Saturday, August 27, 2016


வட இந்தியப் பயணம்… ( 6 )

 

இராம் ஜூலா சாலையில், மக்கள் கூட்டம் அலைமோதிய ஒர் உணவகத்தில் காலையுணவை முடித்துக் கொண்டோம்வழக்கம்போல சப்பாத்தி, தால் தான்… :) தென்னிந்திய உணவு வகைகளை இங்கே சாப்பிடக்கூடாதுகுறிப்பாக அரிசிச்சாதம்சாவல் என்கிற அரிசிச்சாதத்திற்குப் பாசுமதி அரிசியைத்தான், வடக்கே பயன்படுத்துவார்கள்…. ஒரு கரண்டிக்கு மேல் அதைச் சாப்பிடுவது கஷ்டம்… :) மிகுந்த களைப்பாக இருந்தது…. மழை வேறு தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது…. ஆட்டோ பிடித்து விடுதிக்கு வந்து சேர்ந்தோம்…. ஓய்வெடுத்துக் கொண்டோம்

 

இரண்டு மணிக்கு எழுந்து வெளியில் சென்று மதிய உணவு சாப்பிட்டோம்…. சப்பாத்தி சாப்பிட்டு எனக்கு போரடித்துவிட்டதால், நூடுல்ஸ் சாப்பிட்டேன்ஓரளவுக்கு நன்றாகவே இருந்ததுஆனால் விலையதிகம்ஒரு ப்ளேட் 150 ரூபாய்ரிஷிகேஷில் எல்லா உணவு விடுதிகளிலும் விலையதிகமாகவே இருக்கிறதுஒரு சாதாரண தால் கூட 100 ரூபாய்.. பன்னீர் சப்ஜி 200 ரூபாய்…. ஓர் ஏழை யாத்திரிகன் இத்தனை விலை கொடுத்து எப்படிச் சாப்பிட முடியுமென்று யோசித்துக் கொண்டேயிருந்தேன்நம் தமிழகத்தில் அம்மா உணவகம் இருப்பது போன்று, மலிவுவிலை உணவகங்களை உத்தராகண்ட் மாநிலம் செயல்படுத்தலாமே…. இரண்டு சப்பாத்தி, ஒரு கிண்ணம் தால் பத்து ரூபாய்க்கு கொடுக்கலாம்

 

சுற்றுலாப்பயணிகளால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது…. அடிப்படைச் சுகாதார வசதிகள் கூட இல்லை ரிஷிகேஷ், ஹரித்வாரில்ஒரு கழிப்பறையோ, ஆரம்பச் சுகாதர நிலையமோ என் கண்ணில் படவேயில்லைஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால், கங்கையிலேயே ஜலசமாதி ஆகிவிட வேண்டியதுதான் போலஇந்த வருடப் பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்திற்கு; நடமாடும் கழிப்பறைகள், நடமாடும் மருத்துவமனைகளையெல்லாம் தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது…. வடக்கே உயர உயரப் போகும்போதுதான் சொந்த மண்ணின் அருமை புரிகிறதுஅங்கே சென்று பாருங்கள்நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்பது புரியும்…. :)

 

மாலை ஐந்து மணிக்கு கங்காஆர்த்தி பார்ப்பதற்காகக் கிளம்பினோம்…. போகிற வழியில் சிவானந்தா ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தோம்வெளிநாட்டவர்கள் வந்து தங்கி, யோகா முதலிய கலைகளைக் கற்கிறார்கள்…. எப்படித்தான் இத்தனை ஏக்கர்களை, அந்த இடத்தில் வளைத்துப்போட்டு ஆசிரமம் கட்ட முடிந்தது என்று வியந்து போனேன்சிவானந்தா ஆசிரமம் மட்டுமல்லஎக்கச்சக்கமான ஆசிரமங்கள் ரிஷிகேஷில்ஒவ்வொன்றும் ஏக்கர் கணக்கில் பரப்பளவு கொண்டதுகார்ப்பரேட் சாமியார்கள் பெருகி விட்டார்கள் இந்தக் கலியுகத்தில்… :) ஒற்றைக் கோவணாண்டியாகத் திருவண்ணாமலையில் தவமிருந்த மகரிஷி ரமணரை நினைத்துக் கொண்டேன்… :)

 

ஒரு கி.மீ. தூரம் போல நடந்து, ஓரளவுக்குச் சுத்தமான ஒரு படித்துறையை அடைந்தோம்அந்த அந்திவேளையில் கங்கைக்கரையில் அமர்ந்திருந்தது அற்புதமான அனுபவம்…! எழுத ஒண்ணாதது…! மனத்துக்குள் அமைதி குடிக்கொண்டிருந்ததை பரிபூரணமாக உணர்ந்தேன்…! ஆர்ப்பரிக்கும் கங்கை கூட அந்திவேளையில் அடக்கமாக ஓடுகிறாளோ என்று எனக்குத் தோன்றியது…. :) அரைமணிநேரம் கழித்து, ஆர்த்தியெடுக்கும் பூசாரிகள் வர ஆரம்பித்தார்கள்…. ஆர்த்தியெடுப்பதற்காக நம்மிடம் அன்பளிப்புக் கேட்டார்கள்…. நானும் இரண்டு அகல்விளக்குகள் வாங்கிக் கங்கையில் விட்டேன்… :)

 

ஆறரை மணிக்கு கங்கைக்கு ஆர்த்தியெடுக்கத் தொடங்கினர்…. எதிர்க்கரையில் இருந்த கீதாபவன் படித்துறையில் ஏராளமானவர்கள் அகல் விளக்குகளை ஏற்றி, கங்கையில் மிதக்க விட்டுக்கொண்டிருந்தனர்…. ஜெகஜ்ஜோதியாக ஆர்த்தி தெரிந்தது…. நான் அமர்ந்திருந்த படித்துறையிலும், ஒரு நாலைந்து பூசாரிகள் ஆர்த்தி காண்பித்தார்கள்…. இந்த தேசத்தின் தாயான கங்காமாதாவுக்கு ஆர்த்தியெடுத்து, மரியாதை செலுத்துவது எத்துணை புண்ணியம்…. ?!  வேறெந்த நாட்டிலாவது நதிக்கு வந்தனம் செய்யும் வழக்கம் உண்டா…?!  இந்த ஆத்மாவுக்குச் சந்தோஷம்… :) ஹரித்வாரிலும் இந்தக் காட்சியைப் பார்க்கப்போகிற எதிர்ப்பார்ப்புடன் விடுதிக்குத் திரும்பினோம்… :)

 

தொடரும்….

 

 

 

 

Monday, August 22, 2016


வட இந்தியப் பயணம்…. ( 5 )

 

உத்தராகண்ட் மாநிலம் சுற்றுலாப் பயணிகளைத்தான் நம்பியிருக்கிறது.. ஆனாலும், யாத்திரிகளின் நிலைமை பரிதாபம்தான்… கங்கையின் எந்தப் படித்துறையிலும்; பெண்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், தடுப்பு வசதிகள் எதுவுமில்லை… கழிப்பறை வசதிகள் கிடையாது…. உடை மாற்றுவதற்குள் மண்டை காய்ந்து போகிறது… நான் லக்ஷ்மண் ஜூலா படித்துறையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடை மாற்றிக்கொள்ள இடம் தேடினேன்… அங்கே ஒரு நாலுகால் மண்டபம் தடுப்புச் சுவரின்றி இருந்தது… பெண்கள் நாலைந்து பேர் உடை மாற்றிக்கொண்டிருந்தார்கள்…. நானும் உடை மாற்றிக் கொண்டேன்… “ உனக்கு உடை மாற்றிக்கொள்ள வேறிடம் கிடைக்கவில்லையா…? “ என்று என் கணவர் என்னைத் திட்டினார்… “ ஹோட்டல் அறை இங்கிருந்து ஒன்றரைக் கி.மீ. தூரம்…. அதுவரை நான் ஈரத்துணியோடு வரவேண்டுமா… ? “ என்று நானும் என் பங்குக்குக் கடுப்படித்தேன்… :)

 

லக்ஷ்மண் ஜூலா படித்துறையில் ஸ்நானம் செய்துவிட்டு, அதே வழியாகத் திரும்பிப் போகக்கூடாதாம்… இராம் ஜூலா வழியாகத்தான் போகவேண்டுமாம்…. இரண்டு பாலத்துக்கும் இடைவெளி இரண்டு கி.மீ. தூரம்… நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.. காலை மணி 8.30… எல்லாக் கடைகளும் சாத்தியிருந்தன… ஒரேயொரு டீக்கடை திறந்திருந்தது... அந்த டீக்கடையில் டீ குடித்தோம்.. அருமையான மசாலா சாய்…! நம்மூரில் பொரை என்றொரு மொறுமொறு பன் டீக்கடைகளில் கிடைக்கும்… டீயில் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்… அதேபோல் நீளவாட்டத்தில் பொரை அந்த டீக்கடையில் கிடைத்தது… ஆளுக்கு இரண்டு வாங்கி, டீயில் தொட்டுச் சாப்பிட்டோம்… அந்தக் காலை வேளையில் அத்தனை சுவையாக இருந்தது அந்த டீயும், பொரையும்…! சிலசமயம் தெருவோரக் கடையில் கூட நமக்கு அதியற்புத அனுபவம் கிடைக்கிறது…. :)

 

போகிற வழியில் *பதஞ்சலி*கடை இருந்தது… எனக்கு சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் வாங்கிக் கொண்டேன்… * மது நாஸினி * என்று பெயர் கொண்ட அந்த மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு உணவுக்கு முன் இரண்டும் போட்டுக் கொண்டால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது என்று கேள்விபட்டேன்… அலோபதி மருந்தோடுகூட இதையும் எடுத்துக் கொள்ளலாம்… 140 மாத்திரைகள் அடங்கிய பாக்கெட்டின் விலை 200 ரூபாய்… அங்கிருந்து மீண்டும் ஒரு கி.மீ தூரம் நடைப்பயணம்… இராம் ஜூலா பாலத்திற்கருகில் வந்தபோதுதான் கவனித்தேன்… நான் கையில் வைத்திருந்த ஈரத்துணிகள் அடங்கிய பையைக் காணவில்லை… அந்தப் பையில்தான் களைந்த துணிகளோடு, ஈரத்துணிகளையும் ஒரு பாலித்தீன் கவரில் போட்டு வைத்திருந்தேன்.. எங்கே வைத்தேனென்று யோசித்தேன்… பதஞ்சலி கடையில் வைத்தது நினைவுக்கு வந்தது…

 

அப்பாவையும், பிள்ளையையும் அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு, மீண்டும் பின்னோக்கி ஒரு கி.மீ,. தூரம் நடை.. :) பதஞ்சலி கடை வாசலிலேயே கடைப்பெண்மணி நின்று கொண்டிருந்தாள்… “ நீங்கள் பையை வைத்துவிட்டுப் போய்விட்டீர்கள்… இந்த ரிஷிகேஷில் உங்களை எங்கே தேடுவதென்று யோசனையாக இருந்தேன்… நல்லவேளை வந்து விட்டீர்கள்…” என்றாள்… நான் முகமலர அவளுக்கு நன்றி கூறி, பையை எடுத்துக் கொண்டேன்…

 

“ அன்பின் வழியது உயிர்நிலை…” என்கிறது வள்ளுவம்…. திருக்குறளை கடனேயென்று மனப்பாடம் செய்து, விடைத்தாளில் வாந்தியெடுக்காமல்;  நம் வாழ்வின் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பயணங்களிலும் நம் வழித்துணையாக வருகிற ஒரு தாரக மந்திரம் அது என்பதை நாம் உணரவேண்டும்… மானுடம் உய்வது அன்பென்னும் மூன்றெழுத்தில் தானே… இந்தப் பயணத்தில் அதை முழுமையாக உணர்ந்தேன்….

 

அப்பாவும், பிள்ளையும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தேன்… என் கையில் பையைப் பார்த்தவுடந்தான் என் பிள்ளைக்குச் சிரிப்பே வந்தது… :) அவனுடைய விலையுயர்ந்த ஜீன்ஸ், சட்டையெல்லாம் அந்தப் பையில்லல்வோ இருந்தது… :) மழைத் தூற ஆரம்பித்தது…. அங்கேயே ரெயின்கோட் விற்றுக் கொண்டிருந்தார்கள்…. பாலித்தீன் கவரில் தைக்கப்பட்ட ரெயின்கோட்… :) விலை 20 ரூபாய்… :) ஆளுக்கொன்று வாங்கி மாட்டிக் கொண்டு இராம் ஜூலா பாலத்தைக் கடந்தோம்..

 

இராம் ஜூலா சாலை முழுக்கக் கடைகள்… பழைய பொருட்களை விற்கும் கடைகள் ஏராளமாயிருந்தன…. எதையும் நாம் வாங்கி விடக்கூடாது… புதியதைப் பழைய சிலைகள் என்று சொல்லி விற்றுவிடுவார்கள்….ஏதோவொரு காளிசிலையைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. அது ஐநூறு வருடப் பழமையானதென்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கடைக்காரன்… திருப்பதிகே லட்டா… :) பழனிக்கே பஞ்சாமிர்தமா… :) யார் கிட்ட… :) “ டேய்… நான் கும்மோணம்டா… எங்கிட்டயே அளக்கிறியா…?..” என்றேன் தமிழில்… :) அவனொன்றும் புரியாமல் என்னைப் பார்த்தான்… :) பெரியவருக்கும், சின்னவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை… :) :)

 

தொடரும்….

Wednesday, August 17, 2016


வட இந்தியப் பயணம்…. ( 4 )

 

தில்லி விமானநிலையம் போய்ச்சேர்ந்து, பெட்டிகளை எடுத்துக் கொள்ளும்போது மதியம் 3 மணி… எங்களுக்கு 4.30 மணிக்கு, டேராடூனுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம்… வேகவேகமாக செக்-இன் கவுன்டரை நோக்கி நடந்தோம்… பெட்டிகளைக் கவுன்டரில் கொடுத்துவிட்டு, ஆளுக்கொரு சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டோம்… விமானநிலையத்திற்குள் எப்போதுமே விலை அதிகமாகத்தானே இருக்கும்.. ஒரு சாண்ட்விச்சின் விலை 200 ரூபாய்… :)

 

தில்லி விமானநிலையத்தைப் பற்றி அவசியம் நான் குறிப்பிட்டாக வேண்டும்…. சர்வதேச தரத்தில் மிகுந்த கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது…. எல்லாத் தளங்களிலும் கார்ப்பெட் போட்டிருக்கிறார்கள்…. படு சுத்தம்… ! ஒலிப்பெருக்கி இல்லாத Noise free zone.  ப்ளாஸ்மா திரையில், நம்முடைய விமானம் எந்த வாசலில் நிற்கிறது என்று பார்த்து ஏறிக்கொள்ள வேண்டியதுதான்…!

 

குட்டி ஸ்பைஸ்ஜெட் விமானம்… அறுபதுபேர் இருந்திருப்போம்…. தில்லியிலிருந்து ஒருமணிநேரப் பிரயாணம் டேராடூன்… உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரம்… ஊட்டி போல இருக்கிறது… மிகச்சிறிய விமானநிலையம்… டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் 30 கி.மி. டாக்ஸிக்கட்டணம் 700 ரூபாய்… ஒன்றரைமணிநேரப் பிரயாணம்… ரிஷிகேஷ் வரை சாலை பரவாயில்லை… டாக்ஸி ஓட்டுநரிடம் நாட்டுநடப்புப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தேன்… சமீபத்தில்தான் உத்தராகண்ட் மாநில சட்டசபையை முடக்கி வைத்திருந்தது மத்திய அரசு… உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காங்கிரஸ் அரசே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளது… “ ஹரீஷ் ராவத் திறமையான முதலமைச்சர்… “ என்றார் ஓட்டுநர்… வனத்துறைக்குச் சொந்தமான சாலையில் சென்று கொண்டிருந்தோம்…. அந்தச் சாலையை ஏழுமணிக்கு மூடிவிடுவார்களாம்… சிறுத்தைப்புலி மற்றும் கரடி நடமாட்டம் உள்ள பகுதியாம்… கரடியைப் பார்க்கவில்லையே என்று எனக்குப் பெரிய குறைதான்… :)

 

ரிஷிகேஷ் எல்லையைத் தொட்டவுடன், கங்கையின் ஆர்ப்பாட்டச் சப்தம் கேட்டது… :) “ ஒருவாரமாய் மழைக் கொட்டித் தீர்க்கிறது… அதனால் தண்ணீர் பிரவாகமாய் ஓடுகிறது…” என்றார் ஓட்டுநர்… தபோவன் பகுதியில், ஆனந்தம் ரிசார்ட் ஹோட்டலில் நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம்… பெட்டிகளை வைத்துவிட்டு, சாப்பிட வெளியே சென்றோம்… எப்போதும் போல சப்பாத்தி, சப்ஜி சாப்பிட்டோம்… கத்ராவைவிட ரிஷிகேஷில் உணவுப்பண்டங்களின் விலை அதிகம்… சுவையும் சுமார்தான்… சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் மழை பொத்துக்கொண்டு கொட்டுகிறது.. அரைமணிநேரத்துக்கும் மேலாக அங்கேயே நின்று கொண்டிருந்தோம்… மழை கொஞ்சம் குறைந்தவுடன், வேகவேகமாக ஹோட்டலுக்கு ஓடினோம்… :) மறுநாள் காலை தேவப்பிரயாகை செல்லவேண்டும் என்ற என்னுடையப் பிரயாணத் திட்டத்தைப் புரட்டிப் போட்டது மழை…

 

இடைவிடாத மழையில் நாளை எப்படி கங்கா ஸ்நானம் செய்யப் போகிறோம் என்ற யோசனையிலேயே தூங்கிப்போனேன்…. காலையில் சிறிது மழை விட்டிருந்தது…. இதுதான் நல்ல சமயம்… போய் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடலாமென்று கிளம்பினோம்… லக்ஷ்மண் ஜூலாவைக் ( தொங்கு பாலம் ) கடந்தால், அந்தப்பக்கம் லக்ஷ்மண் ஜூலா ஸ்நான் காட்… நாங்கள் மறந்துபோய் பாலத்திற்கு முன்பாகவே, ஒரு ஸ்நான் காட்டில் குளிக்கலாமென்று படிகள் இறங்கி விட்டோம்… பார்த்தால் குப்பையும், கூளமுமாக கங்கையை மிக அசுத்தமாக வைத்திருந்தார்கள்… துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டும் படியேறி வந்துவிட்டோம்… அக்கரையில் எல்லோரும் குளித்துக் கொண்டிருந்தனர்… அப்போதுதான் நாங்கள் செய்த தவறு எங்களுக்குப் புரிந்தது…. இன்னும் சிறிது தூரம் நடந்தவுடன், லக்ஷ்மண் ஜூலா பாலம் வந்துவிட்டது…. அதைக்கடந்து படித்துறைக்குச் சென்றோம்…

 

பழுப்பு நிறத்தில் மிகவேகமாகக் கங்கைப் பிரவாகமாய் ஓடிக் கொண்டிருந்தாள்… இந்தப் பரதகண்டத்தை வாழவைக்கும் தாய் என்கிறார்கள் கங்கையை…! 26 வருடங்களுக்கு முன்பு, அப்பாவோடு இங்கே வந்து ஸ்நானம் செய்தது என் நினைவுக்கு வந்தது…. அப்பாவும், விஜயன் மாமாவும் ஆளுக்கொரு பக்கமாய் என்னைப் பிடித்துக்கொண்டு, கங்கையில் முக்கியதை நினைத்துக் கொண்டேன்… :) ஐஸ்கட்டியாகக் குளிர்கிறது கங்கை…! திருவிசநல்லூர் ஸ்ரீதர் ஐயாவாள் கார்த்திகை அமாவாசை தினத்தன்று, அவர் வீட்டுக்கிணற்றில் கங்கையைப் பொழிய வைத்ததும் ஏனோ நினைவுக்கு வந்தது…. :)

 

தொடரும்….