Thursday, January 8, 2015

மயில்….நம்முடைய தேசத்தின் தேசியப் பறவை..மயில் மனித குலத்தின் மரபணுவோடு கலந்த பறவை..தொன்மையான வரலாற்றுச் செய்திகளில் உயிர்ப்போடு சித்தரிக்கப்பட்ட ஒரு பறவை…

முல்லை நிலத்திலும், மருத நிலத்திலும்தான் மயில்கள் வாழும்…மயில் தோகை விரித்தாடினால் மழை வரும் என்பார்கள்…அறிவியல் உண்மை அதுவல்ல…இனப்பெருக்கக்காலத்தில், தன் துணையைக் கவர்வதற்காகவே ஆண்மயில் தோகை விரித்தாடுகிறது..வெப்பம் குறைந்து, கார்மேகம் சூழ்ந்த... குளிர்ந்த வேளைதான் மயிலின் இனச்சேர்க்கைக்கு உகந்த காலம்..

மயில் தோகையில் ஒன்பது நிறங்கள் காணப்படுகின்றன…மயில் கழுத்து நிறம், இன்றளவும் பெண்கள் உடுத்தும் சேலையில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது..

கி.மு.பத்தாம் நூற்றாண்டில், சாலமன் அரசனால் தாமிரபரணி நதிக்கரையிலிருந்த உவரித்துறைமுகம் வழியாகக் கப்பலில் கட்டுக்கட்டாக மயில்தோகைகளைத் தூக்கிச்சென்று, ரோமானியர்களுக்கு அறிமுகம் செய்தனர்…ரோமானிய நாகரிகத்தில் இந்திய மயிற்தோகைகளுக்கு முக்கிய இடம் உண்டு…

சங்க இலக்கியங்களில் மஞ்சு, மஞ்சை, மஞ்ஞை என்றெல்லாம் மயில் குறிக்கப்படுகின்றது…

பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்சை….குறுந்தொகை..
மணிமயில் உயரிய மாறாவென்றி….புறநானூறு..
விரைமயில் மேல் ஞாயிறு….பரிபாடல்..
குஞ்சிமா மஞ்ஞை வீழ்ந்து கால்குவித்து இருந்தது அன்றோ….சீவக சிந்தாமணி..

கந்தப்பெருமானுக்கு மயில் வாகனம் என்பதால், கெளமார வழிபாட்டில் மயிலுக்கு முக்கியத்துவம் உண்டு….அருணகிரிநாதர் மயில் விருத்தம் பாடியிருக்கிறார்…மாமயிலொன்றின் சிறகினை மகுடத்தில் அணிந்திருக்கும் கண்ணனின், வாசுதேவ வழிபாட்டிலும் மயில் உண்டு…

போர்க்களத்தில் வீரமரணம் அடையும் மறவர்களுக்கு நடுகல் நட்டு, மயிற்பீலிகளால் அழகு செய்து, உணவுப்பண்டங்களையும், மதுபானங்களையும் படைத்து வழிபடுவது பண்டையத்தமிழர் வழக்கம்..

முகலாய மன்னர் ஷாஜஹானின் மயிலாசனம் உலகப்புகழ் பெற்றது…தற்போது இரான் நாட்டு ஆவணக்காப்பகத்தில் இருக்கிறது…ஆற்காடு நவாப் சந்தா சாஹிப், விஜயரகுநாத நாயக்கர் ஆட்சிக்காலங்களில் மயிலின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்திலிருந்தன…

நடனக்கலைகளில் மயிலாட்டம் ஒருவகை…இரு மலர்கள் படத்தில் பத்மினி ஆடும், “ மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்…” ( பாடல்: கவிஞர் வாலி ) பாடலுக்கான நடனம் மயிலாட்டமே…!

மயில் நம் வாழ்வில் எத்தனை தூரம் கலந்திருக்கிறது என்பதை ஊர்களின் பெயர்களை வைத்து அறிந்து கொள்ளலாம்..மாயூரம்(மயிலாடுதுறை), மயிலாப்பூர், மயிலம்பாடி, மயிலம், மயிலாடும்பாறை, மயிலேறிபாளையம்…போன்ற சில ஊர்களைக் குறிப்பிடலாம்…

தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்த வைத்துக்கொள்ளும் பெயர்களிலும் மயில் உண்டு…மயிலம்மாள், மயிலாள், அன்னமயில், பொன்மயில், மயில்சாமி, மயிலாம்பதி, மயில்வாகனம், மயிலானந்தம்…போன்ற பெயர்களில் இன்றளவும் அழைக்கப்படுகிறார்கள்..

விளை நிலங்களில் பயிர்களை நாசம் செய்கிறது மயில்கள் எனக் குற்றம் சாட்டும் வேளாண் மக்கள்; விளை நிலங்களில் சிறுபாம்பு, பூரான், பூச்சிகள் என்று மயில்கள் இரை தேடுவதைக் கவனிப்பதில்லை…மயில்களை வேட்டையாடுவது நம்நாட்டில் சட்டப்படி குற்றம்…

கம்பராமாயணத்தில் மயில் பற்றியக் குறிப்புகள் பல இடங்களில் காணக்கிடைக்கின்றன…

மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி மீதா விரி சிறைப்பந்தர் வீசி
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும்
பயில்வுற திவலை சிந்தி பயப் பயத் தழுவும் பாங்கர்…

கிஷ்கிந்தா காண்டம்…..அனுமப் படலம்..

ரிஷ்ய மலையேறி வந்து கொண்டிருக்கின்ற இராம, இலக்குவரைப் பார்த்த அனுமனின் மனதில் இந்த எண்ணம் ஓடுகிறது…” மயில் முதலிய பறவைகள் எல்லாம் மணி போன்ற நிறத்தை உடைய இவர்களின் மேனிகளில் வெயில் படும் என வருந்தி, இரங்கி, இவர்களுக்கு மேல் பெரிய சிறகுகளாகிய பந்தலைப் பரப்பி, மதில் போலச் சுற்றி வளைத்துக் கொண்ட வண்ணம் உடன் வருகின்றன…மேகக்கூட்டங்கள் இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் பொருந்துமாறு மழைத்துளிகளைச் சிந்தி மெல்ல இவர்களின் அருகே தாழச் செல்கின்றன….”

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ஜி.என்.டி. சாலையில் 35 வது கி.மீ. யில் உள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணியஸ்வாமி திருக்கோயில்..( தற்போதைய பெயர் சின்னம்பேடு )…அங்கே மரகத மயில் இருக்கிறது…

“சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில் மேவும் பெருமாளே…” என்கிறார் அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில்…..

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் தோழிகள், சிறுவாபுரி சென்று, தரிசனம் செய்து கந்தப்பெருமான் திருவருள் பெறுக…சொந்த வீடு பிராப்தம் அமையும்…
சிறுவாபுரிக்கு பாதயாத்திரை சென்று, முருகனருளால் சொந்த வீடு அமையப் பெற்றவர்களில் நானும் ஒருத்தி…!

சேவல மாமயில் ப்ரீதா நமோ நம…..:)
See More
 
 
 
 

 

No comments:

Post a Comment