Thursday, January 8, 2015

அசோகவனம் புகுந்த அனுமன், தன் உருவத்தைச் சிறிய வடிவமாக்கிக் கொண்டு, அடர்ந்த மரக்கிளையொன்றில், “ ஓய்விலன் உயர் மரப்பணையின் உம்பரான்..” அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்…

விரிமழைக் குலங்கிழித்து ஒளிரும் மின்னெனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒருதனிக் கொண்டல் ஆம் எனத்
திருவுற பொலியும் ஓர் செல்வன் தேவியை….
...
சிறந்த நிறத்தோடு கூடிய ஓர் ஒப்பற்ற நீருண்ட மேகம் போல, அழகு நன்கு அமைய விளங்கும் இராமபிரான் தேவியாகிய பிராட்டியை, விரிந்து பரவிய மேகத்தின் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு, ஒளிவீசிக் கொண்டிருக்கும் மின்னலைப்போல, கரிய நிறத்தையுடைய அரக்கியர் கூட்டத்திடையே பார்த்தான்….

இவள்தான் சீதை என்று மாருதி எப்படித் தெரிந்து கொண்டான்….

அரக்கியர் சுற்றிலும் காவல் காக்கின்றனர்….அந்தப் பெண்ணின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது….

” கடக்கரும் அரக்கியர் காவல் சுற்றுளாள்..”

“ கடல் துணை நெடிய தன் கண்ணீர்ப் பெருந்தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள்..”

“ அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே அவன்..இவள் கமலச்செல்வியே…”

பிராட்டியைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் கிளைக்குக் கிளை தாவி, “ யான் இப்போது கண்டு கொண்டேன் தேவியே…” என்று ஆனந்தக் கூத்தாடினான்…அவளின் தூய்மையை வியந்து போற்றினான்….

” வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ..”

” மாண்புடைய நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதே…”

“ தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே
வனிதையர்க்காக நல்லறத்தின் மாண்பெலாம்…….”

அனுமன், பிராட்டியை மனதுக்குள் வாழ்த்திக் கொண்டிருக்கும்போது, இராவணன் அங்கே தோன்றுகிறான்….

சீதை தன்னை நினைக்க வேண்டுமென்று, கொஞ்சமும் நாணமில்லாமல் இராவணன் கெஞ்சினான்…

பிறன் மனையைத் தீண்டினால், உனக்கு அழிவு நிச்சயம் என்றுரைத்தாள் ஜானகி…

“ ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ
ஊழியும் திரியும் நின் உயிரொடு ஓயுமோ…”

காட்சிப் படலத்தில் சீதையின் பிரிவுத் துயரும், அதற்கு நேர்மாறாக இராவணனின் பெருங்காமமும்; கண்முன்னே விரிகின்ற காட்சிகளாக வகைப்படுத்தியிருக்கிறான் கம்பன்…

கனி தானே பழுத்து, மரத்திலிருந்து தன் கையில் விழவேண்டுமென்று நினைக்கும் இராவணனின் மனநிலையை,
“ குறிப்பது என் காமன் தன் திறத்தையும் கடந்தது
சீற்றத்தின் தகைமை…” என அறச்சீற்றமும், காமமும் எதிரெதிர் சமநிலையில் நின்று போரிட்டதை நடுநிலை வழுவாமல் காட்சிப்படுத்தியிருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி….

” இனிதமர்ந்த அம்மானை இராமன் தன்னை
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே….”
…..குலசேகராழ்வார்….பெருமாள் திருமொழி…. :) :)
 

 
 

 

 
 
.

No comments:

Post a Comment