தமிழ்க் காதலி….. ( 4
)
ஒளவை.. அதியமான் நெடுமான்அஞ்சிமீது
அன்பு வயப்பட்டிருந்தாள் என்று இந்தத் தொடரின் துவக்கத்திலேயே நான் எழுதினேன்…
அவன் போரில் புண்பட்டு
வந்தபோதெல்லாம், அவனைத் தேற்றிப் பாடல் பாடியிருக்கிறாள் ஒளவை….. யாராலும் தேறுதல்
கூறமுடியாத அந்த நாளும் வந்தது…. போரில் மாண்டான் அதியமான்.. ஒளவையின் துக்கம் எழுதவொண்ணாதது….
அவள் கதறியழுத பாடல்கள் மூன்று பாடல்களாக புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன… இரங்கற்பா
வகையைச் சேர்ந்தவை… ஒரு பெண்பாற்புலவர் தான் மிகவும் நேசித்த மன்னனுக்காகப் பாடிய இரங்கற்பாக்களில்
இவை முதன்மையானவை என்று கூறலாம்…. தமிழ் இலக்கணத்தில் இம்மாதிரியான சூழலைக் கையறு நிலை
என்று கூறுவது வழக்கம்…..
“ இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும்
நாளே
நடுகல் பீலி சூட்டி நார்அரி
சிறுகலத்து உகுப்பவும்
கொள்வன் கொல்லோ
கோடு உயர் பிறங்குமலை கெழிஇய
நாடு உடன் கொடுப்பவும்
கொள்ளா தோனே…. “
கோடுகள் உயர்ந்த மலைகள்
செறிந்த தம்நாடு முழுவதையும் கொடுப்பினும், அதனை ஏற்றுக்கொள்ளாத பண்பாளன் அவன்…. அவனுக்காக
நடுகல்லை நாட்டி, அதற்குப் பீலியுஞ் சூட்டி, நாரால் அரிக்கப்பட மதுவைச் சிறிய கலத்தால்
விடுகின்றீர்களே…. அதனை அவன் ஏற்றுக்கொள்வானோ…? அவனோ மறைந்தான்…. காலையும், மாலையும்
இனி இல்லையாகுக…. என் வாழ்நாளும் இனி இல்லாது மறைவதாக….!
அவனுடைய கொடைத்திறத்தைச்
சொல்லி ஆற்றிக்கொள்கிறாள் ஒளவை…. மிக நீண்ட பாடலிது… சில வரிகளை மட்டும் இங்கே எடுத்தாள்கிறேன்…
“ சிறியகட் பெறினே எமக்கீயும்
மன்னே !
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து
உண்ணும் மன்னே
என்பொடு தடிபடும் வழியெல்லாம்
எமக்கீயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம்
தான்நிற்கும் மன்னே
இனிப் பாடுநரும் இல்லை
பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை….”
சிறிய அளவு உணவு கிடைத்தால்
அதனை எமக்கே அளித்து விடுவான். பெரிய அளவு கிடைத்தாலோ, யாம் பாட எமக்கும் அளித்து,
அவனும் உண்பான்… வேட்டையில் கிடைக்கின்ற பொருட்களையெல்லாம் எமக்களித்து, அம்பும், வேலும்
நுழையும் போர்க்களமெல்லாம் தானே மேற்கொள்வான்… இனிப் பாடுவதற்கு எவருமில்லை… பாடுவார்க்கு
ஒன்று தருவாரும் எவருமில்லை….
அதியமான் நெடுமான்அஞ்சியின்
உடல் எரியூட்டப்பட்டது…. அதைக் கண்டு ஒளவையின் உள்ளம் கசிந்தது….
“ எரிபுனக் குறவன் குறையல்
அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்
குறுகினும் குறுகுக குறுகாது
சென்று
விசும்புஉற நீளினும் நீள்க
பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மாயலவே….
“
எரிந்த தினைக்கொல்லையிலே
குறவன் வெட்டிய கட்டைத்துண்டு போல, விறகு அடுக்கிய ஈமத்தீயிலே அஞ்சியின் உடல் உள்ளது…
இனி அந்த ஈமத்தீ அவன் உடலைச் சிதையாமல். சிறுகினும் சிறுகுக; அல்லது வானம் முட்டச்சென்று
நீண்டாலும் நீள்க… ஆயினும் குளிர்ந்த கதிர்களையுடைய சந்திரன் போன்ற வெண்கொற்றக்குடையையுடைய,
ஒளிவீசும் கதிரவனையொத்த அஞ்சியின் புகழோ என்றும் அழியாதது….!
பெற்ற வெற்றியெல்லாம் வெந்து
தணியும் ஈமத்தீயில்…..!
தொடரும்….
No comments:
Post a Comment