Friday, February 12, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து…. ( 3 )

 

கோதையின் திருப்பாவைக்கும், வாரணமாயிரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைணவம் நாச்சியார் திருமொழிக்குக் கொடுப்பதில்லை…. காரணம்…. அதில் இழையோடும் பாலியல்…. காமத்துப்பால் பாடல்கள்தான்….

 

ஒருவிதமான பாசங்கற்ற உடற்சார்ந்த விருப்பம் எல்லாப் பாடல்களிலும் அமைந்திருக்கிறதுமறைமுகமான, ஊடுபொருளான, இலைமறைகாயான பக்தி என்று நான் சொல்வேன்….!

 

காமம் கனிந்த பெண்ணால்தான் இத்துணை ஈடுபாட்டோடு காமத்துப்பால் எழுதமுடியும்…. கற்பனையாக எப்படி அவள் எழுதினால் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது….! காமத்திற்கு என்ன உரை எழுதுவது….? அதீதக் காதல் என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடக் கூடுமோ….?

 

காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு

நல் ஆண்மை என்னும் புணை..”

குறள்….. காமத்துப்பால்

காமத்துக்கு 250 பாடல்களில் விழா எடுத்த வள்ளுவன் என்ன சொல்ல விழைகிறான்….?

நாணம், ஆண்மை என்ற படகுகளைக் காமம் என்னும் கடும்வெள்ளம் அடித்துப் போய்விட்டது…” என்கிறான்….!

 

காமம் என்பது மனித வாழ்வின் மிக முக்கிய அங்கம்…. பிணைப்புக்கான காரணி…. காமத்தை எப்படி ஒதுக்கித்தள்ள முடியும்…? கோதையின் பாசுரங்களால் ஒருவர் காமவயப்பட முடியுமா….? தமிழில் மூழ்கி, முத்தெடுப்பவர்கள் நிச்சயம் காமுற முடியும்….!

 

ஆண்டாய்உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே….”

என்பது திருமங்கையாழ்வாரின் கூற்று…. மணவாழ்க்கையை நன்கு அனுபவித்துவிட்டுதான் இப்படி எழுதியிருக்கிறார்….! இல்லறவாழ்வில் இருப்பவர்கள் இறையை உணரமுடியாதாயென்ன….?!

 

இறைவனை அணுகத் தடையாக இருப்பது காமம் என்கிற உலகியல் உண்மையை முதன்முதலில் உடைத்தெறிந்தவள் கோதை…. இன்பத்துப்பாக்களால் பாற்கடலில் பயணம் செய்து, பரந்தாமனை அடைந்தவள் பட்டர்பிரான் கோதை….!

 

காதல் வழியாக பேரின்பநிலை அடைவது கோதைக்குக் கைகூடியது…. கட்டற்ற காமத்தைக் கன்னல் தமிழில் கடுகளவுகூட பாசாங்கில்லாமல் கொடுத்தவள்…. இறையைக் கண்டு அவள் அஞ்சவேயில்லை…. காதலில் கரைந்து போனவளுக்குக் கடவுள் பயமேது…?! வரலாற்றில் இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெண்களுக்கெல்லாம் முன்னோடி கோதைதான்….!

 

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழகில்லேன் கண்டாய் மன்மதனே….”

அவள் எப்பொழுதோ தன் வாழ்வை முடிவு செய்துவிட்டாள்…. அதையும்கூட போகிறபோக்கில் சொல்லிவிடுகிறாள்

அவரைப் பிராயந் தொடங்கி யென்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன்….”

எனக்கு நினைவு தெரிந்த நாளாக, என் பெண்மையை உணர்ந்த நாள் முதல், காதலில் கனிந்த என் கட்டுடலை அவனுக்கே தாரைவார்த்துக் கொடுத்துவிட்டேன்…. இப்படியொரு அசாத்தியமான பெண்ணை, காமக்கடும்புனலில் நீந்துகின்ற ஒரு பெண்ணை மானிடர் காதலிக்கக் கூடுமோ….?!

 

கள்ளவிழ் பூங்கணைத் தொடுத்துக் கொண்டு

கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி….”

நான் மாலையாகத் தொடுக்கின்ற ஒவ்வொரு மலரிலும் அவன் பெயரை எழுதுகிறேன்….

வைத்துக் கிடக்கும் மலர்மார்பா…. உன் மார்பில் கிடக்கும் மாலை நானே ஆகுக….

 

தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்…..”

அவன் தீண்டுகிற ஸ்பரிசம் என் உள்மெலியப் புகுந்து, என்னுயிரை உறிஞ்சி விடாதா….

காமத்தீயில் நான் கரைந்து கொண்டே வருகிறேன்….

காமத் தீயுள் புகுந்து

கதுவப்பட்டு இடைக்கங்குல்

ஏமத்தோர் தென்றலுக் கிங்கு

இலக்காய் நானிருப்பேனே…..!....”

 

தொடரும்…..

Wednesday, February 10, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… (2 )

 கோதை தமிழுக்களித்த கொடை 173 பாடல்கள்… அதில் திருப்பாவை 30 பாடல்கள்….திருப்பாவை எழுதும்போது அவள் வாலைக்குமரிப்பருவத்தின் ஆரம்பநிலையில் இருந்திருக்கிறாள்.. நாச்சியார் திருமொழியில் அவள் காமம் கனிந்த பெண்ணாக இருக்கிறாள்….

 

“ செங்குழல்மேல் மாலைத்தொடை

தென்னரங்கருக்கீயும் சோலைக்கிளி…..”

கோதை சூடிக்கொடுத்த மாலைகளை அவள் உள்ளங்கவர் கள்வன் திருவில்லிபுத்தூர் உறையும் வடபத்ரசாயி அணியத்துவங்கிய நாளில், அவளும் திருப்பாவை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்…. திருப்பாவையில் எல்லாப் பாடல்களுமே பொதுப்படையாக அமைந்த பாடல்கள்தான்…. ஓரிரு பாடல்களில்தான் எம்பெருமான் மீது அவளுக்கிருக்கும் அளப்பரிய காதலை வெளிப்படுத்துகிறாள்….

 

பாவை நோன்பு என்பது சங்ககாலம் தொட்டே, பண்டைய தமிழ்ப்பெண்கள் நோற்ற ஒரு நோன்பு…. “ தை நீராடல் ‘’ என்று அகநானூற்றில் வருகிறது…. அதை “ மார்கழி நீராடல் “ ஆக்கிய பெருமை கோதையையேச் சாரும்….

 

ஏன் எல்லா மாதங்களையும் விட்டுவிட்டு, மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்தாள் கோதை….? காரணம்… உஷ்ணமான தமிழகத் தட்பவெப்பநிலையில், மார்கழி மாதந்தான் தண்மையான மாதம்…. பனி பொழிகின்ற காலம்…. தவிரவும், கிருஷ்ணனே, “ மாதங்களில் நான் மார்கழியாயிருப்பேன்…” என்று கீதையில் சொல்லிவிட்டான்…. பனிவிழும் இளங்காலையில் கன்னிப்பெண்கள் நீராடி, பாவை நோன்பு நோற்றால்; மனம் விரும்பும் கணவனை அடையப் பெறுவார்கள்….

 

கோதையின் பாவை நோன்பு, அவளுக்குப் பிறகு நூறாண்டுகள் கழித்து அவதரித்த மாணிக்கவாசகரையும் பாதிக்கவைத்து, திருவெம்பாவையைச் சைவத்திற்கென்று இயற்ற வைத்தது….!

 

திருப்பாவையில் வரும் புராண, இதிகாசக்குறிப்புகள், நுட்பமான இயற்கை வருணனைகளைப் படிக்கும்போது, கோதை ஒரு வாலைக்குமரி என்பதை மனம் ஏற்க மறுக்கும்…
“ ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப…”

ஓங்கி உயர்ந்து வளர்ந்த நெற்பயிர்களின் ஊடே கயல்மீன்கள் துள்ளும்…. அழகிய குவளை மலர்களில் வண்டுகள் உறங்கும்…. எத்தனை அழகான வருணனை….?!

 

தமிழில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சொல் அல்குல்… இதைப்பற்றிய மிக நீண்ட பதிவினை என்னுடைய கம்பராமாயணக் கட்டுரைகளில் பார்க்கலாம்… அல்குல் என்பது, பெண்களின் உடலமைப்பில் இடுப்பையையும், தொடையையும் இணைக்கின்ற சற்றே விரிந்த பகுதி… இடையில் குறுகி அகலுதல் அல்குல்… திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் இந்த சொல் மிகப் பொருத்தமாக எடுத்தாளப்பட்டிருக்கிறது…. திருப்பாவையில் 11—ம் பாடலான, “ கற்றுக் கறவைக் கணங்கள்….” பாடலில்,

“ புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்….” என்று பாடுகிறாள் கோதை… புற்றிலிருந்து வெளிப்படும் படம் விரித்த நாகம் போல அல்குலையுடைய மயிலன்ன நடையாள்….. எத்துணை கவித்துவமான வெளிப்பாடு இது….?!

 

“ உந்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது….”

உனக்கும், எங்களுக்குமான உறவை யாராலும் ஒழிக்க முடியாது.. அன்பினால் கட்டுண்ட உறவல்லவா….!

 

“ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்….”

இனி வருகின்ற எல்லாப் பிறவிகளிலும், உன் திருவடிப் பற்றுவது தவிர; வேறுகதி ஏது எங்களுக்கு….?!

 

அவன் இதழ்தேன் சிந்தும் ஒருவாயமுதம் பருகிடக் கெஞ்சிய கோதையின் காதல்…. மானிடவர்க்கு அல்லாதது…. மாலவனுக்கென்றே சொந்தமானது…..!

 

தொடரும்….

 

 

 

 

 

Tuesday, February 9, 2016


உள்ளம் புகுந்தென்னை நைவித்து… ( 1 )

” திவ்யப்பிரபந்தம் “ தொடர் எழுதும்போது, ”கோதை”யைப் பற்றி விரிவாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன்… ஆனாலும், அவளின் தனித்துவமான பாடல்களுக்காக; அவளுக்கு முன்னுரிமை அளித்து, தனிப்பதிவுகளாக எழுத நினைக்கிறேன்….

 

கோதையை பூமாதேவியின் மறுஅம்சம் என்கிற தெய்வநிலைக்கெல்லாம் கொண்டு போகாமல், தமிழின் ஆகச்சிறந்த பெண்பாற்புலவராக…. அவளின் தமிழாளுமைக்காக…. இலக்கிய மேதமைக்காக…. அவள்பால் பெருவிருப்பம் எனக்குண்டு…. எனக்கு நினைவு தெரிந்து தமிழ் வாசிக்கயறிந்த நாள் முதல், இன்றுவரை; அவளை நினைக்காத நாளேயில்லை… தினமும் ஒருமுறையாவது அவள் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன்…!  கன்னல் தமிழில் காதலை இனிக்க இனிக்கப் பாடி, எல்லோர் உள்ளங்களையும் கவர்ந்த கள்வனின் காதலி அவள்….!

 

கோதையின் பிறப்புப் பற்றி வரலாற்றுத் தொன்மங்களில் பெரிதாக எந்தத் தகவலுமில்லை… அவள் பூமாதேவியின் அம்சம்… திருத்துழாய்ச் செடியின் ( துளசி ) அடியில் கண்டெடுக்கப்பட்டாள் என்பதெல்லாம் வைணவ குருப்பரம்பரைக்கதைகள் சொல்லும் விஷயங்கள்…..

 

அவளுடைய பிறப்பை தெய்வீகம் கலக்காமல் யோசித்துப் பார்த்தால், துளசிச்செடியின் கீழ் புறக்கணிக்கப்பட்ட குழந்தை என்பது தெளிவாகத் தெரிகிறது… பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டு, தன் சொந்தப்பெண் போல் வளர்க்கப்பட்டிருக்கிறாள்…. விஷ்ணுசித்தரிடம் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் பயின்று; அதிமேதாவிலாசத்தோடு இருந்திருக்க வேண்டும்… இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்…அவள் இயற்றிய சங்கத் தமிழ்மாலை ( திருப்பாவை ) தமிழ் இலக்கணத்தில் மிகக்கடினமான பாவகைகளுள் ஒன்றான “ இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா “வினால் பாடப்பட்டிருக்கிறது….

 

” பெரியாழ்வார் தனது கிருஷ்ண காமத்தை கவியுக்தியாக வெளிப்படுத்த கற்பனை செய்து கொண்ட ஒரு கற்பனை மகளே ஆண்டாள் “….என்பது மூதறிஞர் இராஜாஜியின் கருத்து…

“ ஒருமகள் தன்னையுடையேன்

உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்…” என்ற பெரியாழ்வாரின் கூற்றின் மூலம் இராஜாஜியின் அநுமானம் தகர்ந்து போனது… பெரியாழ்வாருக்கு ஒருமகனும் இருந்ததாகக் கருத இடமுண்டு… திருவரங்கக்கோவிலை நிர்வகித்துக் கொண்டிருந்த அவருடைய மரபினரே, “ உத்தம நம்பிகள் மரபு “ என “ உத்தம நம்பி வைபவம் “ கூறுகிறது…

 

நாச்சியார் என்ற பெயர் கூட பிற்காலத்தில் பயன்பாட்டுக்கு வந்ததுதான் என்பது என்னுடைய யூகம்… சங்கத் தமிழ்மாலை என்றுதான் தன்னுடைய பாசுரங்களுக்குக் கோதை பெயர் சூட்டியிருக்கிறாள்…. திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பதெல்லாம் பிற்காலத்தில் வழங்கப்பட்ட பெயராக இருக்க வேண்டும்…

 

கோதை நள வருடத்தில், ஆடி மாதம், பூரம் நட்சத்திரத்தில் திருவில்லிப்புத்தூரில் பிறந்தவள்…. கி.பி. 716—ஆம் வருடமாக இருக்கலாம் என்பது மு. இராகவையங்காரின் கணிப்பு… திருப்பாவையின் 13—ம் பாடலான, “ புள்ளின்வாய் கீண்டானை….” பாடலில் வரும், “ வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று…” என்ற சொற்றொடரை வைத்து ஆராய்ச்சி செய்து அவள் பிறந்த காலத்தைக் கணித்திருக்கிறார்கள்…. அவ்வருடம் வானத்தில், முக்கியமான வானவியல் நிகழ்வொன்று நிகழ்ந்திருக்கிறது…

 

பதிமூன்று வயதிற்குள்ளாகவே பேரின்பநிலை அடைந்த வாலைக்குமரி கோதை….!

 

தொடரும்….

 

Monday, February 8, 2016

தமிழில் பிரபலமான பாடல் எது...? கதைகளிலும், திரைப்படங்களிலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட பாடல் எது..? கம்பராமாயணத்தில் வரும் “ அண்ணலும்,
நோக்கினாள்..அவளும் நோக்கினாள்..” பாடல்தான்..

நோக்குதலுக்கும், பார்த்தலுக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது..
“யான் நோக்கும்காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்..”
இரண்டே வரிகளில் மிக அழகான ஒரு காதல்கவிதை ...
சொல்லுவான் வள்ளுவன்...!
அத்தனை எளிதில் நாம் யாரையும் நோக்கிவிட மாட்டோம்..

நோக்குதலை, ஒரே பாடலோடு விட்டுவிடவில்லை கம்பன்..
அடுத்தடுத்து வருகின்ற பாடல்களிலும் நயமாக விளக்குகின்றான்.. “ பருகிய நோக்கு என்னும் பாசத்தால்
பிணித்து..” என்கிற பாடலில் நோக்குதல் என்கிற உணர்வை
பாசம் என்ற குணத்தோடு இணைக்கிறான்...ஆக, பாசத்தோடு,
நேசிப்பவர்களைத்தான் நாம் நோக்குவோம் என்பது புலனாகிறது..இந்த வரிசையில் இன்னுமொரு அழகான
பாடலை இங்கே நான் எடுத்துக் கொள்கிறேன்..

மருங்கிலா நங்கையும் வசையில் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினர்
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ..

பால காண்டம்....மிதிலைப்படலம்.

இடையில்லை என்று சொல்லும்படி சிறிய இடையை உடைய
சீதையும். இழிவில்லாத குணங்களையுடைய இராமனும்
இரண்டு உடல்களுக்குப் பொருந்திய ஒரே உயிர் போல்
ஆனார்கள்..திருப்பாற்கடலின் பள்ளியறையில் இல்லறம் நடத்தியவர்கள் பிரிந்து போய்விட்டார்கள்..மிதிலையில்தான்
மீண்டும் சந்திக்கிறார்கள்..

கம்பராமாயணம் ஒரு காப்பியம்..வாழ்க்கை வரலாறு..
ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களைச் சுவையாக, உணர்ச்சியோடு சொல்லியாக
வேண்டும்..எப்பவுமே காதல் உணர்வுகளுக்குத்தான்
முதல் மரியாதை..அந்த வகையில் கம்பனைக் காதல்கவி
என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியே...smile emoticon
See More
9 May
Bagavathi Ganesh updated her status.
10 May 2014 12:27
 

தயரதன் புதல்வன், தாமரைக்கண்ணன், சீதாராமன், கோதண்டபாணி, அயோத்திராமனாய் அவதரித்து; இந்த அண்டத்தை உய்விக்க வந்த மெய்யமால் ஐயன் இவனே…! என்று விபீஷணன் இலங்கேஸ்வரனுக்கு மேலும் அறிவுரை கூறுகிறான்…

 

“ அரக்கர் தலைவனே… இராமபிரானின் கோதண்டத்திலிருந்து வரும் அம்புகள் எத்தகைய தன்மையுடையவை என்பதை அறிவாயா நீ…? அந்த அம்புகளாகிய நாகங்கள், தமது நாவினால் திக்குகள் அனைத்தையும் அளந்து கொள்ளற்குரியன…. தமது நச்சுப்பற்களில் தினந்தோறும் கடுமையான விஷத்தைக் கக்குவன… நெருப்பைக் கக்கும் பற்களையுடையன…. பாவிகளின் உயிராகிய உணவையன்றி; பிறிதோர் இரையைப் பெற விரும்பாதன….” எம்பெருமானின் அம்பறாத்துணியைப் புற்று என்கிறான் கம்பன்…. பாணங்களை நாகங்களாகவும், அவை தங்குகின்ற இடத்தைப் புற்றாகவும் உருவகிக்கிறான்….

 

“ இராம இலக்குவர்கள் கைக்கொண்டு நிற்கும் விற்களைப் பிறரால் அசைக்கவேனும் இயலுமோ….?! நம்முடைய விற்கள் உருவிற் பெரியவையாகக் காணப்படினும், அவர்களின் விற்களை ஒழிக்கக்கூடியன ஆகுமோ…? அந்த விற்கள் கற்பகத்தருவோ…? மூங்கிலோ…? பரம்பொருள்போல் உலகினைத் தழுவி நிற்கும் மேருமலையோ….?!...”

 

“ அந்த இராமபிரானது அம்புகளால் வாலியின் வன்மை அடங்கியது… ஒரே அம்பினால் மராமரங்கள் பிளக்கப்பட்டன… கரன் முதலானவர்கள் சிரங்கள் சிந்தின… இனி போர் நெருங்க நெருங்க பகைவர்களின் பாரம் குறைந்து கொண்டே வருகிறது….”

 

“ பிராட்டி சிறைப்பட்டிருப்பதால், என்ன தீங்கு எப்போது விளையுமோ…என்ற எண்ணத்தினால் ; இந்த அரக்கர்கள் உன்னிடம் தன் கருத்தை வெளியிடுவதற்குப் பயந்து, இரவும், பகலும் உறங்காமல் தவிக்கின்றனர்…. நம்மைக் கண்டு அஞ்சிய அமரர்கள், இப்பொழுது தமக்குப் புகல் கிடைத்ததென்று கவலை தீர்ந்திருக்கின்றனர்….”

 

“ பெருமை வாய்ந்த ஜானகி என்ற மிகவும் கொடியதான நஞ்சினை உட்கொண்டவர்களான அரக்கர் நரகத்தினை அடைவர்….என்று எண்ணியே பயமின்றியிருக்கிறார்கள்…” ”திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை…” என்று கும்பகர்ணன், இராவணனுக்கு அறிவுறுத்தியதை இங்கே நினைவு கூறுகிறேன்….பிராட்டியின் கற்பைக் கொடிய நஞ்சுக்கு உவமையாக்குகிறான் கம்பன்…. கொடிய நாகத்தைக் கண்டு பயப்படுவது இயல்பல்லவா….

 

“ நீ முன்னர் வரம் வேண்டி நின்றபோது, மனிதர்களாலோ, குரங்குகளாலோ நீ முறியடிக்கப்படுதல் கூடாது என்று விரும்பி வேண்டவில்லை… அவர்களால் உனக்கு இறுதி நேரும்.. ஆகவே, அவர்களைப் பகைத்தல் நன்றன்று…. அமரர்கள்தான் வானரர் ரூபத்தில் திரண்டிருக்கிறார்கள் என்பது உனக்குப் புரியவில்லையா…? இராமன் வேறுயாருமல்ல…. ஆழிவலவன் ( சக்கரம் தாங்கிய திருமால் ) அவனே…!”

 

இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச

வசையும் கீழ்மையும் மிக்கொளக் கிளையொடு மடியா

தசைவில் கற்பின் அவ்வணங்கை விட்டருளுதி அதன்மேல்

விசையம் இல்லெனச் சொல்லினன் அறிஞரின் மிக்கோன்.

யுத்த காண்டம்…. இராவணன் மந்திரப்படலம்….

அறிந்த ஞானிகளிற் சிறந்தவனாகிய விபீஷணன், “ புகழும், செல்வமும், உயர்குடியில் உதித்தற்கேற்ற நல்லொழுக்கமும் குறைந்தொழிய; நிந்தனையும், இழிவும் மிக, உன்வம்சம் அழியாமலிருக்க; தளராத கற்புடைய அந்தத் தெய்வவனிதையை விடுதலை செய்க… அவ்வாறு நீ செய்வாயேயானால் உனக்கு வெற்றி விளைக்கக்கூடிய செயல் பிறிதில்லை….” என்று நீண்ட அறிவுரை சொல்லி தன் ஆசனத்தில் அமர்ந்தான் விபீஷணன்….

 

“ களிமலர்சேர் பொழிலரங்கத் துரகமேறிக்

கண்வளரும் கடல்வண்ணர் கமலக்கண்ணும்

ஒளிமதிசேர் திருமுகமும் கண்டுகொண்டென்

உள்ளம்மிக என்றுகொலோ உருகும் நாளே…!...”

குலசேகராழ்வார்…. பெருமாள் திருமொழி….