Thursday, August 13, 2015


இலங்காபுரிக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்து மகாசமுத்திரத்தைக் கடந்தாக வேண்டும்…

“ கொங்கிற் பொலிந்த தாமரையின்

குழுவுந் துயில்வுற்று இதழ் குவிக்கும்

கங்குற் பொழுதுந் துயிலாத

கண்ணன் கடலைக் கண்ணுற்றான்…”

தேனுடன் திகழ்கின்ற தாமரை மலர்களும், இரவில் இதழ்களைக் குவித்துக் கொள்ளும்… பிராட்டியைப் பிரிந்தபின்பு, இரவு நேரத்திலும்; துயிலாத இராமபிரான், அந்தப் பெருங்கடலைக் கண்டான்… எம்பெருமானின் கண்ணைத் தாமரைக்கு உவமையாக்குகிறான் கம்பன்…

 

கடலைக் காண்கிறபோது, காதல்மனைவியைப் பிரிந்த துன்பம் எம்பிரானை வாட்டுகிறது…

“ பழிக்குங் காமன் பூங்கணைக்கும்

பற்றா நின்றான்…”

மன்மதனுடைய மலரம்புகளுக்கும் இலக்காகத் திகழ்ந்த இராமபிரானுடைய அழகிய புயங்கள் மீது, கடலின் உயர்ந்த அலைகளிலிருந்து, தென்றல் தூற்றும் திவலை( அலைத்துளி) கொல்லன் உலையிடத்துத் துள்ளும் தீப்பொறியைப் போல அவனைச் சுடுகிறது…. காதலர் பிரிவுக்கு எப்பொழுதுமே, “ நீர்த்திவலை சுடுதல் “ உவமையாகக் கூறுவது மரபு…

தமிழ்த்திரைப்படங்களில் நடுநிசியில், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்துத் தலையில் கொட்டிக் கொள்ளும் காட்சிகளை நினைவுப்படுத்திக் கொள்ளலாம்…. J

 

“ தூரமில்லை மயிலிருந்த சூழல் என்று மனம் செல்ல….”

மயில் போன்ற சாயலுடைய பிராட்டி, சிறைப்பட்டிருக்கும் இடம் வெகு தூரத்தில் இல்லையென்று…. அவளிருக்குமிடம் மனம் செல்கிறது….!

பிராட்டி சிந்துகின்ற கண்ணீர்த்துளிகள்; அலைகள் போல் மென்மேல் பெருகிவந்து, வள்ளல் மலர்த்தாளில் வீழ்வது ஏய்க்கும்… அலைகள்; எம்பெருமானின்,  தொடுகழல் கமலம் அன்ன தாளைத் தழுவுதலை, கம்பன் எத்தனை அழகாகக் கற்பனை செய்கிறான்…J

 

இராமாவதாரத்தில்தான், “ வள்ளல் “ என்கிற அடைமொழியில் எம்பெருமான் போற்றப்படுகிறான்…

“ தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்….”

கோதை நாசியார்…. நாச்சியார் திருமொழி….

“ கள்வா ! கடன்மல்லைக் கிடந்த கரும்பே !

வள்ளால் ! உன்னை யெங்ஙனம் நான் மறக்கேனே !...”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

குயில் போன்ற குரலினளான பிராட்டியின் துன்பத்தைப் போக்கவும், தேவர்கட்கு அரக்கரால் நிகழ்ந்த மனக்குறைகளை ஒழிக்கவும், “ கை வெம் சிலையன் “ திருக்கரத்தில் கோதண்டம் என்னும் வில்லை ஏந்தியவனும், கங்கைநதி பாயப்பெற்ற அழகிய கோசல நாட்டை உடையவனான ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியைப்     பார்த்து, அலைகள் கைகளை உயர்த்தி, பெருமுழக்கத்துடன் ஆரவாரிக்கின்றனவாம்…!

 

” இன்ன தாயக் கருங்கடலை

யெய்தி யிதனுக் கெழுமடங்கு

தன்ன தாய நெடுமானத்

துயரம் காதல் இவை தழைப்ப….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இத்தகையதான கரிய கடலையடைந்து; இந்தக் கடலைக் காட்டிலும் ஏழுமடங்காகத் தன்னிடமுள்ள மிக்க மானமும், துன்பமும், ஆசையுமாகிய இவைகளின் மேல்விளைவு என்னது ஆகும்…. இனி நிகழக்கூடிய செயல் என்ன…? என்று ஆராய்ந்திருந்தான் ஸ்ரீ இராமபிரான்….

 

“ யானே என்னை அறிய கிலாதே

யானே என்றன தேயென் றிருந்தேன்

யானே நீ என் உடைமையும் நீ

வானே ஏத்துமெம் வானவ ரேறே…!....”

நம்மாழ்வார்… திருவாய்மொழி….

 

 

 

 

 

Wednesday, August 5, 2015


” ஒன்றே யென்னின் ஒன்றேயாம்

பலவென் றுரைக்கிற பலவேயாம்

அன்றே யென்னின் அன்றேயாம்

ஆமே யென்னின் ஆமேயாம்

இன்றே யென்னின் இன்றேயாம்

இலதென் றுரைக்கின் இலதேயாம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா…”

யுத்த காண்டம்…. கடவுள் வாழ்த்து….

 

எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள் ஒன்றே…. இறைத் தத்துவத்தை உணர்த்துவதற்காக, பல்வேறு அவதாரங்களில் தன்னிருப்பை நிலைநிறுத்துகிறான்….

“ ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி…”

 

“ ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ…”

மாணிக்கவாசகர்…. திருவாசகம்….

 

இதே கருத்தை நம்மாழ்வாரும் திருவாய்மொழியில் வலியுறுத்துகிறார்…

“ ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும்….”

 

கவியரசர் கண்ணதாசன் எழுதிம் கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய, திருவிளையாடல் படப்பாடலை, “ ஒன்றானவன்… உருவில் இரண்டானவன்….”  இங்கு ஒப்பு நோக்கலாம்….!

 

ரூபம்…அரூபம்…எல்லாமுமான பரம்பொருள்… வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி நிற்கின்றான்…..

“ வானன்று… காலன்று… தீயன்று… நீரன்று… மண்ணுமன்று… நானன்று… நீயன்று… அசரீரியன்று… சரீரியன்றே…” என்பார் அருணகிரிநாதர்….! எல்லா வடிவும் அவனே…

 

“ ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உளனல்லன் இல்லை யல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோனை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே….”

நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

எம்பெருமான்… இந்நிறத்தவன்…. இவ்வண்ணத்தவன் என்று எழுத ஒண்ணாதவன்…!

அவன் இராமபிரானாக அவதரித்ததன் நோக்கம் யுத்த காண்டத்தில்தான் தெரிய வரும்…

 

இராமாயணம், மகாபாரதம்—இந்த இரண்டு இதிகாசங்களிலும் போருக்கான அடிப்படைக் காரணங்கள் “பெண்” என்கிற  அம்சமே… முன்னதில் பெண்ணைச் சிறையெடுத்ததும், பின்னதில் பெண்ணை அவமானப்படுத்தியதும்; முக்கிய காரணங்கள்…. மிகப்பெரிய போர் மூள்வதற்குப் பெண் காரணமாயிருந்திருக்கிறாள்…. அழிவு சக்தியா பெண்….? பெண்ணை ஆக்க சக்தியாக்கி எந்தவொரு இலக்கியமும் உருவாகவில்லையா….? பெண்ணை அழிவு சக்தி என்று உருவகித்தது ஆண்தானே…?! இறையின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது… அந்த நோக்கம் நிறைவேற பெண்சக்தி தேவை…!

 

வானர சேனைகள் கடற்கரையில் வந்து தங்கிய செய்தியுடன், கம்பன் யுத்த காண்டத்தைத் தொடங்குகிறான்…

பெருந்திரளாக வானரப்படை சென்று தங்கியதால், அந்தப் பாரம் தரிக்க மாட்டாது; தென்திசை தாழ, வடதிசை உயர்ந்தது…. வடக்கண் உள்ள மலைகளும், பிறவும் வானைச் சென்று தீண்டின… என்கிறான் கம்பன்…. என்னவொரு அழகான கற்பனை….?!

“ முலையா நிலைய வுயர்கிரியும்

வாழி வற்றா மறிகடலும்

மண்ணும் வடபால் வான்றோயப்

பாழித் தெற்குள்ளன பொருப்பும்

நிலனும் தாழப் பரந்தெழுந்த….”

யுத்த காண்டம்…. கடல்காண் படலம்….

இப்படித் தொடர்ச்சியாக உருவகப்படுத்துவதற்கு; தமிழ் இலக்கணத்தில், ”தொடர்பு உயர்வு நவிற்சியணி” என்பார்கள்….

 

எம்பெருமான்… பார்வதியை மணந்த காலத்து; வடதிசை உயர, தென்திசை தாழ்ந்து; அகத்தியர் தெற்கண் சென்று, உலகைச் சமன் செய்ததாகக் கூறப்படும் புராணச்செய்தியை இங்கு ஒப்பு நோக்கலாம்….

அரசியல் நிகழ்வுகளில் கூட, “ வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது…” என்று நாம் அடிக்கடி சொல்வதும் உண்டுதானே….!

 

“ கருமாமுகில் உருவா கனல் உருவா புனல் உருவா

பெருமால்வரை உருவா பிறவுருவா நினதுருவா

திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்சல சயனத்து

அருமா கடலமுதே உனதடியே சரணாமே….”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

 

 

 

 

 

 

 

 

Monday, July 6, 2015


தென்திசை நோக்கி வணங்கிய அநுமன், ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை நோக்கி, “ அண்டர் நாயக… கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்…! தென்திரை அலைகடல் இலங்கை தென்னகர் தன்னில்…இனி ஐயமும், பண்டு உள துயரமும் தவிர்த்தி….” என்றான்…

 

இரவில், கருநிறத்தரக்கியர் குழுவினிடையே மின் போல ஒளி வீசிய பிராட்டியின் திருவுருவம்; அநுமன் கண்களுக்கு நன்கு புலப்பட்டது என்பதை, “த்ருஷ்ட ஸீதா” என்று அநுமன் கூறியதாக வான்மீகத்தில் வருகிறது… கம்பன் அதைக் “ கண்டனென் கண்களால்..” என்கிறான்….

 

“ ஐயனே… உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உம்மைப் பெற்ற தசரதச்சக்கரவர்த்தியின் பெருமைக்கேற்ற மருமகள் என்னும் சிறப்புக்கும், மிதிலை வேந்தன் தன் பெரும் தனயை என்னும் தன்மைக்கும், தகைமை சான்ற என் பெரும் தெய்வமாய் உள்ளாள்…  இன்னமும் யான் அறிந்து கொண்ட செய்திகளைக் கேட்டருள்வீராக..”

 

“ கோதண்டராமனே…வீங்கு நீர் இலங்கை வெற்பில், நல்பெரும் தவநெறியில் பொருந்திய, பொன்னை ஒத்து இருப்பது போல பொறையில் நின்றாள் தையல் நல்லாள்… அவள் கண்களிலும், கருத்தினும், வாயினின்று தோன்றும் சொற்கள் ஒவ்வொன்றிலும். அண்ணல் வெம்காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப் புண்ணினும்; எங்கெங்கிலும் நீங்காது நீயே இருக்கின்றாய்…”

இராமபிரானை மனம், மெய், மொழி என்பவற்றால் எப்பொழுதும் பிரியாதிருந்தாள் பிராட்டி.. என்று அநுமன் வாயிலாகக் கம்பன் கூறுகிறான்…

 

“ ஐயனே… பொன்மயமான கற்பக விருக்ஷங்கள் உள்ள அசோக வனம் என்னும் சோலையின் உள்ளே, முன்னர் உன் தம்பி இலக்குவன், புற்களால் வேய்ந்து அமைத்த பர்ணசாலையில் தங்கியிருக்கிறாள்…. வானுயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சிய இலங்கேஸ்வரன், அவளிருந்த தரையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான்…”

 

“ இராவணன் பிராட்டியைத் தீண்டிலன் என்னும் உண்மையை; யான் எவ்வாறு உணர்ந்தேன்…? பிரமதேவன் படைத்த அண்டகோளம் பிளந்து போகவில்லை… ஆதிசேடனது தலைகளோடு கூடிய படம் கிழிந்து போகவில்லை… கடல்கள் பொங்கியெழுந்து, மேற்கிளம்பி, உலகங்களை அழித்துக் கொண்டு செல்லவில்லை….சூரிய, சந்திர சுடர்கள் யாவும் விழுந்தில…. என்ற இந்நிலைமைகள் வாய்மையால் நிலைபெற்றுள்ளன என்பதால் என் நாயகனே… எம் பிரானே.. நீ உணர்தி…”

 

அநுமன் இலங்கை முழுவதும் நாடி, பிராட்டியைக் கண்டடைந்த வரலாற்றைக் கூறினான்… “ கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்…”

“ பிராட்டி தன்னுயிரை போக்கிக் கொள்ளவிருந்த சமயத்தில், எளியேனான அடியேன் தடுத்து, அவள் பொன்னடி வணங்கி, இராமநாமம் சொன்னபோது; எம்பெருமானின் நாமம் சொல்லி எனக்குச் சுவர்க்கம் அளித்தவனானாய் என்று மகிழ்ந்து கூறினாள் பிராட்டி… நின் திருவாழியை யான் பேரடையாளமாகக் காட்ட அதனைப் பெற்றுக் கொண்டாள்…. இன்னும் ஒரு மாதகாலம் தான் உயிர் வைத்துக் கொண்டிருப்பேன் என்று அறுதியிட்டுக் கூறினாள்…. தன் துகிலின் வைத்திருந்த சூடாமணியை அடியேனிடம் கொடுத்தருளினாள்…. செங்கண்மாலே… என் உலகுடை நாயகனே…. இதைப் பெற்றுக் கொள்வாயாக…. “ என்று கூறி, சூடாமணியை இராமபிரானிடம் கொடுத்தனன் அநுமன்…

 

சூடாமணியைக் கண்ட இராமனின் நிலை…

“ பொடித்தன உரோமம் மேன்மேற் பொழிந்தன கண்ணீர் பொங்கித்

துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி

மடித்தது மணிவாய் ஆவி வருவது போவதாகித்

தடித்தது மேனி என்னே யாருளர் தன்மை தேர்வார்…”

சுந்தர காண்டம்… திருவடி தொழுத படலம்….

 

தமிழை நன்கு உணர்ந்து படிப்பவர்களுக்கு இந்தப் பாட்டுக்கு உரை சொல்ல வேண்டிய அவசியமில்லை… இராமாவதாரத்தில் எம்பெருமான் காதலில் கசிந்து, கண்ணீர் மல்கியது போல், வேறெந்த அவதாரத்திலும் தன்னை வருத்திக் கொள்ளவில்லை… அதனாலேயே இராமாவதாரம் சிறப்புடையதாயிற்று….

 

அப்பொழுது சுக்ரீவன் இராமபிரானைத் தேற்றி, “ ஐயனே… இனியும் நாம் காலம் தாழ்த்த வேண்டியதில்லை… விரைவாக வானரச் சேனையை அழைத்துச் செல்வோம்…” என்று கூறி, தென்திசை நோக்கிப் படைகளை விரைவுபடுத்தினான்…. வானரச்சேனை பன்னிரெண்டு நாட்கள் வழிநடந்து சென்று, தென்திசையில் உள்ள கடலை வந்தடைந்தனர்….

 

இந்தப் பதிவோடு சுந்தர காண்டம் நிறைவடைகிறது… அடுத்தப் பதிவு முதல் யுத்த காண்டம்… மீதி காண்டங்களை விடவும் சுந்தர காண்டத்தில் மனித உணர்வுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம்… எப்படி எழுதப் போகிறோம் என்று எனக்கு ஒரே மலைப்பாக இருந்தது… எளியேனையும் எழுத வைத்தது எம்பெருமானின் கருணையல்லவோ…?! அவனருளாலே அவன் தாள் பணிகிறேன்…!!!

 

“ நாறு நறும் பொழில் மாலிருஞ்

சோலை நம்பிக்கு நான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய் நேர்ந்து பராவி வைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான்

இன்று வந்திவை கொள்ளுங்கொலோ….”

கோதை நாச்சியார்… நாச்சியார் திருமொழி….

 

Sunday, June 7, 2015


ஆண்டகை, அஞ்சனை மைந்தன் அநுமன்; பிராட்டியின் கற்பாகிய தவச்சிறப்பை, வானரர்களுக்கு விளங்கும்படி தெளிவாகச் சொல்லி, அவளின் பேரடையாளமாக சூடாமணி என்னும் தலையணியைத் தான் கைக்கொண்டு வந்துள்ளதும் கூறித், தன் வெற்றிச் சிறப்பைத் தானே கூறிக்கொள்ள வெட்கமுற்றவனாய்; இலங்கையில் நடந்த போர் நிகழ்வுகளையும், தான் அந்நகரை நெருப்பிட்டுக் கொளுத்தி மீண்டதுமான செய்திகளை விளக்கமாக விளம்பினான்…

 

வானரர்கள் அநுமனை நோக்கி, “ நீ சொல்லாவிடினும், நீ அங்கு போர் புரிந்ததை உன் உடலில் காணப்படும் புண்களே தெரிவிக்கிறது… பிராட்டி உன்னுடன் திரும்பி வராத செயலிலேயே. தேவியின் கற்பின் திண்மையைத் தெரிதர உணர்ந்தோம்…இனி ஆலோசிக்க வேண்டியது யாதுமில்லை… நாம் இனி செய்யத்தக்கது…. இராமபிரானின் தேவியாகிய பிராட்டியைப் பார்த்து வந்த செய்தியைத் தாமதிக்காமல் விரைவில் சென்று அண்ணலிடத்தில் கூறி, அண்ணல் உள்ளத்து அரும்துயர் அகற்றல் ஆம்… நாம் இராமபிரானிடம் உடனே போவதே அறிவுள்ள காரியமாகும்…” என்று கூறி, விரைவில் எழுந்து சென்றனர்… அநுமன் இராமபிரான் இருக்குமிடம் நோக்கிச் சடுதியில் சென்றான்…

 

செங்கண்மாலான இராமபிரான், பிராட்டியைப் பிரிந்த துயரத்தால் சோர்வுற்று, ஓய்ந்து, உயிரடங்கியது போலிருந்த போதெல்லாம்; சூரியகுமாரனான சுக்ரீவன், சீரியச் சொற்களால் இராமபிரானைத் தேற்றினான்… இராமன் ஓய்ந்து, மீண்டும் உயிர் பெற்றவன் போலக் காணப்பெற்றான்… “ சோர்தொறுஞ் சோர்தொறும் உயிர்த்துத் தோன்றினான்…”

 

இராமன் தங்கியிருந்த மலை பிரசிரவரணம் என்று வான்மீகத்தில் வருகிறது…. கம்பன் அதைக் குறிப்பிடவில்லை.. இந்த இடத்தில், அநுமன் எப்படியும் நல்ல செய்தி கொண்டுவருவான் என்று இராமன் நினைத்தான் என்கிறான் கம்பன்… “ திண் திறல் அநுமனை நினையும் சிந்தையான்…”

 

எம்பெருமானின் பத்து அவதாரங்களில், இராமாவதாரத்தில் தான் எம்பெருமான் முழுக்க முழுக்க மனிதனாகவே வாழ்ந்து காட்டினான்… எந்தவொரு இடத்திலும் தான் இறையம்சம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை… அதனால்தான் இராமாவதாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது…. மனிதனின் உணர்வுகளுக்கும், வாழ்வியல் நெறிமுறைகளுக்கும் இராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை மேற்கோளாக எடுத்துக் கொள்ளலாம்…. மனிதன் கூட தெய்வமாகலாம் என்பதை இராமாவதாரத்தில் எம்பெருமான் மெய்ப்பித்துக் காட்டினான்….  மெய்யமால் ஐயன்….!

 

இந்தப் பரதகண்டத்தில் மிகச் சிறந்த மனிதன், மிகச் சிறந்த அரசன்.. என்று கொண்டாடப்படுபவன் இராமனே….! அவனுடைய ஆட்சிக்காலத்தைத் தான் பொற்காலம், இராமராஜ்ஜியம் என்கிறோம்… இராமராஜ்ஜியம் என்பது நமக்கெல்லாம் ஒரு கனவே…. இந்த ஜென்மத்தில் அந்தக் கனவு நனவாவதற்குச் சாத்தியக் கூறுகளேயில்லை…. ஆனால், அப்படியொரு ஆட்சி, இந்த நாட்டில் நடைபெற்றிருக்கிறது என்று நினைத்து நம்மை நாமே தேற்றிக் கொள்வோம்….!

 

வாலி, அநுமன், சுக்ரீவன் போன்றவர்கள்: தங்களுடைய அகவுணர்வால், இராமன் இறையம்சம் என்பதைப் புரிந்து கொண்டனர்…. கடுந்தவம் புரிந்த இராவணனாலேயே, இராமநாமத்தின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியவில்லை… மரணம் நெருங்கும் போதுதான் அவனுக்குப் புதிர் அவிழ்கிறது…. மாயை என்னவெல்லாம் செய்கிறது….?! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்…. இறையை இப்போதே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்….!

 

இராமபிரான் சுக்ரீவனிடம் வினவிய காலத்தில், தென்திசை உதித்த சூரியன் போல, “ இரவி என்பவன் தென்புலத்து உளன் என…”, அவர்கள் முன் தோன்றினான அநுமன்…! வந்தவுடனேயே இராமனின் திருவடி பணிந்தானில்லை….அவன் செய்த காரியம்தான் என்னே…?!

அவ்விடத்தை அடைந்த அநுமன், முதலில்; பூமியில் அவதரித்த திருமகளாம் பிராட்டி இருக்கும் தென்திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்…….! தாயாரை( வைணவத் தமிழில் அம்பாள் ) முதலில் வணங்கும் யுக்தி இது என்பேன்…!

 

குறிப்பினால் உணரும் கொள்கையான்…. எம்பெருமான்….கோதண்டபாணி….சீதாராமன்… அநுமன் வணங்கிய செயலை வைத்து, “ கண்டதும் உண்டவள் கற்பு நன்றெனக் கொண்டனன்….” இந்தக் காட்சியை விஷுவலாக யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது….!

 

அநுமன், ஆங்கு அவன் செய்கையே; பிராட்டியின் நன்னிலைக்கு ஓர் அளவுகோல் என்று ஓங்கிய உணர்வினால், எம்பெருமானின் தோள் வீங்கின…. கண்கள் புனல் விம்மின… அரும்துயர் நீங்கியது…. காதல் நீண்டது….!

 

“ அண்டமாய் எண்திசைக்கும்

ஆதியாய் நீதியான

பண்டமாம் பரம சோதி

நின்னையே பரவுவேனே….!...”

திருமங்கையாழ்வார்…. திருக்குறுந்தாண்டகம்….

 

Tuesday, June 2, 2015


” நமக்கு இவ்வளவு அழிவு செய்த அக்குரங்கை, உற்று அகலா முன்; பற்றிக் கொண்டு வாருங்கள்…” என்று கட்டளையிட்டான் இராவணன்…

 

கடலின் விளிம்பில், அநுமனை நாடி அருகுற்ற அரக்கவீர்ர்கள்; அவன் தனியாக இருப்பதைப் பார்த்தனர்… இந்த இடத்தில் கம்பனின் கவிப்புலமை எப்படித் தெறித்து விழுகிறது பாருங்கள்….?!

“ பற்றுதிர் பற்றுதிர் என்பார் எற்றுதிர் எற்றுதிர் என்பார்

முற்றினர் முற்று முனிந்தார் கற்றுணர் மாருதி கண்டான்…”

இவனைப் பிடித்துக்கொள்ளுங்கள்… பிடித்துக்கொள்ளுங்கள்… என்று சொல்வாரும், தாக்கி அடியுங்கள்… தாக்கி அடியுங்கள் என்று சொல்வாரும், அநுமனை வளைத்துக் கொண்டனர்….சொல்லின் செல்வன் அவர்களைப் பார்த்தான்…

 

வெவ்விய நெருப்புள்ள தன் வாலால், அவர்களை வளைத்துக் கொண்டான் அநுமன்… அரக்கவீர்ர்கள் அத்துணை பேரும் அழிந்து போயினர்… அநுமன் தன் வாலாற் கொளுத்திய தீயால், அசோகவனத்திலிருந்த பிராட்டிக்கு ஊறு வந்துவிட்டதோ என்று வருந்தினான்…ஆகாயத்தில் செல்லும் சாரணர், பிராட்டியிருக்கும் இடம் மட்டும் எரியாதிருக்கும் அதிசயத்தை; வியந்து பேசிக்கொண்டே செல்வதை உற்றுக்கேட்டு மனம் தேறினான்… அநுமன் இட்ட தீயால் அசோகவனமும், விபீஷணன் மாளிகையும் அன்றி, இலங்கை நகரில் மற்ற யாவும் அழிந்தன…!

 

பிராட்டியின் கற்பின் தன்மையைப் பாராட்டி உய்ந்தனன் அநுமன்… அசோகவனம் சென்று, பைந்தொடி தாள்கள் பணிந்தான்… அநுமனைக் கண்ட ஜானகி, மிகவும் குளிர்ச்சியடைந்தவளாய், “ யான் சொல்ல வேண்டியது வேறென்ன இருக்கிறது…?!.. உனக்கு வந்தனம்….” என்று அவனை வாழ்த்தினாள்….

 

“ தேவரீரைச் சேவிக்க விடை கொண்டேன்…” என்று சொல்லி பிராட்டியிடம் விடை பெற்றுக்கொண்டான் அநுமன்…” விரைவின் இவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்வேன்…” என்ற எண்ணமுடையவனாய், தன் மனத்தால் எம்பெருமானின் பூங்கழல் தொழுது, பேருருக் கொண்டு விசும்பிடைக் ( ஆகாய மார்க்கமாக ) கடிது போனான்…!

 

அநுமன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த அங்கதன் முதலிய வானர வீர்ர்கள் அமர்ந்திருந்த, சுரபுன்னை மரங்கள் அடர்ந்த மகேந்திர மலையினிடத்து வந்திறங்கினான் மாருதி..

 

பறவைக்குஞ்சுகள், இரை தேடச்சென்ற தாய்ப்பறவை வரக் கண்டன போல்; அநுமனைக் கண்டவுடன், உவகையில் உடல் பூரித்து நின்றனர்… “ தாய் வரக் கண்டது அன்ன உவகையிற் களித்தாரம்மா…”

மகிழ்ச்சியில் அழுதனர்… முன் நின்று ஆர்த்தனர்…. அநுமனைத் தொழுது வணங்கினர்…. அவனைக் கட்டித் தழுவினர்…. மாருதியைத் தூக்கிச் சுமந்தனர்… அன்பின் வழியது உயிர்நிலை… அன்பிற்குரியோரைக் காணாதிருந்து கண்டபோது; மகிழ்ச்சியால் அழுவதும், கண்ணீர் பெருக்குவதும் இயற்கை….

 

வானரர் அநுமனை நோக்கி, “ அண்ணலே… உன் ஒளி பொருந்திய முகமே… நற்செய்தியை எங்கட்கு உரைத்தது… அகத்தின் அழகு முகத்தில் தெரியும்… ஆதலால், தேனொடு கிழங்கும், காயும், கனியும் அரிதில் தேடிச் சிறப்புடன் இங்கு வைத்திருக்கிறோம்… அவற்றையெல்லாம் அருந்தி, உன் களைப்பைத் தீர்த்துக் கொள்வாயாக….” என்று அவனை உபசரித்தனர்….

 

அவ்வானரர்கள் அநுமனுடைய பாதங்களிலும், தோள்களிலும், தலையிலும், பெரிய கைகளிலும்; அரக்கர்களின் வாள்களாலும், வேல்களாலும், அம்பு மழைகளாலும் வகிர்ந்த புண்களை, “ ஊழ் கொள நோக்கி நோக்கி உயிர் உக உயிர்த்து நொந்தார்…” பார்த்துப் பார்த்து தம் உயிர் சிந்திப் போகுமாறு பெருமூச்சு விட்டு வருந்தினர்…

பரமபதம் போல அழியாது வயது பெற்ற சிரஞ்சீவி… பெருமான் பாதம் பணிந்த அவன்தான் சிறிய திருவடி…!

 

அநுமன் வாலி குமாரனான அங்கதனை வணங்கி, கரடிகளுக்கு அரசனான ஜாம்பவனை கால் உற பணிந்து, அதன்பிறகு அங்கே ஒரு புறத்தே அமர்ந்திருந்து, “ உங்கள் அனைவருக்கும் உலகுடை நாயகனான இராமபிரானது தேவியாகிய பிராட்டி, நன்மை, நலந்தருவனவான ஆசீர்வாதங்களைச் சொல்லியருளினாள்..” என்று கூறினான்… அவ்வாறு அநுமன் கூறியவுடன், வானரர் எழுந்து நின்று கரங்கள் கூப்பி, அன்பு மேலிட பிராட்டியை மனத்தால் இறைஞ்சித் துதித்தனர்… “ வன் திறல் உரவோய்… சென்றது முதலா..வந்தது இறுதியாய்.. நிகழ்ந்த செய்திகள் அனைத்தையும் எங்கட்குச் செப்புவாயாக….” என்று அநுமனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர்…

 

“ தீதில் நன்னெறி காட்டி எங்கும்

திரிந்த அரங்கன் எம்மானுக்கே

காதல் செய் தொண்டர்க்கு எப்பிறப்பிலும்

காதல் செய்யும் என் நெஞ்சமே…

குலசேகராழ்வார்…. பெருமாள் திருமொழி…

Thursday, May 14, 2015


இராவணன் மாளிகையில் இருந்த தேவ மகளிரும், மற்றும் உள மகளிரும்; அனைவரும் மறுகி போன திக்கு அறிகிலர்… இலங்கைக்கோன், அந்தத் தேவர்தம் தலைநகராகிய அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல, நிலை குலைந்து வருந்தினர்…

 

இராவணன் அரண்மனையில் வைத்திருந்த கஸ்தூரியும், மணமிக்க கலவைச் சாந்துகளும், கற்பக மலர்களும், சந்தனமும், அகில் கட்டைகளும்… என்று சொல்லத்தக்க இவ்விதமான வாசனைப் பொருட்கள் எல்லாம் எரிந்து புகையாக, “ தண் செறி மழை பெரும் குலம் என…” குளிர்ச்சி நிறைந்த மேகக்கூட்டம் போல, எல்லாத் திசைகளிலும் உள்ள தெய்வமகளிருடைய நறும் குழல்களும் பரிமளம் ( நன் மணம் ) பரவப் பெற்றவை ஆயின…. புகையாக எரிவதை; அதற்கு மாற்றாக புனல் கறுத்த முகில் கூட்டத்தோடு ஒப்பிடுகிறான் கம்பன்…. நெருப்பினூடே தண் தமிழையும் ரசிக்க வைக்கிறது கம்பனின் கவித்திறன்….!

 

“ தண் தமிழின் மிகுநேயா… முருகேசா…” என்பார் அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில்…! பண் தமிழ், தண் தமிழ், செந்தமிழ், கன்னல் தமிழ், முத்தமிழ், பைந்தமிழ், இசைத்தமிழ், இன்பத்தமிழ்…..வேறெந்த மொழிக்காவது இத்தனை பட்டப்பெயர்கள் இருக்கிறதா….?!

“ தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்…!...”

பெரும் நாகரிகம் கொண்டது தமிழ்க்குடி… சொல்நயமிக்க, என்றும் இளமை மாறாத ஒரு மொழியில் இதிகாசக் காப்பியங்களை இயற்றுவதும், இன்றளவும் நாம் அதைப் படித்து இன்புறுவதும்    எத்துணை இனிமையானது….?!

 

சூழும் வெம்சுடர் தொடர்ந்திட, யாரும் அணுகவொண்ணாத, ஆழி வெம்சினத்து இலங்கைக்கோன் மனையின்; நீண்டு உயர்ந்த எழுநிலை மாடங்களும், ஊழி வெம்கனல் உண்டிட, மேலேழுலகங்களும் அழிவன போல் எரிந்து அழிந்தன…

 

இராவணனின் அரண்மனை பொற்கூரை வேய்ந்திருந்தபடியால், அவை யாவும் நெகிழ்வுற உருகி, தென் திசைக்கும் ஒரு மேருமலை உள்ளது என்றும் சொல்லும்படியாக விளங்கியது…

மேருமலையைப் பற்றி கிஷ்கிந்தா காண்டப் பதிவுகளில் ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்… குமரிக்கண்டத்தில் மேருமலை இருந்ததாக சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன… எம்பெருமானின் வசிப்பிடமான கயிலையங்கிரியே மேருமலை என்பது ஸ்ரீ மகாப்பெரியவாளின் கூற்று… இங்கே கம்பன், “ தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என…” என்று குறிப்பிட்டிருப்பதால், கயிலை மலையையே மேரு என்று ஒப்புக்கொள்கிறான்….!

 

கம்பராமாயணத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு ஏராளமான தலைப்புகள் கொட்டிக் கிடக்கின்றன…. மொழியியல், வரலாறு, வானவியல், அறிவியல்… என்று பல துறைகளைப் பற்றிய தகவல்கள் கம்பராமாயணத்தில் உண்டு… கம்பனை வெறும் தமிழ்ப்புலவனாக மட்டும் எண்ணிவிட முடியாது… பல்வேறு துறைகளில் அவனுக்கிருந்த பாண்டித்தியம், அவன் எழுதிய இராமாவதாரத்தை முழுமையாகப் படிக்கும்போது நமக்குத் தெரிய வருகிறது…!

 

இராவணன் அரண்மனை தீப்பற்றி எரிந்த போது; இராவணனும், அவனது உரிமை மகளிரும் இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானம் மீதேறி மேலே சென்றனர்…( ஃபிளைட்லே எஸ்கேப் ஆயிட்டான்..! ) இராவணனைப் போலவே அரக்கர்களில் சிலர், தவம் மேற்கொண்டு மும்மூர்த்திகளிடம் வரம் பெற்றிருந்தனர்… அவர்கள் தாம் நினைத்த இடத்திற்குச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள்… மாயாசக்தி என்று சொல்லலாம்… அவ்வரக்கரும் அந்த இடத்தை விட்டு இராவணனோடு அகன்றனர்… அவ்வாறு செல்லும் சக்தியற்ற அஃறிணைப் பொருளான, திருகூட மலையின் மேலிருந்த இலங்கை நகர்; அங்கேயேயிருந்து நெருப்பில் அழிந்தது…!

 

தன்னுடன் வந்த அரக்கர்களை, சினத்துடன் பார்த்து, “ ஊழிக்காலத்தில் பதினான்கு உலகங்களும் தீயால் அழியும்… அந்தப் பிரளய காலம் வந்து உற்றதோ…? பிறிது வேறு உண்டோ…? நகர் பாழி ( பெருமை ) தீ சுட வெந்தது ஏன்…? என்று வினவினான்…

 

தம் சுற்றத்தார்களைக் காணாதவர்களாய் இரங்குகின்ற வல் அரக்கர் தம் கரங்களைக் கூப்பி, ஈது இயம்பினர்……” இறையோய்… கடல் அலையிலும் நெடியதான, அக்குரங்கு தன் வால் இட்ட தழலால் சுட்டது ஈது….” என்றலும், இராவணன் கொதித்தான்….

 

“ இன்று ஒரு புன் தொழில் குரங்கு தன் வலிமையினால், இலங்கை நகர் நின்று; எரிந்து பெரும் சாம்பல் எழுந்து கிளம்புகிறது…. நெருப்பு நகரை உண்டு ஏப்பம் விடுகின்றது… இராவணன் போர்வலி நன்று நன்று என… தேவர்களும் நகைப்பார்கள்….” எனக்கூறி வெகுளியாகச் சிரித்தான்…..

 

“ சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்

காதல் செய்யாது உன் கழல் அடைந்தேன்

ஓதல் செய் நான்மறை ஆகி, உம்பர்

ஆதல் செய் மூவுருவானவனே…!....”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….