Thursday, March 10, 2016


விபீஷணன், தன் தாள் பற்றிக் கெஞ்சிய வார்த்தையைச் செவியுற்ற இலங்கேஸ்வரன் வெகுண்டான்

 

அந்த இராமன் சக்கரப்படைத் தாங்கிய திருமாலே என்று கூறினாய்நீ சொல்வது உண்மையானால்; கோழையான, துன்மதியையுடைய அந்தத்திருமால் எத்தனை போர்களில் என்னிடம் தோல்வியுற்றான்…? நான் இவ்வளவு காலம் ஆற்றிய செயல்களோ என் விருப்பத்தின்படி செய்தனவே…. அப்பொழுதெல்லாம் அதனைத் தடுப்பதற்கு வராமல், அந்தத் திருமால் உயிர்ப்படங்கிக் கிடந்தானோ…?...”

 

நான் இந்திரனைப் பெருஞ்சிறையில் அடைத்த நாளிலும், திசையானைகளை அவற்றின் தந்தம் அறும்படி உடைத்த நாளிலும், அந்தத் திருமாலை; யான் முன்னாளில் போர்க்களம் தோறும் துரத்திய காலத்திலும், தேவர்களின் உலகைச் சின்னாபின்னமாகும்படி நான் வெற்றி கொண்ட நாளிலும்நீ சொன்ன அந்தத் தேவன் வயதிலும், ஆற்றலிலும் சிறியவனாயிருந்தானோ…?...”

 

சிவனும், நான்முகனும், திருநெடுமாலும், மற்றுமுள்ள தேவர்களும் உடனுறைந்து அடங்க; மூன்று உலகங்களையும் நான் ஆட்சி புரிந்தபோது, அந்தத் திருமால் வலி ஒடுங்கப் பெற்றிருந்தானோஉரையாய்…”

 

நஞ்சின் வெய்யவன்விஷத்தைக் காட்டிலும் கொடியவனான இராவணன், “ கடுங்கோபம் காரணமாக விளையும் யுத்தத்தில், நீ எம்முடன் கிளம்பி வரவேண்டியதில்லை…. இந்தப் பெரிய நகரத்திலேயே இனிது தங்கியிருப்பாயாக…. பயப்படாதே… “ என்று அருகில் நின்ற விபீஷணன் முகத்தைப் பார்த்து, இரு கைகளையும் தட்டி, இடி இடிப்பது போன்று, பேரொலி விளையுமாறு வெடிச்சிரிப்பு சிரித்தான்….” கை எறிந்து உரும் என நக்கான்…”

 

பின்னர், விபீஷணன் இராவணனைப் பார்த்து, “ ஐயனேஉன்னைவிடவும் அதிகமான வலிமை படைத்தவரான பெரியோர்கள், முன்னாளில் இந்தத் திருமாலின் கோபத்தினால் தமது உறவுமுறையாருடனே இறந்துபட்டனர்…. இன்னமும் நான் உன்பாற் கூறவேண்டுவது உள்ளது…. இரணியன் என்பவனுடைய சரிதத்தைச் சொல்கிறேன்….” என்று சொல்லி, இரணியன் வதைப்படலத்தைச் சொல்லத் தொடங்கினான்..

 

இரணியன் கதை வான்மீகத்தில் இல்லைஸ்ரீநரசிங்கப்பெருமான் மேல் தனக்கிருந்த பக்தியை வெளிப்படுத்தவே, கம்பன் இந்தப் படலத்தை எழுதியதாகச் சொல்வார்கள்….

 

இரணியன் வாழ்க்கை வரலாற்றை விபீஷணன் கூறக் கேட்டும், இராவணன் தன் மனதை மாற்றிக்கொள்ளவில்லை…. பிராட்டியின் மீதிருந்த மோகத்தால், அவன் உள்ளத்தில் காமத்தீ கொழுந்து விட்டெரிகிறது… “ மூட்டிய தீயென முடுகிப் பொங்கினான்…”

 

இராவணன் விபீஷணனை நோக்கி, “ வன்மையோய்இரணியன் என்பவன் எங்கள் மூதாதையர்களைக் காட்டிலும் வலியன்தன்னைச் சரணடைந்தவரைக் காக்கவல்ல திருமால், அவனை அழித்து ஒழித்தான் என்று கருதி அவனிடம் அன்பு கொண்டாய்…. எத்தகைய வலியையும் மரணம் என்ற ஒரு விஷயம் மாற்றிவிடும்….”

 

தன்னைப்பெற்ற, தன்னுடைய தந்தையின் உடலத்தை மாயவன் பிளந்திட, வருந்தாது மகிழ்ச்சி கொண்ட அவன்மகன் பிரகலாதனும்; நம்முடைய விரோதிகளிடத்து அன்பு பூண்டொழுகும் நீயுமே நிகர்மற்றவர்கள் உங்களுக்கு ஒப்பாகப் பொருந்துவரோ…?...”

 

வலிமை நிறைந்த இரணியன்தன் மகனான பிரகலாதன் தன்மைபோன்று, நீ கருதுகின்ற காரியம் இனிது முடிந்து, நான் அந்த இராமனிடம் தோல்வியுற்ற பின்னர், “ ஏழை நீ.. என் பெருஞ்செல்வம் எய்திப்பின் வாழவோ மதித்தனை..” என் செல்வத்தை நீ அடைந்து வாழவேண்டும் என்று எண்ணுகிறாய் போலும்அந்த எண்ணம் நிறைவேறாது….”

 

“ முன்னரே உறவுமுறையார் போன்று, அந்த இராம இலக்குமணரிடம் நட்பு வளரப் பெற்றனை….அரக்கரிடம் விரோதம் கொள்கிறாய்… மானிடர்க்காக என்புற உருகி இரங்குகிறாய்…எனவே, அவர்கள் உனக்குப் புகலிடம் அளிப்பார்கள்.. உன்னைக் குறித்து வேறு ஏதேனும் சொல்வது அவசியமா…?...”

 

“ நண்ணின மனிதரை நண்பு பூண்டனை

எண்ணின செய்வினை யென்னை வெல்லுமா

றுண்ணினைத் தரசின்மே லாசை யூன்றினை

திண்ணியதுன் செயல்பிறர் செறுநர் வேண்டுமோ….”

யுத்த காண்டம்…. விபீஷணன் அடைக்கலப் படலம்….

 

” எனக்குப் பகைவராக அணுகிய மானிடரிடம் நட்புக் கொண்டாய்.. நீ செய்ய வேண்டிய காரியத்தை நன்கு ஆராய்ந்தனை… என்னை வெற்றி கொள்ளும் வகையைப் பற்றி ஆழச்சிந்தித்து, இலங்கையரசின் மீது ஆசை கொண்டாய்…. உன் செயல் மிகவும் உறுதியாக உள்ளது…. எனக்கு உன்னைக் காட்டிலும் வேறு பகையும் தேவையோ…..?...”

 

“ மண்ணிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து மாவலியைப்

பொன்னிலங்கு தின்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்

தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்

என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே….”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

 

 

 

No comments:

Post a Comment