Thursday, January 8, 2015


இராமாயணத்தில் உணர்வு பூர்வமான இடம்…சீதா பிராட்டியார்---அனுமன் சந்திப்பு…

கம்பன் இந்தக் காட்சிப் படலத்திற்காக 158 பாடல்கள் எழுதியிருக்கிறான்…சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றாலும் கூட நான் இரண்டு, மூன்று பதிவுகள் எழுதியாக வேண்டும்…காட்சிப் படலம் முழுக்கவே சீதை இராமனைப் பிரிந்த துயர் உணர்ச்சி ததும்ப சொல்லப்பட்டிருக்கிறது..

“ துன்பக்கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்…” என்று பாடிய... கோதை நாச்சியார் போல்; சீதை, இராமன் என்கிற தோணி பெறாது உழல்கின்ற நிலை….காதலும், காதல் சார்ந்த நுண்ணுணர்வுகளும் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்து ஓடுகின்றது காட்சிப் படலத்தில்….

மிதிலை நகரத்தின் அரண்மனைத் தெருவில், தயரதன் புதல்வனை, தான் நோக்கிய அண்ணலை, அந்த நிமிடத்திலிருந்தே தன் மணாளனாக வரித்துக் கொண்டாள் ஜனகன் மகள்…! இந்த இப்பிறவியில் அவள்தான் அவனுக்கு மாலையிடப் போகிறாள் என்பது விதி…ஆனாலும் பெண்மனம் அல்லவா…உள்ளுக்குள் கலக்கம்…தன் உள்ளங்கவர் கடல்வண்ணன், அழியா அழகுடை ஆனந்தராமன்…சுயம்வர மண்டபத்தில் சிவன் வில்லை எடுத்து நாணேற்ற வேண்டுமே என்று கவலைப்பட்டாள்…

“ செவ்வரிநற் கருநெடுங்கண் சீதைக்காகிச் சினவிடையோன் சிலையிறுத்து…” …குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி….

இராமன் மரவுரி தரித்து கானகம் கிளம்பிய போது, ” நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு…” என்று கூறி, அவனோடு தானும் புறப்பட்டாள்…பஞ்சவடியில் இயற்கை எழில்சூழ் ஆரண்யத்தில் இல்லறம் இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது…

அப்படியே அமைதியாக வாழ்க்கைப்பயணம் தொடர்ந்திருந்தால், இராமனின் வரலாறு யாருக்குத் தெரிந்திருக்கும்…? இராம நாமத்தை யுகயுகாந்திரமாக நாம் ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியமே இருந்திருக்காதில்லையா…?!

அவன் அவதார நோக்கத்திற்கான புதிரை அவிழ்க்க ஆரம்பித்தது விதியென்னும் மாயை…விதிவலி கடத்தல் என்பது அரிது…மாயை, பொன்மான் ரூபத்தில் வந்து வைதேகிக்கு விளையாட்டுக் காட்டியது…பர்ணசாலையை விட்டு வெளியே வராதே என்று எச்சரித்துவிட்டுப் போனான் இராகவன்…இராவணனுக்குப் பிச்சையிட, பர்ணசாலையை விட்டு வெளியே வந்து, முதலை வாயில் அகப்பட்டுக் கொண்ட மைதிலியின் நிலையை என்னவென்று சொல்வது…?

அனுமனோடு, நாமும் இராமநாமத்தை ஜெபித்தவாறே; அசோக வனம் புகுவோம்…

“ ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரனாம தத்துல்யம் ராம நாம வரானனே..”

விழுதல் விம்முதன் மெய்யுற வெதும்புதல் வெருவா
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழந்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.

இராமபிரான் நினைவின்றி, தனக்குரியதாக வேறு ஒரு செயல் இல்லாதவளாய் இருந்தாள்….

அஞ்சனமை( கண் மை ), முகில் கூட்டங்கள்…இவைகளைக் காணும் போதெல்லாம்,
“ உரிய காதல் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவெனும் துயருருவு கொண்டால் அன்ன பிணியாள்….” எதைக் கண்டாலும் கடல்வண்ணன் நினைவுக்கு வருகிறான்….

” மும்மடங்கு பொலிந்த முகத்தினன்
வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள்…”

“ சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்…”

“ அவ்வி ராமனை உன்னித் தன் ஆருயிர்
செவ்வி ராது உணர்வு ஓய்ந்து உடறேம்புவாள்..”

“ என்புருகி இனம்வேல் நெடுங்கண்கள் இமைப் பொழுதா பலநாளும்…”
“ அன்புடையாரைப் பிரிவுறும் நோயது நீயும் அறிதி குயிலே….” …நாச்சியார் திருமொழி….

கோதை நாச்சியார் உருகியதை இங்கு ஒப்பு நோக்கலாம்..

“ இராம நாமமே நீ துதி மனமே
க்ஷேமமுறவே நீ தினமே….சீதா ராம நாமமே
நீ துதி மனமே…
மனமே…தினமே…” :) :)
 
 

No comments:

Post a Comment