குரங்கு…..ஆதி மனிதனுக்கு அண்ணன் என்று டார்வினின் பரிணாமக்கொள்கை சொல்கிறது….குரங்கின் குணாதிசயங்களோடு மனிதன் மிகவும் ஒத்துப்போவதால் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும்…
குரங்குகள் செய்யும் கலாட்டாக்கள் பற்றி தினசரி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன…மதிய உணவுக்காக எடுத்துச் சென்ற காலிஃப்ளவர் கறியை, கல்லூரி மரத்தடியில்; குரங்கு கவர்ந்து உற்சாகமாய் உண்டதை, உதறலோடு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் என் தோழிய...ின் பெண் ஹரிணி…! குரங்கோடு நேரடியாக மோதிய அனுபவம் எனக்கும் உண்டு…ஒருமுறை மதுரையில், திருமாலிருஞ்சோலையில்…அர்ச்சனை செய்த பழத்தட்டோடு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தேன்..மேல்கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு மந்தி, திடீரென்று கீழே குதித்து; பழத்தட்டோடு சேர்த்து பக்கத்தில் இருந்த என் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ஓடியது…நான் அதன் பின்னே துரத்திக்கொண்டு ஓடினேன்…திரும்பி என்னைப் பார்த்து, “போனால் போகிறது..ஒழிந்து போ…” என்று கைப்பையை கீழே போட்டுவிட்டது….! அன்றிலிருந்தே மந்தி என்றாலே மகா பயம் எனக்கு…! திருவானைக்காவில் இருக்கும் என் அம்மா வீட்டுக்கு, வரிசையாக தாத்தாவிலிருந்து, பேரன் வரை..தினமும் ஏழெட்டு குரங்குகள் வருகின்றன…வாழை, நெல்லி…என்று மரங்களைத் துவம்சம் செய்கின்றன…தினம் ஒரு பழமாவது குடுக்க வேண்டும்…இல்லையென்றால் என் அம்மாவை முறைத்துப் பார்த்து, உறுமி, பயமுறுத்துகிறது தாத்தா குரங்கு…! குரங்குகளின் வசிப்பிடங்களான வனங்களையும், சோலைகளையும் மனிதன் அழிக்க அழிக்க…குரங்கு நாடு தேடி வருகிறது…கொல்லையில் இருக்கும் மரங்களை வளைத்து ஒடிக்கிறது….குரங்கைக் கோபித்துக் கொண்டு என்ன பயன்…அதன் வசிப்பிடத்தைக் கொள்ளையடித்தது நாமல்லவா…! இலக்கியத்தில் குரங்கு… கடுவன், மந்தி, குரக்கு…என்றெல்லாம் வழங்கப்படுகிறது…. கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி….. குறுந்தொகை. மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்….. ஐங்குறுநூறு. துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி….. நற்றிணை. வைக்கோள் மறந்த கருவிரல் மந்தி….. மலைபடுகடாம். கனி கவர்ந்துண்ட கருவிரற்கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி….. புறநானூறு. வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்…மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்….. குற்றாலக் குறவஞ்சி. இராமாயணத்தில் வானரங்களுக்கென்றே ஒரு தனி காண்டமே ஒதுக்கியிருக்கிறான் கம்பன்…வானர சேனைக்குத்தான் முதல் மரியாதை,,, ஆர்த்தது குரக்குச் சேனை அஞ்சனை சிறுவன் மேனி போர்த்தன பொடித்து உரோமப் புளகங்கள் பூவின் மாரி தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்தென அனகன் சொன்ன வார்த்தை எக் குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா.. கிஷ்கிந்தா காண்டம்…. நட்புக் கோட் படலம். சுக்ரிவனை, ” நீ என் இனிய நண்பன் “ என்று இராமன் சொன்ன அச் சொல்லானது, எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும் வேத மொழியை விட உண்மையானதாகும் என்று எண்ணிக் குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது…அஞ்சனை என்பவளின் மகனான அனுமன் உடலை, அரும்பிய மயிர்ச்சிலிர்ப்புகள் மறைத்தன..தேவர்கள் மலர் மழையால் உலகை மறைத்தனர்..மேகங்கள் நீரைப் பொழிந்தன… மனக்குரங்கு…இஞ்சி தின்ன குரங்கு போல…குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல…குரங்குப்பிடி… இப்படி.. நம் வாழ்வில் குரங்கின் தாக்கம் அதிகம்…குரங்கைப் பழக்கப்படுத்துவதும் மிக எளிதே..குரங்காட்டி பற்றிய தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது…இயக்குனர் அமரர் இராமநாராயணன் குரங்குகளை வைத்து அதிகப் படங்கள் எடுத்தவர்…எப்போது அந்தப் படங்களைப் பார்த்தாலும் சிரிப்பு வரும்… :) See More |
Thursday, January 8, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment