Thursday, January 8, 2015

நம்முடைய பாரம்பரிய இசையில் தாள வாத்தியக்கருவிகள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றன..கரை கடந்து ஓடும் ஆறுகளைப் போன்றவை பாடலும், ஆடலும்..இவற்றை ஒர் வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகளைப் போன்றவை தாளங்கள்..ஆங்கிலத்தில் percussion instruments என்பார்கள்..

மிருதங்கம், தவில், கடம், கஞ்சிரா, தபேலா, ஜலதரங்கம், டோலக்..போன்றவை இன்றைய இசையில் கோலோச்சுகின்ற வாத்தியக்கருவிகள்..ட்ரம்ஸ் மேற்கத்திய இசையில் ஆத...ிக்கம் செலுத்துகிறது..

பண்டைய தமிழர் மரபில் எத்தனை வகையான வாத்தியக்கருவிகள் உபயோகத்தில் இருந்தன என்பதைச் சோழர்காலக் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்..தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் உள்ள தாள வாத்தியச் சிற்பங்கள்..தாராசுரம் ஐராவதேஸ்வரர்
கோவிலில் உள்ள ஆடல்மகளிர் மற்றும் அவர்தம் குழுவினரின் வாத்தியக்கருவிகள் கொண்ட சிற்பங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் விருந்தளிப்பவை..

பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கணப்பறை, தண்ணுமை, முரசு, முழவு, தூம்பு, சிறுபறை, மொந்தை..போன்ற தாளக்கருவிகளைப் பழந்தமிழர் பயன்படுத்தினர் என்பதை சிலப்பதிகாரம் வழியாக அறியலாம்..

“குழல் வழி நின்றது யாழே..யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே..தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே..”

மிருதங்கத்தின் பண்டையப்பெயர் தண்ணுமை..முழவு என்பதின் இன்றைய பெயர் டோலக்..மிருதங்கம், டோலக், தபேலா..இந்த மூன்றையும் மத்தளம் என்று சொல்கிறார்கள்
அறிஞர்கள்..

“மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...” என்கிறது கோதையின் வாரணமாயிரம்...ஊர்மக்களுக்குப் பறையடித்துச் சொல்வது என்பார்கள்..பறை என்பது ஒரு தாள வாத்தியம்..கோதையின் திருப்பாவையில் நிறைய இடங்களில், “பறை” என்ற சொல் வருகிறது..இடத்திற்குத் தக்கவாறு பொருள் கொள்ளவேண்டும்..

” நாராயணனே, நமக்கே பறை தருவான்..” இந்த இடத்தில் இறைவனிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அருள் என்று பொருள் கொள்ளவேண்டும்..”பாடி பறைகொண்டு..” இந்த இடத்தில் பறை என்கிற இசைக்கருவியை வாசித்து..என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்..

துடி, உடுக்கை, கிடுகிட்டி, பம்பை, உருமி, நகரா, தப்பு, சிப்ளாக்கட்டை, சுரபலகை, நாயினதாளம், தம்பட்டம், முரசு(டமாரம்)..போன்ற தாளக்கருவிகள் கோவில் விழாக்களில் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன...

கதாகாலட்சேபம் செய்பவர்கள் கையில் மூடி போன்று ஒரு தாளக்கருவி இருக்கும்..அதற்குத் தாளம் என்று பெயர்...வழக்குத்தமிழில் ஜால்ரா என்று சொல்வார்கள்..”கிண்கிணியென்று தாளமிசைத்து...”என்று தமிழ்ப்பாடல்களில் வரும்..

சீர்காழி அருகில் உள்ள திருக்கோலக்கா திருத்தாளமுடை
யார்( வடமொழியில் சப்தபுரீஸ்வரர்) ஞானசம்பந்தருக்கு இரண்டு பொற்தாளங்களைத் தந்தருளினார்..இறைவி அதற்குத் தெய்வீக ஓசையைத் தந்தருளினாள்..ஆதலின் இத்தலத்து அம்பிகைப் பெயர் ஓசை கொடுத்த நாயகி..!

தில்லை நடராஜப்பெருமானின் ஊழித்தாண்டவத்திலிருந்து சராசரங்கள் தோன்றின என்பது சைவர்களின் நம்பிக்கை..
ஆடல்வல்லானின் உடுக்கையிலிருந்து எழும் ஒலிதான் அண்ட சராசரங்களின் ஆதார ஸ்ருதி என்கிறது சைவ சித்தாந்தம்..!

கம்பராமயணத்தில் அன்றையக் காலக்கட்டத்தில் வழக்கத்திலிருந்த தாளக்கருவிகள் பற்றியக் குறிப்புகள் ஏராளமாக நமக்குக் காணக்கிடைக்கின்றன..இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பணகை, கரன் என்கிற அரக்கனிடம் போய் முறையிடுகிறாள்..கரன்.. இராம, இலக்குவர்கள் மீது போர் தொடுத்து வருகிறான்..

முருடு இரண்டு முழங்குறத் தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக
அருள் திரண்ட அருக்கன் தன்மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே..

ஆரணிய காண்டம்...கரன் வதைப் படலம்

முருடு என்னும் பறையின் இரண்டு பக்கங்களிலும் முழங்கும்படித் தாக்கப்படுவதால் எழுந்த ஒலி, சக்கரங்கள் உருள்வதால் திரண்டு முன்னேறுகின்ற தேர்களின் ஆரவாரத்துள் அடங்கிப் போகவும், கருணையே ஒரு வடிவெடுத்ததைப் போல வந்த சூரியனாகிய இராமன் மேல் உலகத்தில் உள்ள இருள் திரண்டு வந்து சேர்ந்தது போலவும் படை எழுந்தது..

அவனுக்கு ரொம்ப ஜால்ரா போடாதே..
ஊர்பூராத் தம்பட்டம் அடிக்காதே..
டமாரம் அடிச்சாக்கூட உனக்குக் காதுல விழாதே...
இதெல்லாம் அன்றாட வாழ்வில் தாளக்கருவிகள் நமக்குள் உண்டாக்கிய தாக்கம்...:) :)
See More
.
 
 
 
 
 

No comments:

Post a Comment