Monday, December 29, 2014

பலதாரமணம் என்பது அரசபரம்பரையில் பொதுவான வழக்கம்..பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்குத்தான்
மன்னர்கள் பலதாரங்களை மணந்தார்கள்..காதலில்,
கசிந்துருகி கல்யாணம் செய்து கொண்ட மன்னர்கள்
மிகவும் சொற்பமே...தம் வாழ்நாளில் பெரும்பகுதியைப்
போர்க்களத்தில் கழித்த மன்னர்கள் காதலுக்காக...
நேரம் ஒதுக்கியிருப்பார்களா...?! காதலிகளுக்கு
பட்டமகிஷி அந்தஸ்து கொடுத்திருப்பார்களா..
அரண்மனைப்பெண்டிர் வாழ்க்கையைப்
படிக்கும்போது மனசுக்கு வருத்தமாகயிருக்கும்...
எத்தனையோ சகலகலாவல்லிகளெல்லாம்
அந்தப்புரத்துக்குள்ளேயே அடிமையாய் மாண்டு
போயிருக்கிறார்கள்...

தசரதச்சக்கரவர்த்திக்கு மூன்று மனைவிகள்..(.வேடிக்கைக்கு
அறுபதாயிரம் மனைவிகள் என்று சொல்வார்கள் ..
நினைத்துப் பார்க்கும்போதே பயமாயிருக்கிறது..! )
கோசல நாட்டைச் சேர்ந்த கோசலை ( வடமொழியில்
கெளசல்யா) கேகய நாட்டின் இளவரசியான கைகேயி,
மற்றும் சுமத்திரை...கோசலைக்கு இராமனும்,
கைகேயிக்குப் பரதனும், சுமத்திரைக்கு இலக்குவனும்,
சத்ருகனும்..ஆக மொத்தம் நான்கு புதல்வர்கள்..
இரண்டாவது மனைவியான கைகேயியின் மீது
தசரதனுக்கு மிகுந்த அன்பு உண்டு..அவள் திறமைசாலி..
குதிரையேற்றத்திலும், இரதம் ஓட்டுவதிலும் தேர்ச்சி
பெற்றவள்..இராமன் மீது அவளுக்குப் பிரியம் உண்டு..
மந்தரையின் துர்போதனைகளால் அவள் மனம்
மாறினாள்..தசரதனிடம் அவளுக்கு வேண்டிய இரு
வரங்களைக் கேட்டபோது, மன்னனின் நிலை
எப்படியிருந்தது..கிட்டத்தட்ட நாற்பது பாடல்களில்
உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கிறான் கம்பன்...
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான்..
அயோத்தியா காண்டம்...கைகேயி சூழ்வினைப்படலம்.
கொடியவளாகிய கைகேயியின் இந்த சொற்களைக்
கேட்டவுடன், இராமன் முடிசூட்டிக் கொள்ளாமல
வனவாசம் போவதைப் பார்க்க என் உயிர் நீங்கிவிடும்
என்று கூறி இடியால் தாக்குண்ட மலையைப் போல
மண்ணிலே விழுந்தான்..
இந்தப் பாடல்களைப் படிக்கும்போதே, அந்தக்
கதாப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு
விட்டான் கம்பன் என்பது புலனாகிறது..
பூப்போன்ற இராமனுக்குப் புயல் வரும்
விபரீதம்...

No comments:

Post a Comment