Saturday, November 6, 2010

மழை நாட்கள்......ஒரு நினைவலைகள்

மழை ... எனக்கு எப்போதுமே அலுக்காத ஒரு விஷயம். என் வாழ்வின் முக்கிய தருணங்களில், மழை என் கூடவே பயணித்து வந்திருக்கிறது. ஒரு ஐப்பசி அடை மழையில் எனக்குத் திருமணம் ஆயிற்று. பிறிதொரு மழை நாளில் தான் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் மழை [ வருண் ] என்றே பெயர் வைத்தேன். இப்படி எனக்கான, பிரத்யேக மழை நாட்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்... இப்பவும் நினைவில் நிற்பது பள்ளிப்பருவ மழைக்காலங்கள்தான். எங்கள் ஊர்..கோவில் நகரமான கும்பகோணம் என்கிற குடந்தை நகரம். நாங்கள் பிறந்து, வளர்ந்து, மழையில் நனைந்த ஊர்...! எங்கள் வீடு காவிரிக்கரையோரமாக அமைந்திருந்தது. மொட்டை மாடியில் நின்றுகொண்டு, காவிரியில் புதுப்புனல் வருவதை; அதுவும் மழையில் வேரறுந்த மரங்கள், ஆடுமாடுகள், சிலசமயம் சடலங்களும் அடித்துச் செல்லப்படுவதை ஒருவித கிலியோடுப் பார்த்துக்கொண்டிருப்போம்.. எல்லாப்படித்துறைகளும் மூழ்கி, தண்ணீர் கொல்லைக்குள் புகுந்துவிடும். எங்கும் ஒரே ஜலப்பிரவாகமாகக் காட்சியளிக்கும்..! நாம் ஒரு தீவுக்குள் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும். வீட்டில் இருக்கும் ஆனந்த விகடன், ரீடர்ஸ் டைஜஸ்ட், ஸ்புட்னிக் பத்திரிக்கைகளின் அட்டைகள் காகிதக் கப்பல்களாக உருமாறிவிடும்..! யார் கப்பல் முன்னாடி போகிறது..? என்று அங்கே ஒரு போட்டியே நடக்கும். எங்களைச் சமாளிப்பது அம்மாவுக்குப் பெரிய தலைவலி..! இந்த இருபது வருட சென்னை வாசத்தில் நான் பார்த்த, பார்க்கின்ற மழை; சாக்கடை நீர் கலந்த மழை..! தெருவில் கால் வைக்கவே முடியாது.. மாதம் மும்மாரி என்று இலக்கியத்தில் வரும். இப்போதெல்லாம் பருவம் தப்பிப் பெய்கிற மாரிதான்..! Global Warmingங்கால் உலகத்தட்பவெப்பனிலையே மாறிவிட்டது. மரங்களை அழித்துப் பன்மாடிக்குடில்களைக் கட்டிக்கொண்டிக் கொண்டிருக்கிறோம்.. .வெப்பம் தாங்கமுடியாமல், குளிர்சாதன வசதி செய்து கொள்கிறோம். ஏசி அறையில் அமர்ந்து, கம்ப்யூட்டரில் மழைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறோம்...! நமக்கு எங்கே புரியப் போகிறது...இந்தக் குறளின் அர்த்தம்...?!
"நீர் இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..."

No comments:

Post a Comment