Wednesday, January 21, 2015


சீதாப்பிராட்டி மனந்தேறி, தன் முன்  வணங்கி நிற்கும் அநுமனைப் பார்க்கிறாள்…

 

“ அரக்கனேயாக வேறொரு அமரனேயாக அன்றிக்

குரக்கினத்தொருவனே தானாகுக…”

 

இங்கு வந்து எம்பிரானின் நாமம் சொல்லி, என்னுயிரை உருக்கி விட்டானே…இதை விடச் சிறந்த உதவி வேறுண்டோ…உணர்வு, ஆன்மா…எங்கெங்கிலும் இராமனே வியாபித்திருக்கிறான்…யார் இராமநாமத்தை ஜெபித்தாலும் பிராட்டியின் ஊன் உருகுகிறது…

 

என்னைப் பார்க்கும்போது, இவன், “ கண்ணீர் நிலம்புகப் புலம்பா நின்றான்…”  “ வீரனே நீ யார்..?” என்று வினவினாள்…

 

அநுமன் தன் வரலாறு கூறுகிறான்…” வானின் நன்னெடுங்காலின் மைந்தன்…நாமமும் அநுமன் என்பேன்…”

 

இராமபிரான் அடியேனை அழைத்து, தென்திசை நோக்கித் தேடிச்செல்வாயாக என்று கட்டளையிட்டான்…அவனுடைய அருளோடு கூடிய ஆசி பழுது படுமோ…

 

“ வைதேவி விண்ணப்பம்…

ஒத்தபுகழ் வானரக்கோன்

உடனிருந்து உனைத்தேட

அத்தகு சீரயோத்தியர்கோன்

அடையாளம் இவை மொழிந்தான்….”

…பெரியாழ்வார்….பெரியாழ்வார் திருமொழி….

 

அநுமனின் கூற்றைக் கேட்டபோது,

” பேருவகை பொங்கி வெய்துயிர்ப்

பொடுங்கி மேனி வானுற விம்மி வீங்க….” அருவிநீர் ஒழுகும் கண்ணாள் ஆனாள் சீதை….

 

அய்யனே…என் பெருமானின் திருமேனியழகு எப்படியிருக்கிறது…எனக்கு எடுத்துச் சொல்வாயாக….

 

அடி முதல் முடியீறாகப் பரம்பொருளைப் பாதாதிகேசமும், மனிதர்களை கேசாதிபாதமும் வருணித்துக் கூறுதல் மரபு…

 

“ பொன்னடிக் காண்பதோர் ஆசையினால் என்

பொரு கயற் கண்ணினைத் துஞ்சா….”

….கோதை நாச்சியார்….நாச்சியார் திருமொழி…

 

“ நாயகன் திருவடி சேயிதழ்த் தாமரை…”

” பூங்கணைக் காற்கொரு பரிசு….’’

அவனுடைய கால்கள் புவனம் யாவையும் ஒருசேர அளக்கப் பொருந்தியிருக்கும்…அந்தப் பாதத்தின் பெருமையை “ குரங்கினுக்கு உவமை இவ்வுலகிற் கூடுமோ…”

 

எம்பெருமானின் அழகிய திருவுந்தி, “ கங்கையின் பொலஞ்சுழி…”

மரகதமலை போன்றது அவனது திருமார்பு…

 

” முழந்தாளைப் பொருந்தி விளங்கும் தடக்கை..”. “நின்ற யானையின் கோடுறு கரம்…”….உத்தம புருஷ லக்‌ஷணம்….!

 

மேருமலையை அவனிரு புயங்களுக்கு உவமையாகச் சொல்ல முடியுமா…?!

 

கடலில் உண்டாகும் சங்கும், கமுக மரமும் அவன் கழுத்துக்கு இணையாகுமா…

 

” அண்ணல்தன் திருமுகம் கமலம் ஆம் எனில்

கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்…?..’’

 

கண்ணை தண்மதி என உரைக்கலாமோ….

பற்கள் முத்துக்களோ…முழுநிலவின் முறியின் திறமோ…

 

“ இந்திரநீலக் கல்லினிடத்து எழுந்த ஒளி போன்று வள்ளல் திருமூக்கிற்கு உவமை பின்னும் குறிப்பாமோ…’’

 

இராமபிரானின் திருமேனியழகை எடுத்துக் கூறுவதாலேயே இக்காண்டத்திற்கு சுந்தர காண்டம் என்னும் பெயர் வந்தது..

 

எம்பெருமானின் திருமேனி உவமைகளை விஞ்சியது என்பதை அநுமனின் கூற்றால் உணரப்பெறலாம்…

 

“ வானினோடு மண்ணும் நீ வளங்கடற் பயனும் நீ

யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே….”

…திருமழிசையாழ்வர்….திருச்சந்த விருத்தம்… .. J

 

 

No comments:

Post a Comment