Thursday, January 8, 2015

 
அன்னப்பட்சி…வடமொழியில் ஹம்ஸம்.. என்றொரு பறவை, நிலத்திலும் நீரிலும் வாழ்ந்ததாக இலக்கியங்கள் குறிக்கின்றன.. ஆங்கிலத்தில் SWAN என்று சொல்லப்படும் பறவை இனத்தைச் சேர்ந்ததாக நாம் … எடுத்துக்கொள்ளலாம்…
இதிகாச காலங்களில் இருந்த அன்னம், இந்தியாவில் இப்போது இல்லை..சில ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றன..நம்முடைய மரபில், அன்னப்பட்சியை மங்களகரமானக் குறியீடாகக் கொள்ளப்படுவதால், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளில் அன்னத...்திற்கு முக்கிய இடம் உண்டு…இசையிலும் அன்னத்தின் தாக்கம் உண்டு…கர்நாடக,
இசையில் ஹம்ஸத்வனி, ஹம்ஸநாதம், ஹம்ஸாநந்தி என்று மூன்று வகை இராகங்கள்…ஹம்ஸத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன..!

ஸ்ரீஹர்ஷர் எழுதிய நளசரிதத்தில் ஹம்ஸத்துக்கு முக்கிய கதாபாத்திரம் குடுக்கப்பட்டிருக்கிறது..தமிழில் புகழேந்திப்புலவர், நளவெண்பாவாக இதை எழுதினார்..இராஜஹம்ஸம் என்கிற பொன்னிற அன்னம் தமயந்திக்கும், நளனுக்கும் இடையே காதல் தூது போகும்..!

தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் தூது இலக்கியமும் ஒரு வகை..அன்னம் விடு தூது…அதில் முதன்மையானது..
“அன்னச்சேவல் அன்னச்சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்…” என்று ஆரம்பிக்கும் இந்தப் புறநானூற்றுப் பாடலை, பாண்டிய நாட்டைச் சேர்ந்த பிசிராந்தையார் என்கிற புலவர், சோழமன்னன் கோப்பெருநற்கிள்ளிக்கு அன்னச்சேவலைத்(ஆண் அன்னம்) தூதாக அனுப்பி, தன்னுடைய நட்பைப் போற்றியது ஒரு மிகச் சிறந்த உதாரணம்…!

சங்கக்காலத்தில் அன்னம், பொதிகை மலையில் வாழ்ந்திருந்ததாக இலக்கியங்கள் இயம்புகின்றன..சிவந்த கால்களையும், மென்மையான தூவிகளையும் கொண்டது அன்னம்..

“செந்நெல் வயலில் துஞ்சும் அன்னம்..”….நற்றிணை.
“குறுங்கால் அன்னம் குவவுமணல் சேக்கும் கடல்சூழ் மண்டிலம்..”….குறுந்தொகை.
”துதிக்கால் அன்னம் துணைசேத்து மிதிக்கும் தண்கடல் வளை..”…ஐங்குறுநூறு.
”அணி நடை அன்னமாண்பெடை..”…அகநானூறு

மகளிரை அன்னம் அனையார் என்று பாராட்டுவது வழக்கம்..அன்னத்தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்படும்..பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும்…

கம்பனின் இராமாவதாரத்தில், இயற்கையை வர்ணிக்கிற காட்சிகளில் எல்லாம் அன்னப்பட்சிக்கு ஓரிடம் உண்டு..

அரிமலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரிகுழல் புக்க இடம் புகல்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது.

கிஷ்கிந்தா காண்டம்….பம்பைப் படலம்..

அந்தப் பம்பை நீர்நிலை, எல்லா இடங்களிலும் தாமரை மலரில் உள்ள அன்னப் பறவைகள், “அழகானக் கூந்தலையுடைய சீதை சென்ற இடத்தை அறிந்து சொல்ல முடியாத நாங்கள், இராமனின் அழகிய முகத்தைப் பார்க்காமல் இறந்து விடுவோம்….” என்று தீயில் புகுவன போல் தோன்றும் தன்மையுடையது…

பாலையும், நீரையும் பிரித்துப் பாலை மட்டுமே அருந்தும் தன்மையுடையது அன்னம்…அன்னப்பட்சி விவேகத்தின் சின்னம்..ஹம்ஸம் சாரத்தைக் கிரஹிப்பதுபோல், ஞானியர் உலகியலைத் துறந்து, பரம்பொருளைப் பற்றி நினைப்பர்…அதனால்தான் அவர்களுக்குப் பரமஹம்ஸர் என்று பெயர்..உதாரணத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பரமஹம்ஸ யோகானாந்தா போன்ற ஞானிகளைச் சொல்லலாம்…

நல்லவை போற்றி, அல்லவை விலக்கி…நாமும் வாழ்வை அமைத்துக் கொள்ளலாம் அன்னப்பட்சி போல….:)
See More


 
.
 

No comments:

Post a Comment