Thursday, January 8, 2015

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள்..ஆடையில், ஆபரணங்களும் சேர்த்தி..நகைகள் பெண்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல..ஆண்களும் அணிந்திருக்கின்றனர்..இப்போதும் அணிகின்றனர்..

காதில் குண்டலம், கழுத்தில் ஆரம், கைகளில் கேயுரம், விரல்களில் கணையாழி, இடுப்பில் பொன்னரை ஞாண், கால்களில் கழல்..அணிந்திருந்த செய்தியைக் கல்வெட்டுகள், இலக்கியங்களின் மூலமாக
அறிய முடிகிறது..

சிலப்பதிகாரத்தில் மாதவி அணிந்திருந்ததாக ஒரு நகைக்க...டையே அறிமுகப்படுத்துகிறார் இளங்கோவடிகள்..படிக்கும்போது எனக்கு மண்டை காய்ந்து போனது...!

நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப்
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக் கமைவுற அணிந்து
தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து
மத்தக மணியோடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து
வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்....

படிக்கப் படிக்க வந்துகொண்டே இருக்கிறது...!

கோதை அவள் பாட்டுக்கு ஒரு பட்டியல் கொடுக்கிறாள் திருப்பாவையில்..

” சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்...”

ஞானசம்பந்தர் எடுத்த எடுப்பிலேயே, “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி...’’ என்று பாடினார்..நான்கு வயது குழந்தைக்கு, தோடுதான் முதலில் கண்ணில் தென்பட்டிருக்கிறது...

கம்பராமாயணத்தில் அந்நாளைய மாந்தர் அணிந்திருந்த அணிகலன்கள் பற்றி ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன. இராமனின் கணையாழிக்கும், சீதையின் சூடாமணிக்கும் முக்கிய அந்தஸ்தே குடுக்கப்பட்டிருக்கிறது. இராவணனைப் பற்றிச் சொல்லுகிறபோதெல்லாம், அவனுடைய செல்வச்செழிப்பை ஆரவாரத்தோடு விவரிக்கிறான் கம்பன்..

குண்டலம் முதலிய குலம்கொள் பேர் அணி
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால்
உண்டுகொல் இரவு இனி உலகம் ஏழினும்
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே..

ஆரணிய காண்டம்….சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்.

இராவணன் அணிந்திருந்த குண்டலம் முதலிய சிறந்த ஆபரணங்கள், அடர்ந்த பேரொளியை எல்லா இடங்களிலும் விளங்கும்படி வீசுதலால் “ இனிமேல் ஏழு உலகங்களிலும் இரவு என்னும் பொழுது உண்டோ..? எட்டுத் திசைகளிலும் இருள் இல்லையே..” என்று கண்டவர் உரைக்க, இலங்கைச் சபையில் இராவணன் இருந்தான்..

சித்திரை அக்னி நட்சத்திர வெயிலில், அக்ஷய திருதியை என்று ஒருநாள் கண்டுபிடித்து அன்று தங்கம் வாங்கினால் சுபிட்சம் என்று ஏகத்துக்கும் ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது..அன்றைய தினம் தி.நகர் சென்றால் உருப்படியாக வீடு வந்து சேர முடியாது..!

இதுநாள் வரை அக்‌ஷய திருதியையில் ஒருகிராம் தங்கம்கூட வாங்கியதில்லை..பெண்குழந்தை இருந்தாலாவது தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்..எனக்கு அந்த ஆசையே எழாதவாறு எம்பெருமான் மகனைத் தந்தருளியிருக்கிறான்..!

இன்றைக்கு கல்லூரிக்குப் போகும் பெண்கள், படித்து முடித்து உடனே வேலைக்குப் போகும் பெண்கள்..இவர்களுக்கெல்லாம் தங்க மோகம் குறைந்து வருவதைக் கவனிக்கிறேன்..இது வரவேற்கத்தக்க விஷயம்தானே...

புன்னகை இருக்க பொன்னகை எதற்கு...புன்னகையால் ஒருவரைக் கவர முடியவில்லையென்றால் இந்த ஜென்மம் எடுத்துதான் என்ன பயன்...:)
See More
 

No comments:

Post a Comment