Tuesday, March 22, 2016


பைந்தமிழ்ப் பேயார்… ( 4 )

 

அற்புதத் திருவந்தாதியில் எல்லாப் பாடல்களும் இருவிகற்ப நேரிசை வெண்பாக்களால் பாடப்பட்டவையே…. அத்துணைப் பாடல்களும் கற்கண்டு இனிமை…

 

எனக்கு எப்போதுமே ஒரு ஐயமுண்டு.. எந்த மொழியிலாவது 2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியங்கள்; தமிழ்மொழியில் இருப்பது போன்று, இத்துணை எளிமையாக பாமரர்களுக்கும் புரியும்படியாக இருக்கிறதா…? க்ஷேஸ்பியர் காலத்து ஆங்கிலத்தில் இலத்தீன் கலப்புச் சொற்கள் அதிகம்.. அந்த ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதே கடினம்… ஆயிரம் வருடப் பாரம்பரியம் கூட இல்லாத மொழி ஆங்கிலம்…

 

ஆனால் நம் தமிழ்மொழி எத்துணை எளிமையான மொழி….?! செய்யுட்களில் பயின்று வந்த அதே மொழியைத்தான் நாம் இன்றளவும் பேசி வருகிறோம்… கிரேக்கம், எகிப்து, ரோமன் நாகரிகமெல்லாம் வழக்கொழிந்து விட்டன… ஆனால் தமிழ்… அன்றலர்ந்த மலர்போல், ஒவ்வொரு நாளும் பூத்துக் குலுங்கி மணம் பரப்புகிறது… கற்காலம் முதலே தமிழர் நாகரிகம் தோன்றிவிட்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது அரிக்கமேடு அகழ்வாராய்ச்சிகள்… மிகுந்த செல்வச்செழிப்போடு இருந்த குடி தமிழ்க்குடி… இப்போதும் செல்வத்துக்கு ஒன்றும் குறைவில்லை…!

 

இறையுணர்வை பாமரனுக்கும் எளிதில் புரியும்படியான மொழியில் கொண்டு சென்றவை பக்தியிலக்கியங்கள்… காரைக்காலம்மை எளிமையான பாடல்கள் மூலம் இறையன்பை எல்லோரிடமும் உணவு போல ஊட்டினாள்…!

 

“ அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்

இன்றுந் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்

எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் ஏது ?...”

 

“ உன்னுடைய திருவுருவம் என்னவென்று தெரியாமலே அடிமையாகி விட்டேன்.. அடிமையான பின்பும் அதை என்னால் அறிய முடியவில்லை… உன்னுடைய தலைவன் யாரெனக் கேட்டால் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வேன்…? உன்னுடைய வடிவம்தான் என்ன..?..” என்று வினா எழுப்புகிறாள் அம்மை…

 

அவனுக்கு ஏது வடிவம்…? ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியல்லவா….?!

 

அற்புதத் திருவந்தாதியில் காரைக்காலம்மையின் தமிழ் ஆளுமையைப் பல பாடல்களில் நாம் படித்து ரசிக்கலாம்… தமிழ் இலக்கணத்தில் அம்மைக்கு இருந்த புலமை நம்மை வியப்பிலாழ்த்துகிறது… தமிழ்மொழி ஆயிரக்கணக்கான சொற்களையுடையது… சொல்வளமை கொண்ட ஒரு மொழி…

 

“ காருருவக் கண்ட்த்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்

ஓருருவாய் நின்னோ டுழிதருவான் – நீருருவ

மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய

பாகத்தான் காணாமே பண்டு… “

 

“ ஆலகால விஷத்தை உண்டதால் கரியநிறமான கழுத்தையுடைய ஈசனே… பிரமனும், திருமாலும் அடிமுடி தேடிய காலத்தில் நீ எங்கு சென்று ஒளிந்தாய்..? மாயோன்… நின்னோடு ஓருருவாய் உனக்கும் இடம் கொடுப்பவன்…கங்கை நீரால் சூழப்பட்ட மேகத்தைச் சடைமுடிமேல் அணிந்த நீருருவ மேனியன்… முன்பொரு காலத்தில் உனக்கே தெரியாமல் ஒளிந்து கொண்டவன் என் ஈசன்…” என்று மாயோனைப் பார்த்துக் கேட்கிறாள் அம்மை…!

 

மாலறியா நான்முகனும் காணாமலை அண்ணாமலை…

 

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே…

 

தொடரும்….

No comments:

Post a Comment