Friday, January 23, 2015


இராமபிரானின் திருமேனியழகை அநுமன் வாயிலாகச் சொல்லக்கேட்டு, நெருப்பிடை இட்ட மெழுகு போல, தன்னைத்தானறியாது உணர்விழந்தவளாய் சோர்ந்திருந்த சீதாப்பிராட்டியைத் தேற்றினான் அநுமன்….

 

உனக்கு அறிவிக்குமாறு “ நாயகன் சொன்ன குறி கொள் அடையாளச் சொல்லும் உள..” தோகையன்ன நடையாய்…நீ கேட்டருள்வாயாக….

 

“ வனத்தின் வழி நடந்து செல்லுதல் துன்பம்..என்னோடு கானகத்துக்கு நீ வரவேண்டாம்…என் தாய்மாருக்கு பணிவிடைகள் செய்துகொண்டு, அயோத்திநகர் அரண்மனையிலேயே இருப்பாயாக… என யான் கூற, அச்சமுற்று என்னருகில் வந்து, “ நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு” என்று பிராட்டி அழுது அரற்றியதை, அவளிடம் அடையாள மொழியாகச் சொல்வாயாக…”

 

“ தன் துயரை மறந்து, தான் வளர்த்து வந்த கிளிகளையும், நாகணவாய்ப் புட்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி தேர்சாரதி சுமந்திரனிடம், கள்ளங்கபடமற்ற ஒரு குழந்தையைப்போல் அவள் பேசிய தன்மையை அவளிடம் தெரிவிப்பாயாக…”

 

திரும்பவும் நான் அடையாளமாகச் சொல்ல வேண்டியவை எவையுமில்லை…

“ மெய்ப்பேர் தீட்டியது…தீட்டரிய செய்கையது…செவ்வே நீட்டு இது என….” பிராட்டியிடம் கொடு என்று இராமபிரான் இதை என்னிடம் கொடுத்தான்…என்று அநுமன் கூறி,  இராமநாமம் பொறித்த ஓர் ஆழியை—மோதிரத்தை எடுத்து தன் நீண்ட கரத்தால் பிராட்டிக்குக் காட்டினான்…

 

” சீராடும் திறல் அநுமன்

தெரிந்துரைத்த அடையாளம்

இத்தகையால் அடையாளம்

ஈதவன் கைம்மோதிரமே…..”

…பெரியாழ்வார்…பெரியாழ்வார் திருமொழி….

 

திருவாழி கண்ட பிராட்டியின் நிலையை எங்ஙனம் யான் அறிந்து சொல்வது….?

 

பார்வை அற்றுப்போன விழிகளைத் திரும்பப் பெற்ற ஓர் இன்பநிலைக்கு ஒப்பானாள்…

 

வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க்கண் மிசை ஒத்தினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே….

 

தமிழை உணர்ந்து படிப்பவர்களுக்கு இந்தப் பாட்டுக்கெல்லாம் உரை சொல்ல வேண்டிய அவசியமேயில்லை…பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய பாடல்கள்…அதனால்தான் கம்பனைக் கவிச்சக்கரவர்த்தி என்று கொண்டாடுகிறோம்…

 

மோதிரத்தைப் பெருமானாகக் கருதி முயங்கினள்…ஆனந்தத்தால் கண்ணீர் சொரிய நின்றனள்…

 

“ ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்த என் தட முலைகள்…”

…கோதை நாச்சியார்…நாச்சியார் திருமொழி…

 

பெருமானென மகிழ்வதும். அல்லவென்று வருந்துவதும், ஆமென்று ஊடுவதுமாய்..பித்துப் பிடித்தவள் போலானாள் பிராட்டி…!

 

அழியும் நிலையில் இருந்த அவள் உயிர் மீண்டு பிழைத்ததற்குக் காரணமான அந்த மோதிரம் வாழ்வதாக….

 

“ வீயும் உயிர் மீளூம்

மருந்தும் எனலாகியது வாழி மணி யாழி…”

 

பிராட்டி, தன் உயிரை மீட்டுத் தந்ததற்காக அநுமனைப் பாராட்டி வாழ்த்துகிறாள்…

 

“ பாழிய பணைத்தோள் வீர துணையிலேன் பரிவு தீர்த்த

வாழிய வள்ளலே யான் மறுவிலா மனத்தேன் என்னில்

ஊழியோர் பகலா ஓதும் ஆண்டெலாம் உலகம் ஏழும்

ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என வாழிய இருத்தி என்றாள்…”

 

வலிமை பொருந்திய பருத்த தோள்களையுடைய வீரனே…ஒரு துணையுமற்ற என்னுடைய துன்பத்தைப் போக்கிய வண்மையுடையோனே…யான் குற்றமற்ற மனமுடையவளானால் , ஓர் ஊழிக்காலம் ஒரு பகலாகக் கணக்கிடக்கூடிய பல ஆண்டுகளும், பதினான்கு உலகங்களும் அழிவுற்ற மகாப்பிரளய காலத்தும், இன்றைக்கும் நீ இருக்கும் வண்ணமே வாழ்ந்து இருப்பாயாக…என்று அருள் கூர்ந்து அநுமனைப் பிராட்டி வாழ்த்தினாள்….

 

” மலையதனால் அணைகட்டி மதில் இலங்கை அழித்தவனே…

சிலைவலவா சேவகனே சீராமா தாலேலோ…”

…குலசேகராழ்வார்…பெருமாள் திருமொழி…  … :) :)

 

 

 

 

 

 

No comments:

Post a Comment