Thursday, January 8, 2015

சுந்தரம் என்றால் அழகு…முழுக்க முழுக்க அழகியல் அம்சங்கள் நிறைந்த பகுதி இது….

சுந்தர காண்டம் அறம், மறம் இரண்டுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் உச்சநிலையைச் சித்தரிக்கின்றது…முடிவில் அறமே வெல்லும் என்னும் நம்பிக்கையை நாம் அடைகிறோம்…

இக்காண்டம் கடற்கரையில் தொடங்கி, கடற்கரையில் முடிவடைகிறது…” ஆண்டகைக் கண்டான்..” என்று தொடங்கி, “ உடன் பொருந்திப் போவார் கண்டார்…” என்று முடிந்திருப்பது, இக்காண்டம் முழுவ...துமொரு காட்சிக் காண்டம் என்பதைத் தெரிவிக்கும்…

அனுமன் இலங்கையில் கழித்த காலம்…முதல் நாள் ஓரிரவும், மறுநாள் பகலும் அதையொட்டிய இரவும் எனக் கொள்ளலாம்…இந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்ச்சிகளே சுந்தர காண்டம்…

இலங்கை…ஸ்ரீலங்கா, இலங்காபுரி, நாகதீபம்…தொல் பழங்காலத்திலிருந்தே இருந்துவரும் ஒரு தீவுப்பகுதி…மூத்தகுடியான தமிழ்க்குடி கோலோச்சிய இடம் இலங்கை….

முற்றிலும் கடல் சூழ்ந்த இயற்கை எழில்மிகு நிலப்பரப்பை உடையது. இலங்கையில் பெளத்த மதத்தைப் பரப்பிய பெருமை மெளரியப்பேரரசர் அசோகரையேச் சாரும்… சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவே இருந்து வந்தது இலங்கை…பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து பிப்ரவரி 4, 1948 –இல் விடுதலை பெற்றது…

சீதையைச் சிறை வைத்திருந்த அசோக வனம், இலங்கையின் நுவரேலியா பகுதியில், சீதா எலியா என்ற பெயரில் இன்றும் இருக்கிறது…!

சங்க இலக்கியங்களில் இலங்கையைப் பற்றிய குறிப்புகள் சில இடங்களில் காணப்படுகின்றன… சிலப்பதிகாரத்தில் இலங்கை மன்னன் கயவாகு கண்ணகிக்கு சிலை எடுத்ததாக ஒரு செய்தி வருகிறது…

“ கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டமும்…” … சிலப்பதிகாரம்…

மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு, இலங்கையில் உள்ள ஒரு இடம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்…

“ இலங்கைக்கே பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்…” …பழமொழி நானூறு….

“ இலங்கை அகழி கடல்சூழ் அரணம் போன்ற..”… புறத்திரட்டு….

கம்பநாட்டாழ்வார் இலங்கையின் எழிலைப் பல பாடல்களில் பாடியிருக்கிறார்…

கண்டனன் இலங்கை மூதூர்க் கடிபொழிற் கனகநாஞ்சில்
மண்டல மதிலுங் கொற்ற வாயிலு மணியிற் செய்த
வெண்டளக் களப மாட வீதியும் பிறவுமெல்லாம்
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி யார்த்தான்…

சுந்தர காண்டம்… கடல் தாவு படலம்…

இலங்கை என்ற பழமையான நகரத்தின், காவலுள்ள சோலைகளையும், பொன்னாலான மதில் உறுப்புக்களையும், வட்டமான கோட்டைச் சுவரையும், வெற்றியை விளக்கும் கோபுர வாயிலையும், மணிகள் அழுத்தப் பெற்ற வெண்மையான சுண்ணச் சாந்து தீற்றிய மாடங்களை உடைய வீதிகளையும், ஒழிந்த பிறவற்றையும் அனுமன் கண்டு, அண்டங்களும், எட்டு திசைகளும் நடுங்கும்படி தன் தோள்களைக் கொட்டிக் கொண்டு ஆரவாரம் செய்தான்…

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் நிலவிவரும் இனக்கலவரத்தால் தமிழினம் அழிந்து வருகிறது…

அரசியல், சமூக நிலைப்பாடுகள் தாண்டி, இலங்கை அவசியம் சென்று ரசிக்க வேண்டிய இடம்…. :)
 
 
 

No comments:

Post a Comment