து, உயிரடங்கியது போலிருந்த போதெல்லாம்; சூரியகுமாரனான சுக்ரீவன், சீரியச் சொற்களால் இராமபிரானைத் தேற்றினான்… இராமன் ஓய்ந்து, மீண்டும் உயிர் பெற்றவன் போலக் காணப்பெற்றான்… “ சோர்தொறுஞ் சோர்தொறும் உயிர்த்துத் தோன்றினான்…”

 

இராமன் தங்கியிருந்த மலை பிரசிரவரணம் என்று வான்மீகத்தில் வருகிறது…. கம்பன் அதைக் குறிப்பிடவில்லை.. இந்த இடத்தில், அநுமன் எப்படியும் நல்ல செய்தி கொண்டுவருவான் என்று இராமன் நினைத்தான் என்கிறான் கம்பன்… “ திண் திறல் அநுமனை நினையும் சிந்தையான்…”

 

எம்பெருமானின் பத்து அவதாரங்களில், இராமாவதாரத்தில் தான் எம்பெருமான் முழுக்க முழுக்க மனிதனாகவே வாழ்ந்து காட்டினான்… எந்தவொரு இடத்திலும் தான் இறையம்சம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை… அதனால்தான் இராமாவதாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது…. மனிதனின் உணர்வுகளுக்கும், வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் இராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோளாக எடுத்துக் கொள்ளலாம்…. மனிதன் கூட தெய்வமாகலாம் என்பதை இராமாவதாரத்தில் எம்பெருமான் மெய்ப்பித்துக் காட்டினான்….  மெய்யமால் ஐயன்….!

 

இந்தப் பரதகண்டத்தில் மிகச் சிறந்த மனிதன், மிகச் சிறந்த அரசன்.. என்று கொண்டாடப்படுபவன் இராமனே….! அவனுடைய ஆட்சிக்காலத்தைத் தான் பொற்காலம், இராமராஜ்ஜியம் என்கிறோம்… இராமராஜ்ஜியம் என்பது நமக்கெல்லாம் ஒரு கனவே…. இந்த ஜென்மத்தில் அந்தக் கனவு நனவாவதற்குச் சாத்தியக் கூறுகளேயில்லை…. ஆனால், அப்படியொரு ஆட்சி, இந்த நாட்டில் நடைபெற்றிருக்கிறது என்று நினைத்து நம்மை நாமே தேற்றிக் கொள்வோம்….!

 

வாலி, அநுமன், சுக்ரீவன் போன்றவர்கள்: தங்களுடைய அகவுணர்வால், இராமன் இறையம்சம் என்பதைப் புரிந்து கொண்டனர்…. கடுந்தவம் புரிந்த இராவணனாலேயே, இராமநாமத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை… மரணம் நெருங்கும் போதுதான் அவனுக்குப் புதிர் அவிழ்கிறது…. மாயை என்னவெல்லாம் செய்கிறது….?! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்…. இறையை இப்போதே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்….!

 

இராமபிரான் சுக்ரீவனிடம் வினவிய காலத்தில், தென்திசை உதித்த சூரியன் போல, “ இரவி என்பவன் தென்புலத்து உளன் என…”, அவர்கள் முன் தோன்றினான அநுமன்…! வந்தவுடனேயே இராமனின் திருவடி பணிந்தானில்லை….அவன் செய்த காரியம்தான் என்னே…?!

அவ்விடத்தை அடைந்த அநுமன், முதலில்; பூமியில் அவதரித்த திருமகளாம் பிராட்டி இருக்கும் தென்திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்…….! தாயாரை( வைணவத் தமிழில் அம்பாள் ) முதலில் வணங்கும் யுக்தி இது என்பேன்…!

 

குறிப்பினால் உணரும் கொள்கையான்…. எம்பெருமான்….கோதண்டபாணி….சீதாராமன்… அநுமன் வணங்கிய செயலை வைத்து, “ கண்டதும் உண்டவள் கற்பு நன்றெனக் கொண்டனன்….” இந்தக் காட்சியை விஷுவலாக யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது….!

 

அநுமன், ஆங்கு அவன் செய்கையே; பிராட்டியின் நன்னிலைக்கு ஓர் அளவுகோல் என்று ஓங்கிய உணர்வினால், எம்பெருமானின் தோள் வீங்கின…. கண்கள் புனல் விம்மின… அரும்துயர் நீங்கியது…. காதல் நீண்டது….!

 

“ அண்டமாய் எண்திசைக்கும்

ஆதியாய் நீதியான

பண்டமாம் பரம சோதி

நின்னையே பரவுவேனே….!...”

திருமங்கையாழ்வார்…. திருக்குறுந்தாண்டகம்….

 

No comments:

Post a Comment