Friday, January 9, 2015

தமிழர்களின் திருமணச்சடங்குகளை, நான் பலவருடங்களாக
ஆராய்ந்து வருகிறேன்...சங்கநூல்கள் முதல் கோதைநாச்சியாரின் வாரணமாயிரம் வரை நான் ஆச்சரியப்பட்டது ஒரு விஷயத்தைப்பற்றித்தான்..தமிழ்ப்பெண்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கிற பழக்கமே இல்லை என்பதுதான்...!

இந்தப் பழக்கம் எப்போது ஏற்பட்டது..? சரியாகச் சொல்ல
வேண்டுமென்றால், கி.பி.1300 ஆம்ஆண்டிற்குப் பிறகு....
தில்லியில், அலாவுதீன்கில்ஜியின் ஆட்சிக்காலத்தில் அவ...னுடைய தளபதி மாலிக்காபூர் தென்னகத்தின் மீது படையெடுத்து வந்தான்...அந்தச்சமயத்தில் தமிழகத்தில்
சோழப்பேரரசு வீழ்ச்சியடைந்து, பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது..பாண்டிய மன்னனான மாறவர்மன்
குலசேகரப்பாண்டியனின் இருமகன்கள் சுந்தர பாண்டியன் மற்றும் வீரபாண்டியனும் அரசுரிமைக்காக அடித்துக் கொண்டார்கள்..தமிழகத்தைக் கைப்பற்ற மாலிக்காபூருக்கு இந்த சண்டை வசதியாகப்போய்விட்டது..தமிழகம் இஸ்லாமியர்களின் வசம் வந்தது..மாலிக்காபூரின் படைகள் கன்னிப்பெண்களையெல்லாம் தூக்கிக்கொண்டு
போய்விடுவார்களாம்..திருமணமான பெண்களையாவது
அவர்களிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்கிற நல்ல
எண்ணத்தில்தான்; சான்றோர்கள் கூடிப்பேசி, விவாக மந்திரங்கள் புதிதாக இயற்றி, மாங்கல்யம் அணிவிக்கிற புதிய பழக்கத்தைக் கொண்டு வந்தார்கள்..காரணம்..மணமான பெண்களைப் படைவீரர்கள் விட்டுவிடுவார்கள் என்பதுதான்..

அக்னியை வலம் வருவதுதான் முக்கியச் சடங்காக இருந்திருக்கிறது..பிராமணர்களின் திருமணச்சடங்கில்
தந்தை மடிமீதமர்ந்து, தாரை வார்த்துக்கொடுத்தல் என்பது முக்கியமானது..கம்பன் தன்னுடைய இராமகாதையிலும் இந்த வழக்கத்தைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறான்..

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு தியாகராஜரின்,
“ஸீதா கல்யாண வைபோகமே” என்ற சங்கராபரணம்
ராகத்தில் அமைந்த கீர்த்தனை பரிச்சயம் இருக்கும்.
சீதா கல்யாணத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்..கம்பனின் இந்தப் பாடலும் அப்படித்தான்.

கோமகன் முன் சனகன் குளிர் நல்நீர்
பூ மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தடக் கையின் ஈந்தான்..

பாலகண்டம்...கடிமணப்படலம்.

தாமரையில் வாழும் திருமகளும், திருமாலும் போல என் சிறந்த மகளோடு சேர்ந்து வாழ்க என்று கூறி நல்ல நீரை
வார்த்து சீதையைக் கன்னிகாதானம் செய்தான்.

இத்துடன் பாலகாண்டத்தை முடிக்கிறேன்..விளையாட்டாக எழுத ஆரம்பித்தது..
ஒரு காண்டத்திற்குப் பத்துப்பாடல்கள் என் விருப்பமாகத் தேர்ந்தெடுத்து, அதை எளிய தமிழில் சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்..

கம்பராமாயணத்தையும், தமிழின் ஆகச்சிறந்த
காப்பியங்களையும் கற்றுக் கரையேறுவது என்பது வாழ்நாள் முழுமைக்கான தேடல்..இந்தப்பிறவியில் அது நிறைவேறாது
என்பது எனக்குத் தெரியும்..இனிவரும் ஜென்மமும்
பொன்னிநதிக்கரையிலேயே பிறந்து, இலக்கியக்கடலில்
மூழ்கவேண்டும் என்பதுதான் என்னுடைய பேராசை..

இனிவரும் நாட்களில் சீதையோடு நாமும் புகுந்தவீடு(அயோத்தியா) செல்கிறோம்...:) :)
 
இந்த ஒரு கட்டுரை பாலகாண்டம் பதிவுகளில் விட்டுப்போய்விட்டது...பாலகாண்டத்தில் இந்தப் பதிவையும் சேர்த்துப் படிக்க வேண்டுகிறேன்...:)
 

1 comment:

  1. Excellent write up bagavathi ganesh. . நிறைய தெரியாத தகவல்கள். . அழகான எழுத்து நடை .. நன்றி

    ReplyDelete