Saturday, March 19, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 3 )

 

ஆலங்காட்டுறை ஆடல்வல்லானின் மீது எல்லையற்ற அன்பு பூண்ட காரைக்காலம்மை; எம்பெருமானின் அருளைப் போற்றி அற்புதத்திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை என்னும் படைப்புகளை இந்தத் தன்னிகரில்லா தமிழ்மொழிக்குக் கொடையாகக் கொடுத்திருக்கிறாள்

 

அந்தாதி இலக்கியங்களுள் தொன்மையானதும், முதன்மையானதுமாகப் போற்றப்படும் அற்புதத் திருவந்தாதி 101 பாடல்களைக் கொண்டது.. இறைவன் மேல் கொண்ட அன்பு, அருட்திறம், அவன்தாள் பற்றுகின்ற சரணாகதிநிலை என்பனவற்றை மிக விரிவாகப் பாடியிருக்கிறாள்

தான் இளமைக்காலம் முதலாகவே, எம்பெருமானிடம் காதலாகிக் கசிந்து, உருகியதை முதல் பாடலிலேயே பதிவு செய்கிறாள்.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே

எஞ்ஞான்று தீர்ப்ப திடர்… “

தமிழ் இலக்கணமுறைப்படி இவ்வகைப் பாடலை இருவிகற்ப நேரிசை வெண்பா எனலாம்முதலிரண்டு அடியில் ஓர் எதுகையும், மீதியிரண்டு அடிகளில் வேறோர் எதுகையும் பயின்று வருவது இரு விகற்பா எனப்படும்..

இரண்டாம் அடியின் ஈற்றடியில்நிறந்திகழும்என்றொரு தனிச்சொல் பயின்று, முதலடியானபிறந்துஎன்கிற சொல்லுக்கு எதுகையாக அமைந்திருப்பதால் இது நேரிசை வெண்பா….

யோசித்துப் பார்க்க வேண்டும்.. 1500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடல்எத்துணை எளிமையான தமிழில் எழுதியிருக்கிறாள்….?! பெண்கள் மிகுந்த புலமையுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள்

 

இந்தப் பாடலின் கருத்து மிக எளிமையானது

நான் பேசத் தொடங்கிய காலம் முதலாக; உன்னுடைய புகழைப் பாடி, உன் பாதங்களை வணங்கி வந்தேன்.. நீ எப்போது என்னுடைய பிறவியை நீக்கியருள்வாய்…” என்று கேட்கிறாள்..

 

அந்தாதி வகைப்பாடல் இல்லையா….? அடுத்த பாடலைப் பாருங்கள்

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரு நெறிபணியா ரேனும்சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாரும் எம்மானார்க்

கன்பறா தென்னஞ் சவர்க்கு… “

முதல் பாடலின் ஈற்றடியான இடர் ( தீர்ப்பது + இடர் = தீர்ப்ப திடர் ) இரண்டாவது பாடலுக்கு முதலடியாக அமைந்திருக்கிறதுஇதுவும் இருவிகற்ப நேரிசை வெண்பா தான்

 

என்னுடைய துன்பங்களை நீக்கவில்லையென்றாலும், எனக்காக இரங்கி அருள் புரியாவிட்டாலும், அவனை வணங்குகின்ற முறையைக் கற்பிக்காவிட்டாலும், எரிகின்ற நெருப்பில் எலும்பு மாலையை அணிந்து நடமிடும் ஈசனை வழிபடுவதிலிருந்து என் மனம் மாறாது. அவன்மேல் அன்பு செலுத்துவதை விடமாட்டேன்… எம்மானார்க்கு அன்பு அறாது என் நெஞ்சு அவர்க்கு…!

 

ஈசனை முதன்மைக் கடவுளாகக் கொண்டது சைவசமயம்… சைவத்தை தென்னகத்தில் பரப்பிய முன்னோடி என்று காரைக்காலம்மையைச் சொல்லலாம்….

 

“ அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்

அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் – பவர்ச்சடைமேல்….”

அற்புதத் திருவந்தாதி…. 3.

காரைக்காலம்மைக்கு முன்னூறு வருடங்கள் கழித்து உதித்த கோதை,

“ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்…. “

என்று பாடியதை இங்கு ஒப்பு நோக்கலாம்….

 

தொடரும்….

 

 

No comments:

Post a Comment