Saturday, November 6, 2010

மழை நாட்கள்......ஒரு நினைவலைகள்

மழை ... எனக்கு எப்போதுமே அலுக்காத ஒரு விஷயம். என் வாழ்வின் முக்கிய தருணங்களில், மழை என் கூடவே பயணித்து வந்திருக்கிறது. ஒரு ஐப்பசி அடை மழையில் எனக்குத் திருமணம் ஆயிற்று. பிறிதொரு மழை நாளில் தான் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் மழை [ வருண் ] என்றே பெயர் வைத்தேன். இப்படி எனக்கான, பிரத்யேக மழை நாட்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்... இப்பவும் நினைவில் நிற்பது பள்ளிப்பருவ மழைக்காலங்கள்தான். எங்கள் ஊர்..கோவில் நகரமான கும்பகோணம் என்கிற குடந்தை நகரம். நாங்கள் பிறந்து, வளர்ந்து, மழையில் நனைந்த ஊர்...! எங்கள் வீடு காவிரிக்கரையோரமாக அமைந்திருந்தது. மொட்டை மாடியில் நின்றுகொண்டு, காவிரியில் புதுப்புனல் வருவதை; அதுவும் மழையில் வேரறுந்த மரங்கள், ஆடுமாடுகள், சிலசமயம் சடலங்களும் அடித்துச் செல்லப்படுவதை ஒருவித கிலியோடுப் பார்த்துக்கொண்டிருப்போம்.. எல்லாப்படித்துறைகளும் மூழ்கி, தண்ணீர் கொல்லைக்குள் புகுந்துவிடும். எங்கும் ஒரே ஜலப்பிரவாகமாகக் காட்சியளிக்கும்..! நாம் ஒரு தீவுக்குள் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும். வீட்டில் இருக்கும் ஆனந்த விகடன், ரீடர்ஸ் டைஜஸ்ட், ஸ்புட்னிக் பத்திரிக்கைகளின் அட்டைகள் காகிதக் கப்பல்களாக உருமாறிவிடும்..! யார் கப்பல் முன்னாடி போகிறது..? என்று அங்கே ஒரு போட்டியே நடக்கும். எங்களைச் சமாளிப்பது அம்மாவுக்குப் பெரிய தலைவலி..! இந்த இருபது வருட சென்னை வாசத்தில் நான் பார்த்த, பார்க்கின்ற மழை; சாக்கடை நீர் கலந்த மழை..! தெருவில் கால் வைக்கவே முடியாது.. மாதம் மும்மாரி என்று இலக்கியத்தில் வரும். இப்போதெல்லாம் பருவம் தப்பிப் பெய்கிற மாரிதான்..! Global Warmingங்கால் உலகத்தட்பவெப்பனிலையே மாறிவிட்டது. மரங்களை அழித்துப் பன்மாடிக்குடில்களைக் கட்டிக்கொண்டிக் கொண்டிருக்கிறோம்.. .வெப்பம் தாங்கமுடியாமல், குளிர்சாதன வசதி செய்து கொள்கிறோம். ஏசி அறையில் அமர்ந்து, கம்ப்யூட்டரில் மழைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம்...! நமக்கு எங்கே புரியப் போகிறது...இந்தக் குறளின் அர்த்தம்...?!
"நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..."

Sunday, October 24, 2010

மொழி பெயர்ப்புகள் பற்றிய ஒரு பார்வை

பொதுவாக, தமிழின் பிரபல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, விற்பனையில் பெரிதாக எந்த சாதனையும் செய்யவில்லை. காரணம், lobby என்று சொல்லப்படுகின்ற marketing techniques பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான். திருக்குறள் பிரபலமானதற்குக் காரணம்,ஜி.யு.போப் என்ற ஆங்கிலேயர் அதை மொழி பெயர்த்ததுதான். மற்றபடி சங்க இலக்கியம், திவ்யப்பிரபந்தம்,தேவாரம் சிலவற்றை ஏ.கே.ராமானுஜம் மொழி பெயர்த்திருக்கிறார். அது ஆங்கில வாசகர்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதத்தை அவருடைய பேத்தி கௌரிராம்நாரயண் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். மண்வாசனையோடு [ flavour] அதைப் படிக்க முடிகிறதா என்று கேட்டால்,பதில் சொல்லத்தெரியவில்லை.


இப்படி நம்முடைய மொழியாக்கங்கள் எல்லாமே utter flop! திரைப்படத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள். மிகத்தரமான படங்கள் இந்தியாவில் தயாராகின்றன. ஆனால் ,எந்த ஒரு படத்திற்கும் லகான் உள்பட; ஆஸ்கரின் அந்நிய மொழி விருது வழங்கப்படவில்லை. சீன, கொரிய. ஜப்பானிய, ரஷ்யப்படங்களுக்கு இருக்கிற மரியாதை இந்தியப் படங்களுக்குக் கிடையாது. பாட்டு, நடனம் , இன்னபிற கரம்மசாலாக்கள் சேர்த்து எடுக்கப்படும் இந்தியப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே[entertainment] என்கிற அவர்களுடைய நினைப்பும் ஒரு காரணம். லாஸ் ஏஞ்சலிஸ் போய், அமெரிக்கர்களிடம் lobby பண்ணுகிற தைரியம் நமக்குக் கிடையாது.


இதை விட, இன்னொரு வேடிக்கை; இந்தியாவில் இந்தி மொழி மட்டுமே பேசப்படுகிறது என்று இன்னமும் பல ஆங்கிலேயர்கள் நினைத்துக்கொண்டிருப்பதுதான். குறிப்பாக, அமெரிக்கர்களுக்கு இந்தியா பற்றிய அறிவு மிகவும் குறைவு. பாரத மாதா, செப்பு மொழி பதினெட்டுடையாள் என்பது பாவம் அவர்களுக்குத் தெரியாது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மொழிப் பெயர்ப்புக்கென்று தனி துறையே இருக்கிறது. உருப்படியாக இதுவரை எதுவும் செய்யாத வெட்டி department! உலகெங்கும் இருக்கிற தமிழ்ச்சங்கங்கள் மூலமாக மொழியாக்கப்படைப்புக்களை ஆங்கில வாசகர்களிடையே பிரபலப்படுத்தலாமே..?!