Thursday, January 8, 2015

தற்போது கார்காலமாதலால் இந்தப்பதிவு மழையைப் பற்றியதே…

என் நினைவேட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது; மழை என் வாழ்வின் முக்கிய தருணங்களிலெல்லாம் என் கூடவே பயணித்திருப்பதும், மழை விட்டுச்சென்ற தடயங்களைப் பின்பற்றி நான் நடந்து சென்றிருப்பதும் வெண்புகை மூட்டமாகத் தெரிகிறது…!

இருபத்திநான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு ஐப்பசி அடைமழை நாளில்தான் எனக்குத் திருமணம் ஆனது…பிறிதொரு மழைநாளில்( அதுவும் ஐப்...பசியே…!) எனக்கொரு மகன் பிறந்தான்…மழை மீதிருந்த தீராக்காதலால் மகனுக்கு வருண் என்று பெயரிட்டேன்…அதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமே…

என் மகன் பிறந்தவுடனேயே, கணினியில் ஜாதகத்தைக் கணித்து; அதை ஜோஸியரிடம் கொண்டு போய்க்காண்பித்தான் என் தம்பி…ஜாதகத்தைப் பார்த்த ஜோஸியர், குழந்தைக்கு “ வ அல்லது வி “யில் பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னாராம்…அக்கா ஏற்கனவே வருண் என்று வைத்துவிட்டாள் என்று என் தம்பி சொல்ல ஜோஸியருக்கு ஒரே ஆச்சரியம்…! வருண பகவானுக்கல்லவோ நான் நன்றி சொல்ல வேண்டும்…!

சென்னை பாரதிய வித்யா பவனின் மாலை நேரக்கல்லூரியில், நான் இதழியல் படித்துக் கொண்டிருந்த சமயம்; ஒரு புயல் மழை நாளில், திருவல்லிக்கேணியில் இருந்த மாமா வீட்டுக்குப் போகமுடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்தேன்…இரவு ஒன்பது மணியாகிவிட்டது..மயிலாப்பூரில் இருக்கும் என் சின்ன மாமியின் உறவினர் வீட்டுக்கு என்னைப் பத்திரமாக அழைத்துச் சென்ற நண்பன் பாலாஜியை மழைநாளின் போதெல்லாம் நினைத்துக் கொள்கிறேன்…நட்பின் உன்னதத்தை நான் உணர்ந்த தருணம் அது…

1983—ஆம் ஆண்டு பெரும் புயலடித்து, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து கும்பகோணமே வெள்ளக்காடாகிவிட்டது... சேர்ந்தார்போல் இரண்டு வாரங்கள் பள்ளிக்கு விடுமுறை…நாங்கள் வசித்த கல்யாணராமன் தெருவில், என் வீட்டுக்கு எதிர்சாரி காவிரி…அதாவது எதிர்வீட்டு கொல்லை காவிரி…காவிரி வழிந்து தெருவுக்கு வந்துவிட்டது…தீவுக்குள் இருப்பது போலிருந்தது…எங்கும் ஒரே ஜலப்பிரவாகம்…வீட்டிலிருந்த சோவியத்நாடு, ஸ்புட்னிக் பத்திரிக்கை தாள்களெல்லாம் காகிதக் கப்பல்களாக உருமாறி மிதந்து கொண்டிருந்தன…ஃப்ரிட்ஜ் வசதியில்லாத அந்தக் காலத்தில், அம்மா எப்படி எங்களுக்குச் சமைத்துப் போட்டார் என்று நினைக்கும்போது மனம் நெகிழ்ந்து போகிறது…சென்ற வாரம் தீபாவளிக்கு முன்னும், பின்னுமாக தொடர்ச்சியாக பெய்த மழையால், பத்து நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…இத்தனைக்கும் என் வீட்டுக்கு அருகிலேயே, ஐந்து நிமிட நடையில் பழமுதிர்நிலையம் இருக்கிறது…மழையில் வெளியில் சென்று காய்கறி வாங்கிவர அத்தனை அலுப்பாக இருந்தது எனக்கு…அம்மாவை நினைத்துக் கொண்டேன்….!

தில்லியில் வசித்தபோது, அங்கு கார்காலத்தை ரசித்தது வித்தியாசமான அனுபவம்…ஆலங்கட்டி மழை பெய்யும்...கண்ணில் தென்படும் பூங்காக்களின் பசும்புல் தரைகள் எல்லாம் வெண்போர்வை போர்த்தியிருப்பது போல், பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்…என் வீட்டுப் பால்கனியில் வெண்பூக்களின் மலர்படுகையென ஆலங்கட்டிகள்…! கைநிறைய அள்ளி மேல்மாடியில் வசித்த அம்முகுட்டி சேச்சி மேல் விட்டெறிந்ததும், பதிலுக்கு சேச்சி என் தலைமேல் மழையாய்ப் பொழிந்ததும் வாழ்வின் சந்தோஷமான தருணங்கள்…!

கர்நாடக சங்கீதத்தில், அமிர்தவர்ஷிணி ராகம் பாடினால் மழை வரும் என்பது ஐதீகம்…கும்பகோணத்தில் எங்கள் பள்ளியில் கச்சேரி செய்ய வந்திருந்த கே.ஜே. யேசுதாஸ், அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைந்த தீக்ஷிதரின் ஆனந்தாம்ருதவர்ஷிணி கீர்த்தனையைப் பாட மழை கொட்டித்தள்ளியது…தொப்பலாக நனைந்து கொண்டே கச்சேரியைக் கேட்டது இன்னமும் ஜில்லென்று பசுமையாக நினைவிலிருக்கிறது..!

ஒருமுறை திருச்சி ஆர்.ஆர். சபாவில் கச்சேரி செய்வதற்காக, என்னுடைய மாமி..திருமதி.டி.வி.சுந்தரவல்லி வந்திருந்தார்..அப்போது கடுமையான கோடைக்காலம்..கச்சேரியில் மழைப்பாடல் பாடும்படி என் அப்பா மாமியிடம் கூறினார்..தேவாரத்திலிருந்து ஏதேனும் மழையைப் பற்றிய பாடல்கள் இருந்தால் எடுத்துக் குடுங்கள் என்று அப்பாவிடம் கேட்டுக்கொண்டார் மாமி…சுந்தரர் பாடிய மழைப்பாடல்களை எழுதிக் கொடுத்தார் அப்பா…கச்சேரியில் மாமி அந்தப் பாடல்களைப் பாட, சடசடவென்று மழை பொழிந்ததை சபா ஜன்னலின் ஊடே நான் ரசித்து மகிழ்ந்தேன்…!

இலக்கியத்தில் மழையைப் பாடாத புலவர்களே இல்லை.. மழையை இயற்கையின் கொடையாக நினைத்துப் போற்றியிருக்கிறார்கள்…

“மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே…” …புறநானூறு..

”கடல் முகந்து கொண்ட காமஞ்சூல் மாமழை சுடர்நிமிர் மின்னொடு வலன் ஏர்பு..” …அகநானூறு.

”கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த..” …நற்றிணை.

”தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய்..” … திருப்பாவை.

”தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை துறுவல்மிசை சிறுநுண்துளி சிதற..” …திருஞானசம்பந்தர், தேவாரம்…

”முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்..”… திருவெம்பாவை…

கம்பன் ஒரு முழுப்படலமே கார்காலத்திற்கு ஒதுக்கியிருக்கிறான்…ஒவ்வொரு பாடலும் தித்திக்கும் தேன்மழை…!

மாதிரக் கருமகன் மாரிக் கார் மழை
யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின்
கூதிர்வெங் கால் நெடுந் துருத்திக் கோளமைத்து
ஊது வெங் கனல் உமிழ் உலையும் ஒத்ததே..

கிஷ்கிந்தா காண்டம்… கார்காலப் படலம்.

எல்லாப் பொருள்களையும் விடக் கரிய வானமானது, திசைகள் என்னும் கருமான் மழைக் காலத்துக் காளமேகமாகிய கரிக்குவியலில், வாடைக் காற்றாகிய துருத்தியின் வலிமையினைக் கொண்டு ஊதி வளர்த்த, கொடிய தீயின் கொழுந்துகளை, வெளிப்படுத்தும் உலைக்களத்தைப் போன்று தோன்றியது…

மாதம் மும்மாரி பெய்திருக்கிறது அறந்தழைத்தோங்கிய அந்தக்காலத்தில்… இதனால்தான் வள்ளுவன் சொன்னான்…

”நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுங்கு...”

மரங்களை வெட்ட வெட்ட மழை பொய்க்கும்…நம் வாழ்வும் வளமிழந்து போகும்…

மண் வளம் காப்போம்…மாரியும் மாறாமல் பெய்து நம்மைக் காக்கும்…:) :)
See More
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment