Thursday, January 8, 2015

அதீத உயரமும், அனாயச வலிமையும் கொண்டது யானை…நம் மரபின் தொன்ம நிகழ்வுகளில் யானை ஒரு முக்கியக் குறியீடு..

யானை இல்லாத ஒரு நாட்டைக் கற்பனை செய்ய முடியவில்லை…ஒரு முறை எங்கள் குலகுரு…ஸ்ரீ மகாப்பெரியவாளிடம், “ உலகின் அழகான விஷயம் எது..?..” என்று கேட்டபோது, “ யானையும், சமுத்திரமும்தான் மிகவும் அழகு…” என்றார்… அளவில் பெரியதான ஒரு விஷயம்…நம்மை உடனே வசீகரிக்கிறது….ஆபத்தான அழகு என்றும் சொல்லலாம்…யானைக்கு மதம...் பிடித்து விட்டால் என்னவாகும்….? கடல் பொங்கி, பிரளயம் வந்தால் என்ன நடக்கும்…? வலியதைத் தள்ளி நின்று ரசிக்க வேண்டும்…!

இந்திய யானை சராசரியாக 11 அடி உயரமும், 6000 கிலோ எடையும் உடையது…70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை…பொதுவாக யானையைக் கரிய நிறம் என்று சொன்னாலும், அது கருஞ்சாம்பல் நிறத்தை ஒத்தது…

அத்தனை பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு யானை நடப்பதும், மென்மையான துதிக்கையால் வலிமையானப் பொருட்களை எடுப்பதும் பார்க்க பார்க்க ஆச்சரியம்தான்…துதிக்கையால் நம் தலையைத் தடவும்போது யானையின் மென்மையை நம்மால் உணரமுடியும்…கள்ளங்கபடமற்ற குழந்தைத்தன்மை அப்பட்டமாய் அந்தத் தடவலில் தெரியும்…அதனால்தானோ என்னவோ, குழந்தைகளுக்கு மிக விருப்பமான விலங்குகள் பட்டியலில் யானைக்குத் தனியிடம்…காரணம் யானை அன்புக்கு அடிமையாகும் ஒரு வல்லினம்…யானையைப் பார்க்கும்போதெல்லாம் நம்மையுமறியாமல் பரிவும், பாசமும் நமக்குள்ளே ஊற்றெடுக்கும்…

முடியாட்சி காலத்தில் யானைக்கு முக்கிய இடம் இருந்திருக்கிறது…யானைப்படை தான் போர்க்காலத்தில் முதலில் அணிவகுத்து நிற்கும்…கோட்டை மதிற்சுவர்களை யானைப்படைதான் தகர்த்தெறியும்…இந்திய மன்னர்களின் யானைப்படையைப் பார்த்து, கைபர் கணவாய் வழியே வந்த இஸ்லாமியர்கள் முதலில் பயந்துதான் போனார்கள்..

யானை மீது அம்பாரி வைத்து, அதில் ஆரோகணித்து, வீதி வலம் வருவதென்பது மன்னர்களின் பெருமையைக் குறிக்கும்…ஒளரங்கசீப் காலம் வரை இந்த யானை வீதியுலா நடந்து வந்திருக்கிறது…திருவிழாக்காலங்களில் யானையின் மீதேறி ஸ்வாமி புறப்பாடு நடப்பது, இப்பொழுதும் நடைமுறையில் இருக்கிறது….

ஆனை முகத்தோனை….விநாயகனை நாம் முழுமுதற் கடவுளாகப் போற்றுகிறோம்…தேவர்களின் தலைவனான தேவேந்திரனுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானை வாகனமாகச் சொல்லப்படுகிறது….

சைவ சித்தாந்தத்தில் “ வெள்ளை யானை மீதேறிப் போதல்….” என்கிற அனுபவம்..ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்கி, சூட்சும உலகத்துக்குப் போவதைக் குறிக்கும்…

யானை இடம் பெறாத இலக்கியமே இல்லை…சங்க இலக்கியத்தில் யானைக்கு விதவிதமான பெயர்கள்….வேழம், கரி, வாரணம், குஞ்சரம், களிறு( ஆண் யானை ), பிடி ( பெண் யானை )….

”வேழமுடைத்து மலைநாடு ( சேரநாடு )”…ஒளவையார்…

”துங்கக்கரி முகத்துத் தூமணியே…நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா…”…..ஒளவையார்…

வாரணமாயிரம் என்ற பெயரில் பத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார் கோதை நாச்சியார்…வைணவத் திருமணச்சடங்கில் இவை முக்கிய இடம் பெறுகின்றன…

”வாரணமாயிரம் சூழ வலம்வந்து
நாரணநம்பி நடக்கின்றா னென்றெதிர்….” நாச்சியார் திருமொழி…

”குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை…”….தொல்காப்பியம்..

” கன்று தன் வயமுலை மார்ந்த தினை பிடி உண்ணும் பெருங்கல் நாட…” ….குறுந்தொகை…

”ஓங்கெழில் யானை மிதிப்பச் சேறாயிற்றே…”…முத்தொள்ளாயிரம்…

”மூண்ட அமர்க்களத்து மூரிக்களிறு…” …வெண்பாப் பாட்டியல்…

”கடமா களியானை யுரித்தவனே
கரி காடிடமா அனல் வீசி நின்று….”…தேவாரம்…

”களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே…’’ … புறநானூறு…

”அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி…”… களவழி நாற்பது…

கம்பன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் யானையைக் கொண்டாடுகிறான்…

மாடு வென்றி ஓர் மாதிர யானையின்
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்
தோடுகின்றதும் ஒத்துளன் ஆயினன்…

கிஷ்கிந்தா காண்டம்….கிஷ்கிந்தைப் படலம்…

பக்கத்தில் உள்ள வெற்றியையுடைய ஒரு திக்கு யானையின் இளங்கன்று விலகிச் சென்று தவறிப் போனால், அதைத் தேடுவதாய் அந்த யானையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அது சென்ற இடத்தைக் குறித்து விரைவாகச் செல்லும் வேறொரு திக்கு யானையைப் போன்றவன் ஆனான் இலக்குவன்…

ஆண்டுதோறும் யானைகளுக்கு முதுமலையில் 40 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்துகிறது தமிழக அரசு…நினைவில் காடுள்ள மிருகத்தை நாட்டுச்சூழலில் பழக்கி, வருடந்தோறும் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பது போன்ற ஓர் அனுபவம் இந்த முகாமில் யானைகளுக்குக் கிடைக்கிறது…! யானை நம் பண்பாட்டின் சின்னம்..தந்தத்திற்காக அதை வேட்டையாடாமல், அந்தப் பேரினத்தைப் பேரன்பு காட்டி, பேணிக் காப்போம்….:)
See More
.
 
 
 
 
 

No comments:

Post a Comment