அநுமன்…சீதாப்பிராட்டியிடம் சூடாமணியைப் பெற்றுக்கொண்டு, அசோக வனத்தின் ஊடே நடந்து சென்றான்…
தான் வந்து சென்றதை இராவணனுக்கு உணர்த்த வேண்டும் என்றெண்ணி, பிராட்டிக்காகக் குருகிய உருவை, “குன்றமிரு தோளனைய தன்னுருவு கொண்டான்” விஸ்வரூபமாக்கி அந்தச் சோலையை அடியோடு துகைத்தான்…
செடி, கொடி, மரம்… எல்லாமும் முடிந்தன…பிளந்தன… முரிந்தன…மடிந்தன…ஒடிந்தன…பொடித்தன…தகர்ந்தன…
உதிர்ந்தன… மொத்த சோலையும் சின்ன பின்னமாயின…
மரங்கள் வேரோடு சாய்ந்தவிதம் பூகம்பத்தை நினைவூட்டுவதாக இருந்தது…
மரங்களின் நிலை இதுவென்றால்…விலங்கு, பறவைகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ…?
கதறின…வெருவி உள்ளங் கலங்கின…கண்கள் குதறின…பதைத்து வானிற் பறந்தன…பார்வீழ்ந்து உதறின…சிறகை மீள ஒடுக்கின… ஒட்டுமொத்தமாய் அழிந்து போயின…
பிராட்டி தங்கியிருக்கும் பர்ணசாலையில், அவளுக்கு நிழலாய் இருந்த ஒரேயொரு சிம்சுபா மரம் மட்டும் அழிபடாமல் பிழைத்தது…
பிரளயத்தில் உலகம் யாவையும் அழியவும், அழியாது தனித்து நிற்கும் ஆலமரத்தின் ஓர் இலை மீது சிறு குழந்தை வடிவில் எம்பெருமான் பள்ளி கொண்டிருப்பான் என்பது ஐதீகம்…
“ ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே…”
…குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி…
“ அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்…”
…கோதை நாச்சியார்…நாச்சியார் திருமொழி…
அந்நிகழ்வை நினைவு படுத்துவதுபோல், இந்த ஒருமரம் பிழைத்தது…
ஊழியின் இறுதிக்கால உருத்திர மூர்த்தியை ஒத்திருந்ததாம் அநுமனின் தோற்றம்…!
அப்போது சூரியோதயம் ஆரம்பித்து விட்டது… உறங்கிக் கொண்டிருந்த அரக்கியர் எழுந்து, அநுமனின் உருவத்தைப் பார்த்து; பயந்துபோய் பிராட்டியிடம், “ இதோ தெரியும் இஃது என்ன உருவம்…? இது யாரோ..? நங்கையே நீ அறிவாயோ..?..” என்று வினவினர்..
“ தீயவர் தீய செய்தால்
தீயவரே அறிவர்…தூயவர் துணிதல்
உண்டோ…இவையெல்லாம் அரக்கியர்களாகிய
உங்களுடைய சூழ்ச்சிதான்…” என்றாள் பிராட்டி…
அநுமன் அங்கிருந்த ஓர் வேள்வி மண்டபத்தைப் பெயர்த்தெடுத்து இலங்கைநகர் மீது வீசியெறிந்தான்.. மாட மாளிகைகள் தீப்பற்றியெறிந்தன…வீர்ர்கள் அரண்டு போய், ஓடோடி இலங்கேஸ்வரனிடம் முறையிட்டனர்..
“ கிரிபடு குவவுத்
திண்டோட் குரங்கிடை கிழித்து வீச..”
“ மலை போன்ற திரண்ட
வலிய தோள்களையுடைய ஒரு மாபெரும் குரங்கு…அசோக வனத்திடை புகுந்தழித்து விட்டது… தெய்வ இலங்கையும் சிதைந்தது…” என்றனர்..
“ ஒரு குரங்கினால்
அசோக வனம் அழிந்தது.. இலங்கை சிதைந்தது என்று நீங்கள் சொல்வதை மூடர்கள் கூடச் சொல்லார்…” என்று இராவணன் வீர்ர்களைக் கேலி செய்து
சிரித்தான்…
அவ்வாறு அவன் இகழ்ந்ததைக் கண்டு, காவல் வீர்ர்கள், “ அக்குரங்கு சாதாரணக் குரங்கல்ல…மும்முதற் கடவுளும் ஓருருவாகி வந்திருக்கும்
வடிவினையுடையது…யாராலும் இந்த
மாருதியை வெல்ல முடியாது. அரசனே..இதனை நீயே காண்பாயாக…” என்று அச்சமீதூற, நடுக்கத்தோடு கூறினார்…
அண்டமே பிளந்து விள்ளப்பட்டு விட்டது என்று கூறும்படி, அநுமன் ஆரவாரத்தோடு இலங்கைநகரின் முக்கிய
தெருக்களில் வந்து நின்றான்…அநுமன் ஆர்த்ததால் எழுந்து கிளம்பிய ஓசை இராவணனின் காதுகளின் வழியே உட்புகுந்து
சென்றது..
“ நன்றுங் கொடிய
நமன்தமர்கள்
நலிந்து வலிந்தென்னைப் பற்றும் போது
அன்றங்கு நீயென்னைக் காக்க வேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளியானே…”
…பெரியாழ்வார்…பெரியாழ்வார் திருமொழி… …J
No comments:
Post a Comment