Thursday, January 8, 2015

திருவேங்கடமலை….மூங்கில் மரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் அந்தப் பெயர் பெற்றது…

பூலோகத்திலேயே செல்வச் செழிப்பான ஆலயம்…!

சிறுவயதில், என் பிள்ளை என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்…
“ பணக்காரக்கோவில்னு சொல்றே…இன்னுமா ஸ்வாமி குபேரன் கடனை அடைக்காமல் இருக்கார்….?!
நான் பதில் சொல்லத் தெரியாமல் முழித்துவிட்டு, “ விடுடா…புராணந்தானே…’’ என்று சொல்லிச் சமாளித்தேன்…...

தோழிகளிடம் புலம்பினேன்…
“ இந்த ஆச்சார்யர்கள் எல்லாம் ஒண்ணாச்சேர்ந்து, தீர்மானம் போட்டு, பெருமாள் கடனை அடைச்சுட்டார்னு ஒரு அறிக்கை விடக்கூடாதா…என் பிள்ளை கேள்விக்கு என்னாலே பதில் சொல்லவே முடியலை…” என்றேன்.. தோழிகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்…!

என் கொள்ளுத்தாத்தாவின் பெயர் வேங்கடாசலம்… என் தாத்தா நாராயணய்யர் தன்னுடைய முதல் இரு மகன்களுக்கும் தன் அப்பாவின் பெயரைப் பாதியாகப் பிரித்து வைத்தார்…

பெரியப்பாவின் பெயர் அருணாசலம்…என் அப்பாவின் பெயர் வேங்கடசுப்ரமணியன்…நான் கனவிலும், நினைவிலும், எப்போதும் நினைக்கின்ற என் தந்தையின் பெயரில் வேங்கடம் இருக்கிறது…!
இத்தனைக்கும் எனக்கு நினைவு தெரிந்து, இரண்டுமுறை தான் நான் திருப்பதி சென்றிருக்கிறேன்…. நான் நாள்தோறும் பாடும் பாசுரமும், வேங்கடவனைப் பற்றியதுதான்…

” செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் திருக்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே…”
குலசேகராழ்வார்…..பெருமாள் திருமொழி..

தமிழ் இலக்கியத்தில் வேங்கடமலைப் பற்றிய குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன…பக்தி இலக்கியத்தில் ஆழ்வார்கள் வேங்கடவனை நினைத்து, உருகி நூற்றுக்கணக்கானப் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள்…

” வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”…. தொல்காப்பியம்…

” நெடியோன் குன்றமும், தொடியோள் பெளவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாடு…” …. சிலப்பதிகாரம்…

” மா அல் யானை மறப்போர்ப்புல்லி
காப்புடை நெடுநகர் வேங்கடம்…” ….அகநானூறு….

“ வேங்கட வரைப்பின் வடபுலம்…” ….புறநானூறு….

” தீர்த்த நீர்த்தடஞ்சோலை சூழ்ந்திரு வேங்கடம்
அடை நெஞ்சமே…” ….திருமங்கையாழ்வார்….பெரிய திருமொழி…

“ சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே…” …நம்மாழ்வார்….திருவாய்மொழி….

“ வரு வேங்கடவா என்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று…” ….திருமழிசையாழ்வார்….நான்முகன் திருவந்தாதி…

“ வேய்பிறங்கு சாரல் விறல்வேங்கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை…” …பூதத்தாழ்வார்….இரண்டாம் திருவந்தாதி….

எல்லா மலைகளையும் பாடியிருக்கும் கம்பன், திருவேங்கடமலையை விட்டுவிடுவானா என்ன…?!

வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி
நான் மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்
நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த
மெய்யே போல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ..

கிஷ்கிந்தா காண்டம்…. நாடவிட்ட படலம்….

“ வடமொழிக்கும், தென்மொழியாகிய தமிழுக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களும், பிற சாத்திரங்களும் தம்மிடத்தில் கூறியுள்ள எல்லாப் பொருட்களுக்கும்; முடிந்த பொருளை உடையதாயும், தலைசிறந்த அறங்களுக்கெல்லாம் வரம்பாகியும், பக்கத்தில் பொருந்திய உவமைப் பொருள் ஒன்றின்றிப் புகழ் நிரம்பிய உடலைப்போல விளங்குகின்ற உடுக்கும் ஆடை சூழ்ந்த, குளிர்ந்த தாழ்வரைகளையுடைய உயர்ந்த திருவேங்கடமலையில் போய்த் தேடுங்கள்…” என்று சுக்ரீவன், சீதையைத் தேடுவதற்காக… வானரப் படைகளை ஒவ்வொரு இடமாக அனுப்பிவைத்தான்…

மலையப்பவாருவுக்கு ஒரு அண்ணகாரு இருக்கிறார் சோழநாட்டில்…! ஒப்பில்லா அப்பன்…! திரு விண்ணகரம் என்று போற்றப்படுகிறது… ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவமுதுக்காகத் தயாரிக்கப்படும் அந்த உப்பில்லாத புளியோதரைக்கும், ததியோன்னத்திற்கும் நான் வாழ்நாள் அடிமை….!

தம்பிக்கு வேண்டிக்கொண்டு அண்ணாவுக்குச் செய்யலாம்…அண்ணாவுக்கு வேண்டிக்கொண்டு தம்பிக்கு செய்ய முடியாது…!
“ ஓராழி யான் அடியே..ஓதுவதும் ஓர்ப்பனவும்
பேராழி கொண்டான்…” என்கிறார் பொய்கையாழ்வார்…

“ ஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்
வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே…” என்பது திருமங்கையாழ்வாரின் கூற்று….

சென்றமுறை எம்பெருமானத் தரிசிக்கச் சென்றபோது, ஓரிரு நிமிடங்கள் தேகமற்ற அமானுஷ்ய நிலையை நான் உணர்ந்தேன்… அருமைத்தோழி கீதா ரங்கராஜனுக்கு சதா சர்வகாலமும் ஒப்பிலியப்பன் நினைவுதான்…
“ உம்மாச்சியை வேரோடு புடுங்காதே…. எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் மீதி வை…!...” என்று அவளை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்….:)
See More
 
 
 

No comments:

Post a Comment