இராவண தர்பாரில்; அநுமன்
தன் நீண்ட வாலைச் சுருட்டி, ஆசனமாக்கி, அதன் மேல் அமர்ந்திருக்கிற காட்சியை சிற்பங்களிலும்,
ஓவியங்களிலும், நம் வீட்டுக்கொலுவிலும் பார்த்திருக்கிறோம்… ஆனால் அப்படியொரு காட்சி
வான்மீகத்திலோ, கம்பராமாயணத்திலோ இடம் பெறவில்லை… இராவணன் அநுமனுக்கு ஆசனம் தந்ததற்கான
குறிப்புமில்லை… ஆகையால் அநுமன், தன்னுடைய வாலையே ஆசனமாக்கிக் கொண்டிருக்கலாம் என்பது
நம்முடைய ஊகம்…
ஒரு காட்சிக்கும், மற்றொரு
காட்சிக்குமிடையே சொல்லப்படாத சொற்கள்; நம்முடைய கற்பனை வியூகத்தை விரிவாக்குகின்றன…
சிற்பிகளும், ஓவியர்களும்
தங்களின் அகவுணர்வில் தோன்றியதை படைப்புகளாக்குகிறார்கள்… நாம் அவற்றை ரசிக்கும்போது,
நம் மனதில் அவை தீராத மனவெழுச்சி கொள்ள வைக்கின்றன… அகம் உணராத ஒன்றை செயற்கையாகப்
படைத்தால், அந்தப் படைப்புக்கு உயிர் இருக்காது…
முடியாட்சி காலத்தில் மன்னன்
தவறு செய்தால், அவனுக்கு இடித்துரைக்க கற்றறிந்த சான்றோர்கள் அமைச்சர்களாக இருந்தனர்…
அகவொழுக்கம் உடைய மன்னர்கள், அமைச்சர்களின் அறிவுரைகளைக் கேட்டு; அதன்படி ஆட்சி செய்தனர்…
“ அறன் அறிந்து ஆன்று அமைந்த
சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சித்
துணை…”
திருக்குறள்… 635.
அநுமன் இராவணனின் வல்லமையை,
குலப்பெருமையை எடுத்துக் கூறி, அவன் திருந்துவதற்கு வழி காட்டுகிறான்… ஆனால்.. இதெல்லாம்
கேட்கிற மனநிலையில் இலங்கேஸ்வரன் இல்லை…காமம்
என்னும் மாயை அவனைப் பற்றிக் கொண்டு விட்டது….
“ விதி விரித்த வலையில்
சிக்கிய இலங்கை அதிபதி
வில்லேந்திப் பரபதம் அருளக்
காத்திருக்கும் சீதாபதி….! “
பக்தி இலக்கியங்களில் காமம்
சார்ந்த பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன… கம்பராமாயணத்தில் கூட, காமரசம் மிகுந்த
பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன… அதையெல்லாம் படித்து, தமிழ்மொழியழகை ரசித்து அடுத்தப்
பகுதிக்குப் போய்விட வேண்டும்….காமம் கிளர்ந்த நினைவிலேயே இருந்தோமேயானால், மாயை நம்
தினசரி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடும்… கஜூராஹோ சிற்பங்கள் முழுக்க முழுக்க
காம இலக்கியப் படைப்புகள்தாம்….அழகியலை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்…
இராவணனைப் பிடித்த மாயை
எப்பேர்ப்பட்டது…? அந்த மாயையிலிருந்து அவனை மீட்டு, நல்வழிப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறான்
அநுமன்… “ வறிது வீழ்த்தனை வாழ்க்கையை…” என்று இராவணனுக்காக வருந்துகிறான் அநுமன்…
அநுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகளைப் பதினைந்து பாடல்களில் விவரித்திருக்கிறான்
கம்பன்… வால்மீகி இராமாயணத்தில், இந்த அறிவுரைப்பகுதி ‘ ஹிதோபதேசம் ‘ என்ற பகுதியில்
இடம் பெற்றிருக்கிறது…
அநுமன் கூறிய அறிவுரைகளைக்
கேட்ட இராவணன் பெருஞ்சிரிப்புக் கொண்டான்…
“ குன்றில் வாழுங்குரங்கு
கொலாமிது
நன்று நன்றென மாநகை செய்தனன்…”
“ ஒரு அற்பக்குரங்கு எனக்கு
அறிவுரை சொல்கிறதே…. ஒரு குரங்கு தூது அனுப்பியிருக்கிறது.. அதை மற்றொரு குரங்கு என்னிடத்தில்
சொல்கிறது… தூது நெறியைக் கடந்து என் வீர்ர்களை ஏன் கொன்றாய்…? காரணத்தை உரையாய்….”
என்று இராவணன் அநுமனை வினவினான்…
“ உன்னை எனக்குக் காட்டுபவர்
ஒருவரும் இங்கு இல்லாமையால், அசோகவனம் என்னும் சோலையை அழித்தேன்… அதனால் சினந்து என்னைக்
கொல்ல வந்த அரக்கர்களைக் கொன்றேன்… பிறகு, என் போர்த்தன்மையை விட்டு; யான் சாந்த நிலையில்
அடங்கியிருந்தமையால், உன்னைக் கண்டு இந்தச் செய்தியைக் கூற முடிந்தது….” என்று அநுமன்
சொன்ன அளவில், நிறைந்த நெருப்பு நெடுந்தூரம் போய்ச்சிந்த சினம் வீங்கினான் இலங்கேஸ்வரன்…
“ கொல்மின் இந்தக் குரங்கை…”
என்றனன்…. கொலையாளிகளான அரக்கர்கள் அநுமனை அடைந்தனர்… நீதிநெறி வழுவாத, இராவணனின் இளவலான
விபீஷணன் ( தமிழில் வீடணன் )
“ நில்லுங்கள்..” என்று
அக் கொலையாளிகளைத் தடுத்து நிறுத்தினான்… தன்னுடைய தமையனான இராவணனைக் கைகூப்பி வணங்கினான்…
“ மறைகளில் வல்லவனே… மூவுலகையும்
ஆள்பவனே… பிரமதேவனின் மரபில் வந்த தக்கோய்… தூதன் என்ற பின்னும் அவனைக் கொல்ல ஆணையிடுகின்றாயே…?
இவ்வுலகில் தூதனைக் கொன்றுள்ளவர் யாரே உள்ளார்…? நம் தங்கையாகிய சூர்ப்பணகையை இராம
லக்ஷ்மணர் கொல்லவில்லை… ஆனால் அவர்கள் அனுப்பிய தூதனைக் கொல்ல சொல்வது அறமன்று…” என்று
இராவணன் புத்தியில் பொருந்துமாறு உரைத்தான் விபீஷணன்…
“ வேதியாகி வேள்வியாகி
விண்ணினோடு மண்ணுமாய்
ஆதியாகி ஆயனாய மாயமென்ன
மாயமே….!...”
திருமழிசையாழ்வார்…. திருச்சந்த
விருத்தம்….
No comments:
Post a Comment