Thursday, January 8, 2015


வீணை….நம் இசை மரபின் பாரம்பரிய தந்தி வாத்தியம்…

இல்லற வாழ்க்கையில் இணையும் மணமக்களுக்கு, “ வீணையும் நாதமும் போல இன்புற்றிருக்க வேண்டும்..” என்று வாழ்த்துவது தமிழர் பண்பாடு…

தொன்மையும், இனிமையும் வாய்ந்த வீணை, பலா மரத்தில் செய்யப்படுகிறது…தஞ்சாவூர் வீணைதான் வீணைகளில் இராணி…!

தஞ்சையை மராத்தியர்கள் ஆண்டபோதுதான், கர்நாடக சங்கீதத்தில் வீணை அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது…வீணை விற்பன்னர்களை வெளிச்சத்திற...்கு கொண்டு வந்த பெருமை மராட்டிய மன்னர்களையேச் சாரும்…

வீணை தனம்மாள், எஸ். பாலச்சந்தர், சிட்டிபாபு, ஈமனி சங்கர சாஸ்திரி, ஈ. காயத்ரி…போன்றவர்கள் வீணையைத் தன் வாழ்வாக எடுத்துக்கொண்டு, இசைக்குப் பெருமை சேர்த்தவர்கள்….

சங்ககாலம் முதற்கொண்டே, தமிழிசையில் வீணையின் முக்கியத்துவம் குறித்த பல செய்திகள் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன…

“ நாரதன் வீணை நயந்தெரி பாடலும்…” …இளங்கோவடிகள்…சிலப்பதிகாரம்….

“ வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்…” ….திருத்தக்கதேவர்….சீவக சிந்தாமணி…

“ மாசில் வீணையும், மாலை மதியமும்..” …அப்பர்…தேவாரம்….

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி…” …ஞானசம்பந்தர்…கோளறு திருப்பதிகம்….தேவாரம்…

“ பண்ணோடியைந்த வீணை பயின்றாய் போற்றி…” … மணிவாசகர்… திருவாசகம்….

“ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ…” …சுப்ரமணிய பாரதி….

கவிச்சக்கரவர்த்தி கம்பன், இராமாயணக் காப்பியத்தில் வீணைக்குப் பல இடங்களில் சிறப்புச் செய்திருக்கிறான்…

மகர வீணையின் மந்தர கீதத்து மறைந்த
சகர வேலையி னார்கலி திசைமுகந் தழுவும்
சிகர மாளிகைத் தலந்தொறுந் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தி னழுந்தின முகிற்குல மனைத்தும்.

சுந்தர காண்டம்…ஊர்தேடு படலம்…

மகரமீனின் உருவம் பொருந்திய வீணையிலிருந்து எழும் ஓசையினுள், சகரர்களால் தோண்டப்பெற்ற கடலின் பேரொலிகள் அடங்கிவிட்டன…இலங்கை மாநகரத்தில் சிகரங்களை உடைய மாளிகைகளின், எல்லைப்புறம் மட்டும் செல்லும் மேல் தளங்கள் தோறும் வாழும் பெண்டிர், தம் கூந்தலுக்கு ஊட்டும் அகிற்புகைப் பரப்பில், மேகக் கூட்டம் முழுமையும் அடங்கிவிட்டன…

இலங்கேஸ்வரனான இராவணன், கயிலைவாசனான எம்பெருமானின் முன் அமர்ந்து வீணை இசைத்துக் கொண்டிருக்கும்போது, தந்தி அறுபடவே, தன் நரம்பையே தந்தியாக்கி, சாமகானம் இசைத்து சர்வேஸ்வரனை தன் வயப்படுத்தினான்…

இராவணன் நற்குணங்கள் படைத்தவன்… வீணைக்கொடியுடையோன் என்று போற்றப்பட்டவன்…பிறன்மனையைச் சிறையெடுத்ததன் மூலம் அத்தனை நற்குணங்களையும் இழக்கப் பெற்றான்….இராவணன் என்று பெயருள்ளவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்…துரியோதனன், சகுனி என்று யாரும் பெயர் வைத்துக் கொள்வதில்லை…!

சம்பூர்ண ராமாயணம் படத்தில், ” வீணைக்கொடி யுடைய வேந்தனே…” பாடலில் இராவணனாக நடித்த டி.கே. பகவதி, பெரிய வீணையை இசைத்துக்கொண்டு, பிரமாதமாக நடித்திருப்பார்…இன்னிசைத்திலகம் கே.வி. மகாதேவனின் இசையில், கம்பீரக்குரலோன் சிதம்பரம் எஸ். ஜெயராமனின் குரலில் பூபாளமும், சாரங்காவும், தோடியும், காம்போதியும்..இன்ன பிற ராகங்களும் மழையெனப் பொழியும்…! எல்லோராலும், எல்லா காலத்திலும் விரும்பிக் கேட்கப்படுகின்ற பாடல்….!

இராவணன் என்று நினைக்கும்போதே, டி.கே. பகவதியின் உருவம்தான் நினைவுக்கு வரும்..இராவணனுக்குப் பக்கத்தில் பட்டமகிஷி மண்டோதரியாக, அழகுப்பதுமையாக ”அம்மாவின்” அம்மா நடித்திருப்பார்…. :) :)
 
 
 
 
 
 
 
.
 
 

No comments:

Post a Comment