உள்ளம் புகுந்தென்னை
நைவித்து…. ( 4 )
கோதைக்கு கோவர்த்தனன்
மீதிருந்த அதீதக்காதல்…… நாயக, நாயகி பாவம்…. ஜீவாத்மா, பரமாத்மாவோடு இணைய நினைக்கும்
ஒரு யுக்தி…. என்றெல்லாம் இங்கே தீவிரமாக விவாதிக்கப்படுகிறது… கோதையின் காதலை
Platonic love என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்…. காமம் சார்ந்த ஆன்மீக அனுபவம் என்று
நான் இதற்கு உரை எழுதுவேன்….
தேவாரத்தில் அப்பர்,
சம்பந்தர் போன்றோர் நாயக—நாயகி பாவத்தில் பதிகங்கள் எழுதியிருக்கிறார்கள்… திவ்யப்பிரபந்தத்திலும்
நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இவ்வகையான பாடல்களைக் கையாண்டிருக்கிறார்கள்….
ஆனால் கோதையின் திருமொழி, இவை எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்டது…. அவளுடைய காதலில் பாவனையே
இல்லை… அத்தனையும் சத்தியம்…. காலம், நேரம், பஞ்சபூதங்கள் தாண்டிய மெய்யியல் கோட்பாடு
அது…
தனக்கென்று ஒரு உலகத்தைச்
சிருஷ்டித்துக் கொண்டு, திருவில்லிப்புத்தூரையே பிருந்தாவனமாக நினைத்து, அதிலே கண்ணனோடு
அவள் வாழ்ந்திருக்கிறாள்…. ஸ்தூல ரூபத்திலான கோதையும், சூட்சும ரூபத்திலான இறையும்
இணைந்திருக்கிறார்கள்….
காமம் என்பது அனுபவம்
சார்ந்த விஷயம்….. உடற்சார்ந்த அனுபவத்தை உணராமல் எழுத முடியாது…
” பொங்கிய பாற்கடல்
பள்ளிகொள்வானை
புணர்வதோர் ஆசையினால்
என்
கொங்கை கிளர்ந்து
குமைத்து குதுகலித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்….
“
இந்த உணர்வு கலவியில்
ஈடுபடும்போது ஏற்படுகின்ற உணர்வு…. இதைக் கற்பனையாக அவள் எழுதியிருப்பாள் என்பதை மனம்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…. காமம் கிளர்ந்த நிலையல்லவா இது…?! இவ்வகைப் பாடல்களைப் பக்தி
என்று சொல்லிவிடக்கூடுமோ…?
உள்ளிருக்கும் ஆன்மா
காதல் வயப்படுகிறதென்றால், அதைப் போர்த்தியிருக்கும் உடல் ஏன் உருகவேண்டும்….?
“ என்புருகி இனம்வேல்
நெடுங்கண்கள் இமைப்பொருந்தா பலநாளும்
துன்பக்கடல்புக்கு
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு
நோயது
நீயும் அறிதி குயிலே…..
“
காதலென்னும் துன்பக்கடலில்
எத்தனை நாள்தான் உழல்வது…? வைகுந்தன் என்கிற தோணி எப்போது என்னை மீட்கப் போகிறது..?
அவன் மீதான காதல் என் எலும்பை உருகவைக்கிறது….பலநாட்கள் உறங்காத இந்த வேலையொத்த கண்களுக்கு
எப்போது ஓய்வு….?!
கோதையளவு இறைவனை உடற்சார்ந்து
காமவயப்பட்டவர்கள் எவருமேயில்லை….!
“ மருப்பொசித்த மாதவன்தன்
வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன்…”
காதல் ததும்பி வழிந்த
நிலை இது….!
“ பழுதின்றி பாற்கடல்
வண்ணனுக்கே
பணிசெய்து வாழப் பெறாவிடில்
அழுதழுது அலமந்தம்
மாவழங்க….”
காதல் மீதூறினால்
அழுகை தன்னைப்போல் வரும்… அவன் மார்பில் சும்மா கிடந்து அழுவது சுகம்…!
அவளை அலைக்கழிக்கின்ற
கண்ணனை நினைக்கும் போதெல்லாம்,
“ கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும்….”
பெண்மை என்னும் மையழிய,
பெருகும் கண்ணீர் மார்பை நனைக்கிறது….
உன்னை நினைத்து நினைத்து
உருகும் எனக்கு ஒரேயொரு உதவி செய்யக்கூடாதா…?! என் மார்பில் பூசியிருக்கும் சந்தனக்குழம்பு
அழிய, ஒருநாள் என்னுள் புகுந்து, உயிர்பெய்து, என் ஆவியோடு இணைய மாட்டாயா….?!
“ செங்கண்மால் சேவடிக்கீழ்
அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தில்
குழம்பழியப் புகுந்து
ஒருநாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென் றுரையீரே….”
தொடரும்….
No comments:
Post a Comment