தன் மேல் எய்யப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் ஆணையை இகழ்வது, அதன் மரியாதைக்கு ஏற்புடையதன்று என்று கருதிய அநுமன்; அதற்குக் கட்டுப்பட்டு கண் முகிழ்த்திருந்தான்…
இவன் வலிமை ஓய்ந்ததாம் என எண்ணி, இந்திரஜித் அநுமன் அருகில் வந்துற்றான்… அரக்கர் அநுமனை நாற்புறங்களிலும் சூழ்ந்து வந்து, அவனுடலைச் சுற்றிக் கொண்டிருந்த அரவு வடிவான அந்த பிரம்மாஸ்திரத்தைப் பற்றி ஈர்த்தனர்… பெருமுழக்கமிட்டு அநுமனை அதட்டினர்… ” குரங்கு நல்வலம் குலைந்தது
“ என்று ஆவலம் கொட்டி, இலங்கை மாநகர் முழுக்க ஆர்ப்பரித்தனர்…அநுமனை நகர வீதிகள் வழியே அரக்கர் இழுத்துச் சென்றனர்…
சிலர், “ பிரம்மாஸ்திரத்தால் இக் குரங்கு வருந்துவதாக இல்லை..ஒரு பூமாலை பூண்டிருப்பது போலிருக்கிறது…இவன் முகப்பொலிவினால் உண்மையை ஆராய்க..திண் திறல் அரக்கர்தம் செருக்கு சிந்துவான் இவன்…இதன் எண்ணம் வேறு எனா…?! எங்களைக் கோவிக்காதே…” என்று சொல்லி, அநுமனைத் தொழுது வணங்கினர்….
“ கயிலைமலை நாதன்; மயில் இயல் சீதைத் தன் கற்பின் மாட்சியால், அயில் எயிற்று ஒரு குரங்காய்… எயில் உடை திருநகர் சிதைப்ப எய்தினான்…இலங்கை நகரை அழிக்க எம்பெருமானே குரங்கு வடிவில் வந்திருக்கிறான்….” என்று அரக்கர் பலர் கூறுவாராயினர்…
அநுமன் வேறொன்றையும் விரும்பாதவனாய், “ ஈண்டு இதுவே தொடர்ந்து, இலங்கை வேந்தனைக் காண்டலே நலன் என…” கருத்தின் எண்ணினான்…
“ இந்தக் கட்டிலிருந்து விடுபடுவதற்கு எனக்கொரு நொடி கூட ஆகாது… எந்தை வாயுவின் அருளினாலும், இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும், தேவர் ஈந்தன முந்து உள வரத்தினும், இந்தப் பிரம்மாஸ்திரத்தின் கட்டு முழுவதும் சிதறிப் போகச் செய்வேன்…ஆயினும் அயர்வுறு சிந்தையாக நான் இப்போது இருப்பதே நல்லது…இராவணனின் வலிமை இன்னதென்று யான் அறிய இது ஓர் வாய்ப்பு…” என்று எண்ணி, அநுமன் அடங்கி; அவ்வரக்கர் அவனைப் பற்றிச் செல்ல வாளாவிருந்தான்….
அநுமன் கட்டுண்ட செய்தியறிந்த இராவணன், எல்லையற்ற மகிழ்ச்சியில் களித்தான்…மாருதி இந்திரஜித்தால் பிடிக்கப்பட்ட சேதியை அரக்கிகள் சொல்லக் கேட்ட பிராட்டி; தன் அரிய உயிர் எரிந்து குறைவுற, தளர்ந்து மயங்கினாள்…
அநுமனை அரக்கர், இராவணனின் பெரிய அரண்மனையிற் கொண்டு போய்ச் சேர்த்தனர்…இராவணனைக் கண்ட மாத்திரத்தில் சினமுற்றான் அநுமன்…
“ நீண்ட வாள் எயிற்று அரக்கனை…நான் நேருக்குநேர் பார்க்க விரும்பி, இந்த உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேன்…இவன் முடி தலை பறித்து எறிவேன்…ஆனால்..இவன் என்னால் கொல்லக்கூடிய தரத்தனும் அல்லன்… இராமபிரனைத் தவிர வேறு யாராலும் இவனை வெல்ல முடியாது…” என்று எண்ணினான்…
இந்திரஜித், அநுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்தினான்…
“ ஆண்டகை…குரங்கு வடிவாயுள்ள இவன்… சிவன் என, செங்கணான் என… போர் செய்த சிறந்த வீரன்…” என்று சொல்லி அநுமனின் வலிமையைப் பாராட்டிக் கூறினான்…
கூற்றுவன் போன்ற கொடுந்தன்மையுடைய இராவணன், கண்களில் கனல் பொறி எரிய அநுமனைப் பார்த்து, “ நீ யார்…? இலங்கைக்கு வரக் காரணமென்ன…?..” என்று கேட்டான்..
“ நீ சக்கராயுதத்தையுடைய திருமாலோ…? இந்திரனோ…? சூலாயுதபாணியான ஈசனோ…? தாமரை தாங்கும் நான்முகனோ…? பல்தலையுடைய ஆதிசேஷனோ…? இலங்கையை அழிக்கும் பொருட்டு, வேறுருக் கொண்டு இங்கு வந்துள்ளாயா… அவர்களல்லாமல்… உயிர் கவர் காலனோ…? கிரெளஞ்சகிரி பிளந்த குமாரக் கடவுளோ…? இத்தகையோருள் நீ யாவன்….? அன்றி… அந்தணர் வேள்வியில் தோன்றிய ஓர் வய வெம் பூதமோ…? ஆர் உனை விடுத்தவர்….? சோர்வில்லாமல் சொல்லுதி…” என்று கூறினான் இராவணன்….
“ தீயொரு பக்கஞ் சேர்வதன் முன்னம்
செங்கண் மாலோடும் சிக்கெனச் சுற்ற
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லாருக்
கரவ தண்டத்தில் உய்யலுமாமே….”
…பெரியாழ்வார்…. பெரியாழ்வார் திருமொழி….
No comments:
Post a Comment