இராவணன் தன்னைச் சிறையெடுத்ததற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை அநுமனிடம் கேட்டறிந்தாள் பிராட்டி…
தன்பால் இராமபிரான் கொண்ட அன்பை நினைத்து என்புற உருகினள்…இரங்கி ஏங்கினள்…
“ என்புருகி இனம்வேல் நெடுங்கண்கள்
இமைப்பொருந்தா பலநாளும்…”
…கோதை நாச்சியார்…நாச்சியார் திருமொழி…
” ஐயனே…அளக்க முடியாத பெரிய கடலை நீந்தி, இங்கு வந்து சேர்ந்தது எவ்விதம்…? இயம்புவாய்…”
உன் ஒப்பற்ற துணைவனான இராமபிரானின் ஆசியினால், “ பெருங்கடல் கடந்திடுமென்னும் பெற்றி போல் கருங்கடல் கடந்தனென் காலினால் என்றான்..” அநுமன்..
அதைக் கேட்டு வியப்புற்ற பிராட்டி, ” இத்துணை சிறிய உடலைக் கொண்ட நீ உன் தவ வலிமையால் பெரிய கடலைத் தாண்டினாயா…” என்று கேட்டாள்..
அநுமன் தன் பேருருவை, விஸ்வரூப தரிசனமாகப் பிராட்டிக்குக் காட்டினான்…
“ எட்டரு நெடுமுகடு எய்த நீளு மேல்
முட்டு மென்று உருவொடு வளைந்த மூர்த்தியானான்…”
அநுமனின் பேருருவைப் பார்த்து அண்டமெல்லாம் மிரண்டு போய்விட்டனவாம்…
“ மிண்டலம் இருபுடை விளங்கும் மெய்ம்மையை
மண்டலம் மிரண்டொடு மாறு கொண்டவே….”
அநுமனின் விஸ்வரூபத்தைப் பார்த்த பிராட்டி அஞ்சினள்…இவ்வுரு அடக்குவாய் என்றாள்…”.உன் பேருரு முழுவதையும் பார்ப்பதற்கு இந்த உலகத்தில் யாருக்கும் வலிமையில்லை…ஆதலால் நீ முன்னிருந்த உருவில் குருகியிருப்பாயாக…” என்று அநுமனிடம் கேட்டுக் கொண்டாள்….
உமது அருளின் படியே ஆகட்டும் என்று எளிய உருவம் காட்டினான் அநுமன்…பிராட்டி அவனைப் பாரட்டினாள்…” நீ என் தலைவனான இராமபிரானுடைய துணைவன் ஆனாய் என்றால், இனி அரக்கர்கள் என்ன தன்மையை அடைவார்கள்…” என்று ஆச்சரியப்பட்டாள்…
அநுமன் வானரப்படையின் பெருமையைக் கூறினான்..
“ குரக்கினப் படைகொடு குரைகடலின் மீது போய்
அரக்கரங் கரங்கவெஞ் சரந்துரந்த ஆதி நீ…”
…திருமழிசையாழ்வார்…திருச்சந்த விருத்தம்…
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய், ” திருமகள் போன்ற இப்பிராட்டி இன்னலுற்று வருந்துகிறாள்…இராமபிரானின் பிராணன் போன்ற இவளைக் கொண்டகல்வதே கருமம்…” என்றுணர்வு கொண்டான்….
“ பொற்கொடியே…என் தோளில் எழுந்தருளியிருப்பாயாக…உன்னை ஒரு கணநேரத்தில் எம்பெருமானிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பேன்…உன்னை இந்த நிலையில் விட்டுவிட்டு வெறும் கை பெயரேன்…இலங்கையோடு என்னை எடுத்துக் கொண்டு போவாயாக என்று நீ கட்டளை இட்டாலும் இந்த இலங்கையைப் பெயர்த்தெடுத்து என் வலக்கரத்தில் வைத்துக் கொண்டு போய் இராமலக்ஷமணர்களின் பாதங்களை வணங்குவேன்…இதைச் செய்வது எனக்கொரு பெரிய காரியம் அன்று…”
“ அம் சொல் இளவஞ்சி அடியன் தோள் ஏறு கடிது
என்று தொழுது இன்னடி பணிந்தான்…”
அநுமன் கூறியதைக் கேட்ட பிராட்டி, “அரியதன்று…நின்னாற்றலுக்கு ஏற்றதே…ஆனால் என் பெண்மனம் உன் யோசனையை ஏற்க மறுக்கிறது… என்னை நீ எடுத்துச் செல்லும்போது அரக்கர்கள் போர் புரிய வந்தால், என்னைக் காப்பாற்ற முடியாதவனாய் ஆவாய்…அப்போது உன் மனம் மிகவும் தடுமாற்றம் அடையும்…”
“ அன்றியும் வேறொரு காரணமும் இருக்கிறது…இராமபிரானின் கோதண்டத்திற்கு ஆற்றல் இல்லை என்று கருதுவதற்கு இடமளிப்பது போலாகிவிடும்…தவிரவும் என்னை எடுத்துச் செல்வது திருட்டுச் செயலுக்கு ஒப்பாகும்…இராவணன் செய்ததையே, நீயும் செய்வது உன்னால் ஏற்றுக் கொள்ளமுடியுமா…?..”
” இனிவரும் போரில் எம் கொற்றவன், திருத்துழாய்மார்பன், என்னவன், எம்பெருமான் இராமபிரானுடைய விற்போரின் செயலை அண்டர் யாவரும் நோக்க, இராவணனுடைய விழிகளை காகங்கள் கொத்தித் தின்னும் வரை, யான் என்னை உயிரோடு உள்ளவளாகக் கருத மாட்டேன்…”
பொற் பிறங்கல் இலங்கை பொருந்தலர்
எற்பு மால்வரை ஆகிலதே எனின்
இற்பிறப்பு ஒழுக்கம் இழுக்கம் இல்
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்…
….சுந்தர காண்டம்…சூடாமணிப் படலம்….
“ பொன்மலையில் உள்ள இலங்கை நகர் பகைவர்களாகிய அரக்கர்களின் எலும்பின் பெரிய மலையாக ஆகாவிடில், நற்குடியில் பிறந்த என் சிறப்பையும், என் நல்லொழுக்கத்தையும், சிறிதும் வழுவாத என் கற்பையும் உலகில் உள்ள பிறர்க்கு நான் எவ்விதம் தெரிவிக்கும் திறமையுடையவளாவேன்…?!..’’
” ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”
…திருக்குறள்…
” அஞ்சன வண்ணனைப் பாடிப் பற…
ஆராவமுதனைப் பாடிப் பற…
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற…”
…பெரியாழ்வார்…பெரியாழ்வார் திருமொழி… … J
No comments:
Post a Comment