Thursday, April 30, 2015


கருகி உதிர்ந்து போகும்படி, கொடிய நெருப்பு தொடர்ந்து தம் உடல்களைப் பற்றி மூடிக்கொள்ள; மேல் தோலுரிந்த மெய்யினர்….அரக்கர்…ஓடி கடல் நீரிடை புகுந்து ஒளிந்து கொள்வாராயினர்…. அரக்கரின் பெண்டிர், ஆடவர் என்ற இருபாலாரின் தலைமயிறும் செந்நிறமாய் இருந்ததால்; அந்த எறி திரை கடல் தானும் எரிந்து வேகின்றது ஒத்தது….!

 

ஆயுதச்சாலையில் இருந்த விற்கள், வேல்கள், கொடிய எறியீட்டிகள் முதலிய பல படைக்கலங்கள் விறகுகளாய் அமைய எஃகினால் அமைந்த அவற்றின் பாகங்கள் யாவும் அத்தீயில் உருகி, சிறு உருண்டையாகத் திரண்டு கிடந்தன…

 

மாயைத் தொடர்பால் பல்வேறு பிறவிகளில் உழன்று, பின் ஆத்மஞானம் அடைந்தோர் அப்பிறவிகளினின்றும் விடுபட்டு முன் நிலையை அடைவது போல; பல்வேறு ஆயுதங்களாய் உருவெடுத்திருந்த எஃகு, தீயில் உருகத் தம் உருவங்கள் மாறிப் பழைய இரும்பின் வடிவத்தை அடைந்தன…

“ தொல்லை நன்னிலை தொடர்ந்த பேருணர்வினர் தொழில் போல்..” ஆயுதங்களாய் இருந்த நிலை பல்வேறு பிறவிகளுக்கும், அநுமன் இட்ட தீ அஞ்ஞானத்தைப் போக்கும் ஞான உணர்வுக்கும் உவமைகளாயின…

 

ஓடை வெம் களிறு உடல் எரி நுழைய, காலில் கட்டப்பட்ட கனமான விலங்கையும், கழுத்தில் இடப்படும் கயிற்றையும் சிதற விட்டு, தம்மைக் கட்டியிருந்த வலிய கம்பங்களை எளிதில் பிடுங்கி எறிந்து, வால் முதுகினில் முறுக்கி, துதிக்கைகளை மேலே தூக்கிக் கொண்டு; வாய்விட்டு கதறி ஓடின….

 

மனத்து ஓர் அருளில்லாத வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தவர் போல, பறவைகள் வெருளும் வெம்புகை படலையின் மேல் கடந்து செல்ல அஞ்சி, இருளும் வெம்கடல் வீழ்ந்தன…. அப்படி விழுந்த பறவைகளைப் பெரிய மீன் கூட்டங்கள் விழுங்கின… வஞ்சகருக்குக் கடலும், மீன்களும் உவமைகள்….! கம்பனை விஞ்சக்கூடிய கவி, ஓராயிரம் ஆண்டுக்குப் பின்னும் இன்னமும் பிறக்கவில்லை என்ற கூற்றுக்கு ஒரேயொரு உதாரணம் தருகிறேன்..

“ தேரெரிந்தன வெரிந்தன திறற்பரி யெவையும்

தாரெரிந்தன வெரிந்தன தருக்குறு மதமா

நீரெரிந்தன வெரிந்தன நிதிக்குவை யிலங்கை

ஊரெரிந்தன வெரிந்தன வரக்கர்தம் முடலம்….”

….சுந்தர காண்டம்…. இலங்கை எரியூட்டுப் படலம்…..

 

எல்லோருக்கும் சரளமாய் புரியும்படியாகப் பாடல் இயற்றுவது கம்பனுக்குக் கைவந்த கலை…! கம்பனுக்குக் கொடுக்க வேண்டிய கெளரவத்தை நாம் கொடுக்கத் தவறி விட்டோமோ….? இந்தத் தலைமுறைக்கு கம்பன் யாரென்றே தெரியாது என் மகன் உட்பட…! அம்மா ஏதோ பொழுது போகாமல் எழுதிக் கொண்டிருக்கிறாள் என்பதாகத்தான் அவன் நினைக்கிறான்…!

 

தமிழ்வழி கற்கும் மாணவர்களுக்குக் கூட கம்பன் அந்தளவுக்குப் பரிச்சயமில்லை…ஏதோ தமிழ்ப்பாடத்தில் வரும் நாலைந்து செய்யுட்களை இயற்றியவர் என்கிற அளவில்தான் கம்பனை நினைவில் கொள்கிறார்கள்… அவன் கவிச்சக்கரவர்த்தி, கொண்டாடப்பட வேண்டிய ஓர் மகாகவி என்பது புரிந்து கொள்ளப்படவேயில்லை….
திரைப்பட பாடலாசிரியருக்கு கவிப்பேரரசு என்றெல்லாம் பட்டம் கொடுத்து, பொற்கிழி கொடுக்காத குறையாகக் கொண்டாடுகிறார்கள்… வள்ளுவனும், ஒளவையும், கோதையும், கம்பனும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் பாடலாசியர்கள் தமிழுக்குச் செய்து விட்டார்களா….? இன்றைய தமிழ்ச்சமூகம் தமிழின் தொன்மையை மறைக்கப் பார்க்கிறது…. பாரதி இறக்கும் வரை வறுமையில் அல்லவா இருந்தான்…? பாரதிக்குப் பக்கத்தில் நிற்கக் கூட தகுதியில்லாத இரபீந்திரநாத் தாகூருக்கு நோபல் பரிசு..?! பாரதியின் ஒரு பாட்டுக்கு ஈடாகுமா கீதாஞ்சலி…?! பாரதியின் படைப்புகள் பரவலாக முக்கிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படாதது மிகப்பெரிய குறை…

இலங்கை எரியூட்டுப் படலத்தில் என் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி விட்டேன்….!

 

அநுமன் இட்ட உயர் தீ… கடல், குளம் முதலிய நீர்நிலைகள் வற்றிப் போகும்படி, அவற்றிலுள்ள நீரை உறிஞ்சி, மா நெடும் நிலம் தடவி, மரங்களைச் சுட்டெரித்து, மலைகளைத் தழல் செய்து, தனி மா மேருவைப் பற்றி எரிகின்ற ஊழிக்காலத்து வெம்கனல் போல, அவ்விலங்கை நகர் முழுவதையும் எரித்தழித்து, இராவணன் மனை புகுந்தது…

 

“ பிரான் பெருநிலங் கீண்டவன் பின்னும்

விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்

மராமர மெய்த மாயவன் என்னுள்

இரானெனில் பின்னை யானெட்டுவேனோ… “

….நம்மாழ்வார்…. திருவாய்மொழி….

 

No comments:

Post a Comment