Friday, December 10, 2010

புரட்சித்தலைவி

தலைப்பைப் பார்த்தவுடன், நான் ஏதோ ஜெயலலிதாவைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று நினைத்தீர்களேயானால் , நிச்சயம் ஏமாந்து போவீர்கள்...! ஜெயலலிதாவுக்கும் இந்தத் தலைப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்தப் பெயர் தொண்டர்கள் வைத்த பெயர். பொதுவாக... புரட்சி என்கிற சொல் அரசியலோடு அடையாளப்படுத்தப்படுகிறது. .. ஆனால், உண்மையான அர்த்தமே வேறு...! புரட்சி என்கிற அடைமொழி வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் எந்தப் புரட்சியும் செய்யவில்லை என்பதுதான் உண்மை...!


புரட்சி என்பது சமூக மாற்றத்தைக் குறிப்படுகின்ற ஒரு சொல்...! பிரெஞ்சுப்புரட்சி( French Revolution ) என்று வரலாற்றில் படிக்கிறோம். ஐரோப்பாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கான; முதல்படியாக பிரெஞ்சுப்புரட்சியை வரலாற்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.. அப்படி... தமிழ்ச் சமுதாயத்தில், இலக்கியத்தின் மூலமாக புரட்சி செய்தவர் யார்...?!

எட்டாம் நூற்றாண்டில்...கிட்டத்தட்ட 1200 வருடங்களுக்கு முன்பு; வாழ்ந்தவள்... பூமாதேவியின் அம்சமாகச் சொல்லப்படுகிறவள்...தமிழை
ஆண்டவள் என்பதால் அவ்ள் ஆண்டாள்...! திருத்துழாய்ச்செடியின்( துளசி ) கீழ் கண்டெடுக்கப்பட்டவள்... கோதா என்கிற பெயருக்கு பூமி என்றொரு அர்த்தமுண்டு... ஆதலால்.. கோதை நாச்சியார் என்றழைக்கப்பட்டவள்...!


நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில் நான் மிகவும் விரும்பிப் படிப்பது.. அவளின் வாய்மொழியான நாச்சியார் திருமொழி....! ஒரு இல்க்கியப்
படைப்பாளியாகவோ, ஆழ்வார்களில் ஒருத்தியாகவோ; நான் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை...! சிறு வயது முதல், அவளை என்னுடைய
தோழியாகத்தான் உணர்ந்து வந்திருக்கிறேன். அவளைப்பற்றிப் பேசும்போதும், எழுதும்போதும், அவளின் திருமொழிகளைப் பாடும்போதும்...
பரவச நிலைக்கேப் போய்விடுவேன்..! அவளுக்குக் கிடைத்த பேரின்பம் எனக்கும் ஒரு நாள் கிடைக்கும் என்று தீவிரமாக நம்புபவள் நான்..!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு..? என்றிருந்த காலத்தில்...தமிழ்மொழியின் மிகச் சிறந்த பெண்கவிஞராக... ஆண்டாளைத் தவிர வேறு
யாரை நாம் நினைக்கமுடியும்...?! வீட்டைவிட்டு பெண்கள் அதிகம் வெளிவராத ஒரு காலத்தில், கன்னிப்பெண்களை...அதுவும் விடியற்காலையில், எழுப்பி பாவை நோன்பு நோற்க வைத்தவள்..!

பலதார மணம் இருந்த பண்டையச் சமூகத்தில்.. பெண் என்ன நினைக்கிறாள்...? அவளின் உள்ளக்கிடக்கைதான் என்ன...? என்பதையெல்லாம்
அறிய முடியாத... நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத... ஒரு காலக்கட்டத்தில்...பெண்ணின் மன உண்ர்ச்சிகளை...அந்த மனதில் தோன்றுகிற
காதலையும்...காமத்தையும்...மிக வெளிப்படையாக...பெண்ணின் வாய்மொழியாகவே எழுதியவள்...!

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...!

எத்துணை தைரியமாகத் தன் காதலை எழுதியிருக்கிறாள்...?! நீங்கள் நினைக்கலாம்...அவள் காதலித்தது அந்தப் பரந்தாமனையல்லவா..?
அதனால்தான் அந்தத் தைரியம் என்று...! இந்த உணர்வை...இலக்கியவாதிகள் , காதல் என்று சொல்கிறார்கள்...! ஆன்மீகவாதிகள், பக்தி என்று
சொல்கிறார்கள்...! எல்லாவற்றுக்கும் காரணம் மூன்றெழுத்து...! அன்பு..! காதலுக்கும், பக்திக்கும் அதே மூன்றெழுத்துதான்...!


இதோ.. இன்னொரு வெளிப்படையான ஒரு பாசுரம்...!
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து, குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகூலம் செய்யும்....

யோசித்துப் பாருங்கள்... அன்றைய சமூகத்தில்... ஒரு பெண் தன் மனதில் தோன்றுகிற காமவேட்கையைப் பற்றி இப்படி வெளிப்படையாக
எழுத முடியுமா..?! இது புரட்சி இல்லையா...?! இவளல்லவோ புரட்சித்தலைவி...!

தமிழுக்கு அழகே 'ழ' கரம் தான்..! ஆண்டாளின் தமிழ்ப்புலமைக்கும், இலக்கணத்தில் அவளுக்கிருந்த ஆளுமைக்கும்...ஒரு சிறிய
உதாரணத்தை இங்கே தருகிறேன்... எல்லா வரிகளிலும் 'ழ'கரம் வரும்படியாக ஒரு பாசுரம் அமைத்திருக்கிறாள்...!

எழிலுடைய அம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப் பூவழகர், எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினரே....!

வாழ்நாளில் ஒருமுறையேனும் ஆண்டாளைப் படியுங்கள்...! நாச்சியார் திருமொழியோடு உங்கள் மனம் ஒன்றிப் போவதை
நீங்களே உணர்வீர்கள்....!

No comments:

Post a Comment