Thursday, January 8, 2015

அனுமனைப் பற்றி எழுதாமல் கிஷ்கிந்தா காண்டம் முற்றுப்பெறாது…இந்தப் பதிவு அனுமன் புகழ் பாடும் பதிவு…!

அனுமன், ஆஞ்சநேயன், மாருதி…தொன்மப் படிவங்களில் HOMINOIDS இனத்தைச் சேர்ந்தவனாக அறியப்படுகிறான்…அதீத உயரமும், அசாத்திய பலமும் உடையவனாகச் சித்தரிக்கப்படுகிறான்…

“ காற்றின் வேந்தர்க்கு அஞ்சன வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்…” என்னும் கூற்றோடு இராமனுக்கு அறிமுகமாகிறான்…

“ ஐம்புலன் வென்றான்…மடத்...தோகையர் வலி வென்றவன்…” எனும் அடைமொழிகள் அனுமனின் புலனடக்க வலிமையை உணர்த்துவன…

“ சொல்லின் செல்வன்..” என்று இராமன் வாயிலாக, அனுமனுக்குக் கம்பன் கொடுத்த அடைமொழிதான்…தமிழின் ஆகச்சிறந்த பெயர்களுள் ஒன்றாகத் திகழ்கிறது…!

“ சொல்லாலே தோன்றிற் றன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ..” என்று இராமனே அனுமனின் பெருமையை எண்ணி வியக்கிறான்…

அனுமன் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை இராமனுக்குக் காண்பிக்கிறான்…
“ நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படா பதமே ஐய குரங்கு உருக்கொண்டது..” அனுமனின் தோற்றத்தைக் கண்டு புகழ்ந்துரைக்கிறான் இராமன்..!

இராமன்பால் தோழமை கொண்டவர்களுள், அனுமனைப்போல் காப்பிய நாயகனால் புகழப்பட்டவர் எவருமில்லை…!

இராமனைப் பார்த்த அளவில், அவன் மானிட வடிவம் தாங்கிய பரம்பொருள் என்கிற முடிவுக்கு அனுமன் வரக் காரணம் அவனின் அக உணர்வே…

“ என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது இல் காதல்
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்கொல் அறிதல் தேற்றேன்…”
இந்த உள்ளுணர்வு அனுமனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது…

வாலி வதைப்படலத்தில், அனுமனின் ஆற்றலை; சாகும் தருவாயிலிருந்த வாலியே, இராமனுக்கு விளக்குகிறான்…

” உற்றது செய்க என்றாலும் உரியன் இவ் அனுமன்..”
“ அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செங்கைத் தனு என நினைதி…”
அனுமன் என்ற இவனை உன் கையில் ஏந்திய வில்போல் எண்ணுவாயாக….இராமனின் வில்லை விடவும், அனுமன் ஒருபடி உயர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் வாலி..!

இராமாயணம் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் சில இடங்களில் காணப்படுகின்றன..

“ கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை…” …புறநானூறு…

“ வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல்..” … அகநானூறு…

“ ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிர் கீழ் புகுந்து…” …கலித்தொகை…

கம்பன் அனுமனின் பாத்திரப் படைப்பை மிக உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு செல்கிறான்…

பொரு வரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப்பெயர்ந்த தாள் போல்
உரு வறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்.

கிஷ்கிந்தா காண்டம்… மயேந்திரப் படலம்…

ஒப்பில்லாத கடலைத் தாண்டும் எண்ணமுள்ள அனுமன் மூன்று உலகங்களையும் தாவியளந்த பெரிய வடிவம் கொண்டு உயர்ந்த வியக்கத்தக்க குணம், செயல்களை உடைய திருமாலின், மேல் இடத்தில் பொருந்துமாறு உயர எடுத்த திருவடியைப் போலத் தன் வடிவை யாவரும் அறிதற்குரிய பெரிய வடிவத்துடன் வானத்தை அளாவ உயர்ந்தான். அதனால் உவமையாலும் “திருவடி” என்கின்ற தனது திருநாமத்தின் இயல்பு யாவர்க்கும் விளங்க நின்றனன்….

சைவர்கள் ஆஞ்சநேயரை சிவனின் அம்சம் எனவும், வைணவர்கள் சிறிய திருவடி என்றும் அழைப்பார்கள்…பெரிய திருவடி கருடாழ்வார்…!

துளசிதாஸர் அனுமன் சாலீஸா பாடியிருக்கிறார்…அருணாசலக்கவிராயர் அனுமன் பிள்ளைத்தமிழ் இயற்றியிருக்கிறார்…

திவ்யப்பிரபந்தத்தில் சில இடங்களில் ஆஞ்சநேயரைப் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன…

“ சினமடங்க மாருதியாற் சுடுவித்தானை…” …குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி…

“ திறல் விளங்கு மாருதியோடமர்ந்தான் தன்னை…” …குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி…

அடியோங்கள் வீடுபெற்றுய்ய எம்பெருமான் உந்தன் திருவடியே சரணாகதி...:) :)


 

 
 

No comments:

Post a Comment