அநுமனோடு வர இயலாமைக்கு,
அடுக்கடுக்கான காரணங்களை அமைதியாக விளக்குகிறாள் வைதேகி…
” ஐயனே..நீ ஐம்பொறி அடக்கியவன்..
ஆனாலும், நின்னையும் ஆண் எனக் கூறும் இவ்வுலகம்..எம்பெருமானின் மேனியல்லாமல் நான் இவ்வுரு
தீண்டுதல் கூடுமோ…? “
“ தேசமுன் அளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைகளால் என்னைத்
தீண்டும் வண்ணம்…”
…கோதை நாச்சியார்… நாச்சியார்
திருமொழி…
” கீழ்மை குணமுடைய இராவணன்
என்னைத் தீண்டியிருந்தால், அவனுடலில் உயிர் பொருந்தியிருக்குமோ…என்னைத் தொட்ட அந்தக்
கணத்திலேயே மாண்டு போவான் என்று கருதியே, பர்ணசாலையை அடியோடு பெயர்த்து என்னை எடுத்துக்கொண்டு
வந்தான்…”
” உன்னை விரும்பாத மாதரை
நீ தீண்டினால், உன் தலை அறுந்து, உதிர்ந்து போகுமென்று பிரம்மதேவர் இட்ட சாபம் ஒன்று
இராவணனுக்கு உண்டு…அந்த சாபம்தான் இதுவரை என்னுயிரைக் காக்கிறது…வீடணனுடைய மகளாகிய
திரிசடை என்பவள், என் மேல் வைத்துள்ள இரக்கத்தினால் இந்தச் செய்தியைச் சொன்னாள்…”
” இலக்குவன் அமைத்த பர்ணசாலை
இங்கே நிலைத்து நிற்பதை உன் கண்களால் பார்ப்பாயாக….ஒருபோதும் பர்ணசாலையை விட்டு நான்
நீங்குவதில்லை..எப்போதாவது அருகிலிருக்கும் நாண் மலர்ப்பொய்கையை நண்ணுவேன்…இந்தப் பொய்கையில்
பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பார்க்கும்போது, வில்வீரனான எம்பிரானின் திருமேனியைக்
கண்டது போன்ற ஓர் ஆறுதல் உண்டாகும்…”
“ சாயல் சாமத் திருமேனி
தண்பா சடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே…”
…நம்மாழ்வார்…திருவாய்மொழி…
” ஐயனே…இனி வேதநாயகன் பால்
திரும்பிப் போவதே நீ செய்யத்தக்க செயலாகும்…” என்றாள் பிராட்டி…
பிராட்டியின் சொற்களைக்
கேட்ட அநுமன்,
“ நன்று நன்று இவ்வுலகுடைய
நாயகன்
தன்றுணைப் பெருந்தேவி தவத்தொழில்
என்று சிந்தை களித்து உவந்து
ஏத்தினான்…”
“ தேவி.. உன் பிரிவினால்
மருளும் மன்னவர்க்கு யான் சொல்லும் வாசகம் அருள்வாய்…” என்று இறைஞ்சி, பிராட்டியின்
திருவடிகளைத் தொழுதான்…
பிராட்டி இராமபிரானுக்குச்
சொன்ன செய்திகள், சுந்தர காண்டத்தில் மிகவும் முக்கியமானவை… ஊனினை உருக்கி, உணர்வைப்
பேரருவியாய்ப் பெருக்கெடுத்து ஓடச்செய்பவை…!
“ இன்னும் ஒரு திங்கள்தான்
நான் இங்கிருப்பேன்…பின்னை ஆவி பிடிக்கின்றிலேன்….இது என் மன்னன் மேல் ஆணை…
“ செங்கண்மால் சேவடிக்கீழ்
அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து,
ஒருநாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்றுரையீரே…”
…கோதை நாச்சியார்…நாச்சியார்
திருமொழி…
“ ஆரந்தாழ் திருமார்பற்கு
ஏற்ற தாரம் நான் அலன் ஏனும், அகத்தில் ஈரம் இல்லையென்றாலும், தன் வீரம் காத்தலை வேண்டென்று
வேண்டுவாய்…”
”இராமபிரான் கட்டளைப்படி
என்னைக் காத்துக் கொண்டிருந்த இலக்குவனிடம், கொடிய இச்சிறையினின்று என்னை விடுதலை செய்யும்
கடமை உள்ளது என்று ஒரு வார்த்தை சொல்வாயாக…”
“ ஒரு மாதத்திற்குள் இராமபிரான்
இங்கு வரவில்லையென்றால், கங்கை நதிக்கரையில் அடியாளுக்கு அந்திமக் கிரியையைச் செய்து
முடிக்கட்டும் என்று செப்புவாய்…”
“ வந்து எனைக் கரம் பற்றிய
வைகல்வாய்
இந்த இப்பிறவிக்கு இரு
மாதரைச்
சிந்தையாலும் தொடேன் என்ற
செவ்வரம்
தந்த வார்த்தை திருச்செவி
சாற்றுவாய்…”
இராமாவதாரத்தில் எம்பெருமான்
ஏகபத்னி விரதன் என்பதை கம்பன் கவித்துவமாக, ‘’ இந்த இப்பிறவிக்கு” என்கிறான்…
“ கூற்றுத்தாய் சொல்லக்
கொடிய வனம் போன
சீற்றமிலாதானைப் பாடிப்
பற
சீதை மணாளனைப் பாடிப் பற….”
…பெரியாழ்வார்…பெரியாழ்வார்
திருமொழி…. … J
No comments:
Post a Comment