அநுமன் வாலிலிட்ட கடும்
கனல், இலங்கை நகரின் கடிய மா மனை தோறும்; கட்டப்பட்டிருந்த கொடிகளைப் பற்றிக்கொண்டும்,
சித்திர ஆடைகளால் அமைக்கப்பெற்ற விதானங்களை எரித்தும், “ தாள் நெடிய தூணைத் தழுவி,
நெடுஞ்சுவர் முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்று…” அம் மாளிகைகள் முழுதும் எரித்தழித்தது….
நிலை தளர்ந்த அந்நகரவாசிகள்
யாவரும் போகும் வழியறியாது, முன்னும் பின்னுமாக ஊஞ்சல் ஆடுவது போல ஓடி, உலைந்து போய்
பேரொலியை உண்டாக்கினர்…நெடும்புகை வானத்தை மறைத்தமையால் போன திக்கு அறியாது புலம்பினர்..
வெம்மை தாங்க முடியாமல் ஆடவரும். மகளிரும் தம் தலைமேல் நிரம்ப நீரைச் சொரிவாராயினர்…
இந்த இடத்தில் கம்பனின் கன்னல் தமிழ் துள்ளி விளையாடுகிறது….
“ இல்லில் தங்கும் வயங்கு
எரி யாவையும்
சொல்லில் தீர்ந்தன போல்
அரும்
தொல் உரு புல்லிக் கொண்டன…”
அரக்கர் வீடுகளில் இதுகாறும்
தங்கி விளங்கி வந்த நெருப்புக்கள் யாவும், இராவணனுடைய கட்டளைச் சொல்லினின்று விடுபட்டவை
போல; அநுமன் வைத்த தீயுடன் ஒன்றுபட்டு, தம் பழைய உருவை மேற்கொண்டன…
அரக்கர்தம் வீடுகளில் பணி
புரிந்த நெருப்பான மாயைப் புணர்வுற்ற ஆன்மா… அநுமன் வைத்த தீயான பரமாத்மாவோடு இணைந்தது
என்கிற சரணாகதித் தத்துவத்தை கம்பன் இந்தப் பாடலில் மறைப்பொருளாக வைத்திருக்கிறான்….
அகத்து நெருப்பும், அநுமன் இட்ட தீயும் ஒன்றானது….! கம்பனின் கவிப்புலமையைச் சொல்லவும்
வேண்டுமோ…?!
இலங்கை எரியூட்டும் படலம்
முழுக்க முழுக்க கம்பனின் தமிழ் பேரரருவியாய்ப் பொங்கிப் பாய்கிறது….
ஓர் குறள் உருவாய்… வாமன
உருவமாய் வந்து, ஓங்கி உலகளந்த உத்தமன்… திரிவிக்கிரமன்… புருஷோத்தமன்… புண்டரீகாக்ஷன்…
பேருருவோடு விண்ணோக்கி எழுந்த கருமுகில்வண்ணன்…. கமலக்கண்ணன்… எம்பெருமானின் திருமேனியைப்
போல, இலங்கை நகரெங்கும் வெம்புகை மேலெழுந்து போய் எங்கும் பரந்ததாக ஆயிற்று….!
கருநிறமுடைய யானைகள், தம்
மேல் நெருப்புச் சூழ்ந்து பற்றிக் கொண்டதால்; அவற்றின் தோல் உரிந்து போக, தேவேந்திரனின்
ஐராவதம் என்னும் யானையைப் போன்று வெண்மையாகக் காணப்பட்டனவாம்…. என்னவொரு அழகான கற்பனை….?!
பொடித்து எழுந்த பெரும்
பொறி… மேலே போவனவும், கீழே விழுவனவுமாக, எங்கணும் இடிக்கூட்டங்களைப் போல வெடித்தன…
கடல் வெப்பம் மேலிட; மீன்குலம் துடித்து, வெந்து, புலர்ந்து, உயிர் சோர்ந்தன…
நெருப்பு மடுத்தமையால்,
மாளிகைச்சுவரில் பதிக்கப்பட்டிருந்த பொற்தகடுகள் உருகித் தாரையாய் கடலினுட் புகுந்து,
கடல்நீரில் குளிர்ந்து, முறுக்குக்கள் அமைந்த நீண்ட பொன் தண்டுகள் போல திரண்டு விளங்கின…இலங்கை
நகரின் செல்வச் செழிப்புதான் என்னே..?!
உலகு உண்ணும் எரி அது…
பன்மணி மாளிகையோடும், நீள் நெடும் சோலைகளோடும் எரித்தது நிற்குமோ….? நிற்காது.. மற்ற
இடங்களில் நெருப்பு பற்றினால் தரையாவது எரிந்து போகாது தங்கும்… ” தரையும் வெந்தது
பொன் எனும் தன்மையால்…” இலங்கை நகரின் நிலமும்
பொன்னால் அமைந்திருந்தமையால், அதுவும் உருகி வெந்தழிந்தது….. பொன்னகர் இலங்கை…!
சொன்னவுடனேயே எரிக்கும்
தன்மை வாய்ந்த பெரியோரின் சாப மொழியைக் காட்டிலும்,
“ சொல்லொக்குங் கடிய வேகம்..” … விரைவாகப் பற்றிய தீ என்கிறான் கம்பன்…!
வானுலகத்து கற்பக வனம்
இராவணனால் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில் வைக்கப்பட்டிருந்தது… அவை இயற்கையிலேயே
ஒளியுடையவை… அநுமன் இட்ட தீயால், எரிந்தவை, எரியாதவை.. அறிந்துகொள்ள முடியாதபடி விளங்கின….”
வெம்கனல் பரந்தவுந் தெரிந்தில கற்பகக் கானம்…”…
மிக்க வெம்புகை சூழ்ந்ததால்,
வெள்ளியங்கிரியான கயிலைமலையும் கருநிறமடைந்தது… அன்னப்பறவைகளும் காக்கைகளைப் போல கரிய
உருவாயின… எங்கெங்கும் வேறுபாடு தெரியாதபடி, எல்லாம் கருநிறமாகக் காணப்பட்டன…!
“ உள்ளெலாம் உருகிக் குரல்
தழுத் தொழுந்தேன்
உடம்பெலாம் கண்ணநீர் சோர
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பேன்
நாராயணா என்னும் நாமம்….”
….திருமங்கையாழ்வார்….பெரிய
திருமொழி….
No comments:
Post a Comment