Thursday, January 8, 2015

சென்ற பதிவில் ஸ்ரீ மகாப் பெரியவாளுக்குப் பிடித்த விஷயமாக யானையையும்,
கடலையும் குறிப்பிட்டேன்…யானையை அடுத்து இந்தப் பதிவு கடல்…

கடல்….கருணைப் பெருங்கடல்…கடல்தான் மழைக்கு மூலாதாரம்…மழை நம் வாழ்வின் ஜீவாதாரம்…

எனக்கு சென்னையை மிகவும்
பிடித்துப் போனதற்குக் காரணம் அதன் அழகான ...
கடற்கரைதான்..1989—இல் சென்னைக்கு வந்து, திருவல்லிக்கேணியில் இருந்த மாமா வீட்டில் தங்கி இதழியல் படித்துக் கொண்டிருந்தேன்..மைலாப்பூரில் இருக்கும் பாரதீய வித்யா பவனில் மாலை நேரக் கல்லூரி…தினமும் நான்கைந்து முறைகளாவது கடற்கரை சாலை வழியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது…அப்போதே கடலை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்…சென்னையிலேயே என் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் வேரூன்றி விட்டது…என் எண்ணம் போலவே வாழ்க்கை அமைந்தது இறைவனின் திருவுள்ளம்…

நடுவில் மூன்று வருடங்கள் தில்லியில் வசித்ததும், பின்பு சென்னைக்கே வந்து, இந்நகரத்தையே என் வாழ்நாள் இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்ததும்.. இறை எனக்களித்த கொடையே…

மாமா வீட்டில் தங்கிப் படித்தபோது, என் கல்லூரித்தோழி உஷாகுமாரியும் லேடி வெலிங்க்டன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பி.எட். படித்தாள்…. மெரினா கடற்கரைக்கு எதிர்ப்புறம்தான் அவளுடைய கல்லூரியும், விடுதியும் அமைந்திருக்கும்…விடுமுறை நாட்களில் நானும், அவளும் கடற்கரையில் அமர்ந்து கதை பேசியதும், கிளிஞ்சல்கள் சேகரித்ததும்…எப்போதும் மனதில் நிழலாடும் நீங்காத நினைவுகள்…!

திருவல்லிக்கேணி, சிவராமன் தெருவில் வசித்த நாட்களில் அதிகாலையில் கடற்கரையில் நடைப்பயணம் செல்வதையும், சைக்கிளிங் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன்… ( இப்போது அதை நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்…! ) எழுத்தாளர் பாலகுமாரனும் என்னோடு நடைப்பயணம் வருவார்..அவரோடு இலக்கியங்கள் பற்றி விரிவாக விவாதித்ததும், நடுநடுவே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து தமிழ்த் திரைப்படத்தின் கதை உருவாக்கம் பற்றி அரட்டை அடித்ததும் மறக்க முடியாத கடற்கரை நினைவுகள்….!

பதிமூன்று வயதில் கன்னியாகுமரி சென்றபோது, அங்கே முக்கடல் சங்கமத்தை இந்து மகாசமுத்திரமாகப் பார்த்தபோது, எனக்குள் பிரமிப்பை விடவும், பயமே அதிகமிருந்தது…நாம் வசிக்கும் பரத கண்டத்தில் ஒட்டுமொத்தமான கடற்கரையின் நீளம் 7,517 கி.மி… தமிழகக் கடற்கரை 997 கி.மி. நீளம் உடையது..

தமிழ்ப் பண்பாட்டில் கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்படுகிறது… அங்கே வாழ்கின்ற மக்கள் மீனவர், பரதவர் என்று அழைக்கப்படுகின்றனர்…அந்த மக்களின் வாழ்க்கைமுறையை பரதவர் இலக்கியமாகச் சொல்வதுண்டு…வண்ண நிலவனின், “ கடல்புரத்தில்…” ஜோ.டி.குரூஸ்ஸின் “ ஆழி சூழ் உலகு, கொற்கை…’’ போன்ற படைப்புகளை பரதவர் இலக்கியத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம்…

தமிழ்க்கடலில் மூழ்கினால், பத்திரமாகக் கரையேற முடியுமா…?!

” ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே….”….கோளறு திருப்பதிகம், திருஞானசம்பந்தர் தேவாரம்…

” குரை கடலோத நித்திலங் கொழிக்குங் கோணமலை அமர்ந்தாரே…” …. திருஞானசம்பந்தர் தேவாரம்…

“ ஓங்குமா கடல் ஓத நீர் ஆடில் எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே….” …. திருநாவுக்கரசர் தேவாரம்…

” வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை…” கோதை நாச்சியார், திருப்பாவை…

“ வையம் தகளியா வார்க்கடலே நெய்யாக…” …பொய்கையாழ்வர், பிரபந்தம்…

” கண்ணார் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்நன் திண்ணாகம் பிளக்க…” …. திருமங்கையாழ்வார், பிரபந்தம்…

கம்பன் தன்னுடைய இராமாவதாரத்தில், கடலுக்குத் தனிச்சிறப்புச் செய்திருக்கிறான்..

அடல் கொண் டோங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால்
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள்
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவுறக் கண்டார்….

கிஷ்கிந்தா காண்டம்… தானை காண் படலம்.

“ மலர் மாலையை அணிந்தவனே..நாமும் நம் அறிவால் வன்மை பெற்றுச் சிறந்துள்ள வானரப்படையின் நடுவிடத்தை ஒருவாறு கண்டோம்..இதன் முடிவைக் கண்டு அறியும் வகைதான் இருக்கின்றதோ. இந்நிலவுலகத்தில் மக்கள் கடலைப் பார்த்தோம் என்று கூறுவார்கள்..அன்றி அக்கடலின் முடிவு எல்லையை நன்றாகக் கண்டறிந்தவர் யார்…’’ என்று தம்பி இலக்குவனைப் பார்த்து இராமன் கேட்கிறான்…

மாமல்லபுரத்துக்குப் பண்டைய பெயர் திருக்கடல் மல்லை…

“ கஞ்சைக் கடந்தவனூர் கடல்மல்லைத் தலசயனம்
நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே…” …. திருமங்கையாழ்வார், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்…

மல்லையில் எங்கெங்கு காணினும் சிற்பங்கள்தான்…நரசிம்மவர்மனின் பேரனான இராஜசிம்ம பல்லவன், மல்லைக் கடற்கரையில் ஸ்தலசயனப் பெருமாள் ஆலயம் எடுப்பித்தான்…இயற்கைச் சீற்றத்தால் அந்த ஆலயம் அழிந்து போக, கடற்கரையில் இருந்து ஒரு கி.மி. தள்ளிக் கட்டப்பட்டிருக்கும் இப்போதைய ஆலயத்தை விஜய நகர மன்னர்கள் நிர்மாணித்தார்கள்…அது தவிர, திருவல வேந்தை ஆதிவராகப் பெருமாள் ஆலயமும் மாமல்லபுரத்தில் இருக்கிறது..

வாழ்நாளில் சென்று ரசிக்க வேண்டிய இடங்களுள் முக்கியமானது திருக்கடல்மல்லை….:)_ :)
See More
.
 

No comments:

Post a Comment