Monday, March 14, 2016


பைந்தமிழ்ப் பேயார்….. ( 1 )

 

தமிழ் இலக்கியத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த, ஆகச்சிறந்த பெண்பாற் புலவர்களில் இருவரை ( கோதை, ஒளவை ) ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்… அந்த வரிசையில் இந்தப் பதிவு, புனிதவதி என்கிற இயற்பெயரைக் கொண்ட காரைக்காலம்மையைப் பற்றியது…

 

அம்மை தமிழுக்கு அளித்த கொடை…

அற்புதத் திருவந்தாதி…. 101 பாடல்கள்.

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள்… 22 பாடல்கள்.

திருவிரட்டை மணிமாலை… 20 பாடல்கள்.

காரைக்காலம்மையாரின் பாடல்கள் பதினோராந்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன… சைவ பக்தியிலக்கியத்தில் தேவாரம் கொண்டாடப்படுகின்ற அளவுக்கு, அம்மையின் பாடல்கள் புகழ் பெறவில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டு….

 

புனிதவதி காலத்தால் மூத்தவள்…. கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்பது வரலாற்றாய்வாளர்களின் துணிபு…. தமிழில் அந்தாதி என்கிற அரியவகைப் பாடலுக்கு ( ஒரு பாடலின் ஈற்றடியும், அடுத்த பாடலின் முதலடியும் ஒன்று போலிருப்பது அந்தாதி ) முன்னோடி; அம்மையின் அற்புதத் திருவந்தாதியும், திருவிரட்டை மணிமாலையுமே…

 

அவளுடைய பதிகம் பாடும் முறையைத்தான்; பிற்பாடு வந்த அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பின்பற்றினர்…. காரைக்காலம்மை 63 நாயன்மார்களுள், மிகச்சிறப்பான பெண்பாற் புலவர்… தன்னைத்தானே “ காரைக்காற்பேய் “ என்றழைத்துக் கொண்டவர்…!  “ பேயார்க்கும் அடியேன்..” என்று சுந்தரர் அம்மையை, தன்னுடைய “ திருத்தொண்டத்தொகையில் “ குறிப்பிடுகிறார்….

 

புனிதவதியின் வரலாறு ஓரளவுக்கு, அனைவரும் அறிந்ததே… சுருக்கமாக அவளுடைய வரலாற்றை எழுதுகிறேன்…

சோழநாட்டின் கடற்கரை நகரமான காரைக்காலில் ( பண்டைய பெயர்… காரைவனம் ) வணிகர் மரபில் தோன்றிய தனதத்தன் – தர்மவதி தம்பதியருக்கு பங்குனி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் உதித்த பெண் புனிதவதி… சிறுவயது முதலே, ஈசனிடம் மாறாப்பற்று கொண்டிருந்தாள்… திருமணப்பருவம் வந்தவுடன், நாகைப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி என்னும் வணிகனின் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியை மணம் செய்து கொடுத்தனர்….

 

புனிதவதி ஒரே மகளாதலால், நாகைக்கு அனுப்ப மனமில்லாமல், மகளுக்கு காரைக்காலிலேயே ஒரு மாளிகை அமைத்துக் கொடுத்தான் தனதத்தன்… பரமதத்தன் தன்னுடைய வணிகத்திறமையால் செல்வம் பெருக்கினான்…. புனிதவதியோடு இனிதாக இல்லறம் நடத்தி வந்தான்…. புனிதவதி சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தாள்…

 

ஒருநாள் பரமதத்தனுக்கு அவனுடைய வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார்…. அவற்றை இல்லத்திற்கு அனுப்பி வைத்தான் பரமதத்தன்… அப்போது சிவனடியார் ஒருவர் மிகுந்த பசியோடு புனிதவதியின் இல்லம் புகுந்தார்…. வீட்டில் அரிசி உணவு மட்டுமே சமைக்கப்பட்டிருந்தது… கறியுணவு அப்போது சமைக்கப்படவில்லை…. ஆதலால் ஒரு மாங்கனியைத் துண்டங்களாக்கி, அடியவருக்கு இட்டு உணவு படைத்தாள் புனிதவதி… அவளின் உபசரிப்பில் அகமகிழ்ந்து, வாழ்த்தி விடைபெற்றார் சிவனடியார்…

 

பின்பு, பரமதத்தன் மதிய உணவிற்காக இல்லம் வந்தான்… அவனுக்கு உணவும், கறியமுதும் பரிமாறிய பின்னர், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவன் உண்ணக் கொடுத்தாள்…. மாங்கனியின் சுவையில் மயங்கிய பரமதத்தன், மற்றொரு மாங்கனியையும் இடுமாறு கேட்டான்… திகைத்த புனிதவதி, “ மற்றுமொரு கனிக்கு எங்கு செல்வேன்…? “ என்று மனம் வெதும்பி, எம்பெருமானிடம் முறையிட்டாள்… ஈசனருளால் அவள் கையில் ஒரு மாங்கனி கிடைத்தது… அந்த மாங்கனியைக் கணவனிடம் கொடுத்தாள்….ஏற்கனவே உண்ட மாங்கனியை விடவும், இந்த மாங்கனி சுவையில் மேம்பட்டிருக்கிறதே என்றெண்ணிய பரமதத்தன், ” இக்கனியை நீ எங்கு பெற்றாய்….” என்று மனைவியிடம் கேட்டான்….

 

புனிதவதி நடந்த விஷயங்களை மறைக்காமல் கணவனிடம் தெரிவித்தாள்… “ அப்படியானால் இறையருளால் மீண்டுமொரு கனியைப் பெற்று வா….” என்றான்… புனிதவதி இறைவனை வேண்ட மற்றுமொரு கனி வந்தது…. அந்தக் கனியை பரமதத்தன் கையில் கொடுக்க, அது அவன் கையிலிருந்து மறைந்தது…. பரமதத்தன் மனம் தடுமாறித் தன் மனைவியைத் தெய்வப்பெண் என்று கருதி, அவளை விட்டுப் பிரியும் எண்ணம் கொண்டான்…

 

“ அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும்

துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி ஒழுகுநாளில்…”

சேக்கிழார்….. பெரிய புராணம்….

 

தொடரும்…..

 

No comments:

Post a Comment