அநுமனின் முழக்கத்தைக் கேட்ட இலங்கேஸ்வரன் முகத்தில் அற்பமாக சிறுநகை தோன்றியது.. “ புல்லிய முறுவல்..” என்கிறான் கம்பன்…அநுமனை அற்பம் என்று நினைத்ததன் விளைவை, அடுத்தடுத்து அனுபவிக்கத்தானே போகிறான்….?!
வீர்ர்களை ஏவி, ” ஆகாயத்திலும் வழியில்லாமல் தடை செய்து, அவ்வானரம் தப்பிச் செல்லாதபடி விரைவில் பற்றிக் கொணர்வீராக…” என்று ஆணையிட்டான்…
” பற்று “ என்கிற வார்த்தைக்குப் பலபொருள் உண்டு…
“ கைப்பற்று “…. ஒரு நாட்டை, செல்வத்தைத் தனதாக்கிக் கொள்வது..
“ கைத்தலம் பற்று “…. ஒருவரையொருவர் கரம் பிடிப்பது..
“ மொழிப்பற்று “…. மொழியின் மீது விருப்பம்..
“ பற்றற்ற வாழ்வு “…. எதிலும் விருப்பமில்லா வாழ்க்கை..
பக்தி இலக்கியங்களில் “ பற்று “ என்கிற சொல், இறைவனிடம் பக்தி, அன்பு கொள்வது என்று பொருள் படும்…
இராவணனின் உத்தரவு வேடிக்கையாக அல்லவோ இருக்கிறது….?!
வாயு புத்ரனை, அஞ்சனை மைந்தனை, மாருதியை, சொல்லின் செல்வனை, இராமப்பற்றில் தன் வாழ்வைப் பற்றிக் கொண்டவனை… வீர்ர்களால் பற்றிக் கொண்டு வர முடியுமா….?!
அநுமனோடு போர் செய்யச் செல்லும் கிங்கரர்கள் எப்படிப் பட்டவர்கள்..?
அவர் தம் மேனி மலையினும் பெரியர்… நிறம் கானினும் பெரியர்… அவர்களின் ஓசை கடலினும் பெரியர்… கீர்த்தி வானினும் பெரியர்… அசுரகுலம் என்பதால் மனிதனுக்கு ஒண்ணாத உவமைப் பொருட்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது….
அவ்வரக்க வீர்ர்கள் போருக்கு வரும் செயலை அநுமன் நேரில் பார்த்தான்… அசுர கிங்கரர் அநுமனைப் பார்த்து, “ இவன் இவன் இவன் என நின்றார்…”
ஒரு மரத்தைப் பெயர்த்துக் கொண்டு, கிங்கரர்களை ஓங்கியடித்தான் அநுமன்…
“ தொடையொடு முதுகு துணிந்தார்…
சுழிபடு குருதி சொரிந்தார்….”
அவர்களுடைய கால்களையும், தோள்களையும் பிடுங்கி எறிந்தான்…தன்னுடைய வலிய வாலினால், அவர்களைச் சுற்றி, பம்பரம் போலச் சுழற்றி வீசினான்….அநுமனை எதிர்த்துப் போரிட்டவர்கள் “ உடல் ஓடும் உலகு துறந்தார்..” மாருதியால் மண்டை பிளக்கப்பட்டு வழிந்தோடியது அரக்கர்தம் குருதி…!
கிங்கரர் அழிந்த செய்தியைக் காவலர் இராவணனுக்குத் தெரிவித்தனர்… செய்தி கேட்டு, கோபத்தால் விழி சிவந்து; தன்னுடைய முதன்மந்திரியான பிரஹஸ்தன் குமாரனும், இராவணனின் மெய்க்காவல் படைத்தலைவனுமான சம்புமாலியை அழைத்து, “ அந்தக் குரங்கை வளைத்து, அதன் வலிமையை அழித்து, நீண்ட கயிற்றால் கட்டி, என்முன் கொண்டு வந்து தந்து, என் மன சினம் தணித்தி..” என்றான்….
சம்புமாலி தன் படைகளுடன் போருக்குப் புறப்பட்டான்…தன் முன்னே வந்து நின்ற பெரிய சேனையைப் பார்த்து, “ பூவும் குன்றும் பிளக்க தோள் கொட்டினான் “ அநுமன்…
வலக்கை போர் புரிய, இடக்கையால் படைக்கலங்களை அழித்தான்… யானைகள் முறிபட்டு இறந்தன…
நெடுந்தேர்கள் நெரிந்தன… பரி திறள் மறிந்தன…
அரக்க வீர்ர்கள் அநுமனின் பராக்கிரமத்தைப் பார்த்து, வியந்த
வண்ணம் விழுந்து இறந்து போயினர்… கம்பனின் கவித் திறமைக்கு ஒரு பாடலைச் சான்றாக இங்கே
எடுத்துக் கொள்ளலாம்… ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்…!
“ வெகுண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்
உருண்டனர் உலைந்தனர் உழைந்தனர் குலைந்தார்
சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்….”
சம்புமாலி அநுமன் மேல் சந்திரபாணம் என்னும் அம்பை எய்தினான்…அநுமன்
அந்த அம்பைக் கைகளால் சிந்தும்படி அடித்து, அவன் தேரினுள் புகுந்து, கையிற் பிடித்த
வில்லைப் பிடுங்கி, கழுத்தின் நடுவே மாட்டி, அவன் தலை தரையிடத்தே விழும்படி இழுத்தழித்தான்…
சம்புமாலியின் வதத்தை, நேரில் பார்த்த பிழைத்திருந்த சில
வீர்ர்கள் பருத்துக் காய்ந்து போன தோல் போன்ற உருவத்தினராகி, இராவணனின் அரண்மனையை நோக்கி
ஓடினர்…
“ படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை யீந்தானைப் பாடிப் பற…!
அயோத்தியர் கோமானை பாடிப் பற…!...”
…பெரியாழ்வார்…. பெரியாழ்வார் திருமொழி…. …. J
No comments:
Post a Comment