Monday, December 29, 2014

நதி என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஓர் அம்சம்.
நதி இல்லையென்றால் நாம் நாதியற்றுப் போய்விடுவோம்.
நீரின்றி அமையாது உலகு..மானுடமே நீரின் போக்கில்தான்
தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறது..தீப கற்பத்தில்
நாம் வாழ்கிறோம் என்றாலும் கடல் நீரை அள்ளிப் பருகிட
முடியாது..
...
நதியில் ஓடும் நன்னீரை நம்பித்தான் விவசாயம் இருக்கிறது.
பயிர்களுக்கும், நீர் பருகும் மானிட உயிர்களுக்கும்
நதிநீர் அவசியமாகிறது..

சிந்துநதிக் கரையில் தோன்றிய சிந்துசமவெளி நாகரிகம்,
காவிரிக்கரையில் தோன்றிய திராவிட நாகரிகம், கங்கைக்
கரையில் தோன்றிய ஆரிய நாகரிகம், நைல்நதிக் கரையில்
தோன்றிய எகிப்து நாகரிகம், யூப்ரடீஸ், டைக்ரிஸ்
நதிக்கரையில் தோன்றிய பாபிலோனிய நாகரிகம்...என்று
வரலாற்றில் பேசப்படும் புகழ்பெற்ற நாகரிகங்கள்
அனைத்துமே நதிக்கரையில் தோன்றியவைதான்...

கடற்கோளால் கபளீகரம் செய்யப்பட்ட குமரிக்கண்டத்தின்
பஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த கபாடபுரத்தில்தான்
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பண்டைய
தமிழ் மன்னர்கள்...நதியோடு தங்கள் வாழ்வை அமைத்துக்
கொண்டதனால்தான் சீரும், சிறப்புமாக
வாழ்ந்தார்கள் தமிழர்கள்...

“நடந்தாய் வாழி காவேரி...நாடெங்குமே செழிக்க..
நன்மையெல்லாம் சிறக்க...:அமரர் சீர்காழி கோவிந்தராஜன்
அகத்தியர் படத்தில் பாடியிருக்கும் பாட்டு நதியின்
மேன்மையை நமக்கு உணர்த்தும்..

இராமகாதையில் நதிகளுக்குச் சிறப்பான இடம் உண்டு.
கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, பம்பை..ஆகிய
ஆறுகளைப் பிரமாதமாக வர்ணித்துப் பாடல்கள்
புனைந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்
ஊரும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன்....

அயோத்தியா காண்டம்...வனம் புகு படலம்.

யமுனை ஆற்றை அடைந்தனர்..அதன் பெருமை அறிந்து
வணங்கினர்...ஆழ்ந்த நீரில் மூழ்கி நீராடினர்..கிழங்குகளையும், கனிகளையும் உண்டு
யமுனை நீரைப் பருகினர்..யமுனை ஆற்றை எவ்வாறு
கடந்து செல்வது என்று இராமன் வினவினான்..உடனே இலக்குவன் ஒரு தெப்பம் செய்து அவர்கள் இருவரையும்
அக்கரையில் கொண்டு சேர்த்தான்.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர்
வையை, பொருனை நதி என மேவிய ஆறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு...சமகால அரசியல்
சூழலில் நீருக்காக அண்டை மாநிலங்களோடு
போராடும் நிலையைப் பார்க்கும்போது
நெஞ்சு பொறுக்குதில்லையே...:)
See More
 
 
 

No comments:

Post a Comment