Wednesday, August 10, 2016


வட இந்தியப் பயணம்…. ( 3 )

 

குதிரையில் பயணம் செய்ததால், தொடைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுவிட்டது எனக்கும், வருணுக்கும்… கைவசம் எந்த ஆயின்மென்டும் இல்லை… ஹோட்டலுக்கு எதிரிலிருந்த பதஞ்சலி கடையில், ஐயோடக்ஸ் போன்றதொரு ஆயின்மென்ட் கிடைத்தது…. அதைத்தடவி வெந்நீர் விட்டுக்கொண்டோம்…. தசைப்பிடிப்பு சரியாவதற்கு இரண்டு நாட்கள் ஆனது…

 

செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஜம்மு கிளம்பத் தயாரானோம்… ஜம்முவின் புகழ்பெற்ற ரகுநாத் ஆலய தரிசனம் முடித்துக்கொண்டு, அதன்பிறகு விமானநிலையம் செல்ல முடிவெடுத்தோம்… ஜம்மு விமானநிலையத்திலிருந்து கத்ராவுக்கு, 1400 ரூபாய் டாக்ஸிக்கட்டணமாகக் கொடுத்தோம்… அதேபோலவேதான் திரும்பி வரும்போதும்…. இம்முறை ஜம்மு நகரத்திற்குள் செல்வதால், கூடுதலாக 200 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது….ஜம்மு நகரிலிருந்து விமானநிலையம் மிகவும் தள்ளியிருக்கிறது….

 

ஜம்முநகரம் நம்முடைய சென்னையைப்போல ஜனநெருக்கடியுள்ள நகரம்…. மலைப்பிரதேசம் என்பதால் ஏறியும், இறங்கியுமாகச் சாலைகள்…. ஆண்கள் பைஜாமா, குர்தாவும்; பெண்கள் சல்வார் கமீஸும் அணிந்திருக்கின்றனர்…. புடவையணிந்தவர்கள் ஒருவரைக்கூட நான் பார்க்கவில்லை… முக்கியமான தெருக்களில் இராணுவம் நிற்கிறது… துப்பாக்கி விற்கும் கடைகளை ஜம்முவில் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம்… பாகிஸ்தானுக்கு வந்துவிட்டோமோ என்று எனக்கு ஒருநிமிடம் தோன்றியது… தமிழ்நாடு போன்றதொரு அமைதியான மாநிலத்திலிருந்து, அங்கு போகிறவர்கள் நிச்சயம் வித்தியாசத்தை உணரமுடியும்… சுதந்தரமில்லாமல், எப்போதும் இராணுவம்  நம்மைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது என்கிற நினைப்போடுதான் தினசரி வாழ்க்கை….

 

ஜம்முநகரத்தின் மையப் பகுதியிலிருக்கிறது இரகுநாத் ஆலயம்… சீதா லக்ஷ்மண சமேதராய், மூலவர் இரகுநாதனாக ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி அருள்பாலிக்கிறார்… மதராஸி என்றால் பூஜாரிகளுக்குக் கொண்டாட்டம்.. :) கையிலிருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொள்கிறார்கள்…. அநுமார் சந்நதியில், கையில் ஒரு கயிறைக் கட்டிவிட்டு; தலைக்கு நூறு ரூபாய் பிடுங்கிக் கொண்டார்கள்… பூஜாரிகள்.. பணத்திற்குப் பேயாய் அலைந்ததைப் பார்த்து மனம் வெதும்பிப் போனேன்… தெற்கில் மட்டும் என்ன வாழ்கிறதாம்….? இங்கும் அதே கதைதானே… திருவரங்கத்தில் சொத்தையே பிடுங்கிக்கொண்டுதான் விடுவார்கள் பட்டர்கள்… :) சைவக்கோவில்களும் அதே லக்ஷணம்தான்…. மதுரையில் எக்கச்சக்கமாகப் பணம் பிடுங்குகிறார்கள் என்று ராஜியக்கா நேற்று என்னிடம் குமுறிக் கொண்டிருந்தார்…. ஆக…ஆலயம் ஆன்மீகத்தை வளர்க்கும் இடம் என்பதுபோய், பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது… பூஜாரிகளும், பட்டர்களும், சிவாச்சாரியார்களும் பருத்த வயிற்றுடன்; தாம்புக்கயிறு கனத்துக்குத் தங்கச்சங்கிலி அணிந்திருக்கிறார்கள்… :) பணம் கொழிக்கும் வாழ்வு… :) வருமானவரி வரும்படிக்குக் கிடையாது.. :) வைத்தீஸ்வரன்கோவில் சிவச்சாரியார்கள் பங்களா போன்று வீடு கட்டியிருக்கிறார்கள்.. நமக்கு வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவதற்குள் நாக்குத் தள்ளுகிறது… :)

 

அரசுவாழ்வு துறந்து, கானகம் போன இராமபிரான் பெயரைச் சொல்லி அமோகமாக வசூல் நடக்கிறது… :) இரகுநாதனைப் பார்த்துவிட்டு, ஜம்மு விமானநிலையம் வந்து சேந்தோம்… எங்களுக்கு ஒருமணிக்கு தில்லி போகிற ஸ்பைஸ்ஜெட் விமானம்… மதிய உணவு எதுவும் சாப்பிடவில்லை… இரகுநாத் ஆலயத்திற்கருகில் ஒரு கடையில் பழரசம் சாப்பிட்டதோடு சரி…. தில்லி போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்…

 

விமானநிலையத்தில் அமர்ந்திருந்தபோது, எனக்கெதிரில் மிக அழகான காஷ்மீரிப் பெண்கள் இருவர் அமர்ந்திருந்தனர்… இஸ்லாமியப்பெண்கள்… தலைக்கு முக்காடிட்டிருந்தனர்… காஷ்மீருக்கேயுரிய ரோஜாநிறம், கூர்மையான நாசி என்று ஆளை அசத்தும் அழகிகள்… ஸ்ரீநகர் விமானத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்… நான் அவர்களை ரசித்துக் கொண்டிருந்தேன்… :) இந்த ரசனை மட்டும் இல்லையென்றால் நாமெல்லாம் வெறும் ஜடம்தானே…. :)

 

தில்லிக்குப் போகிற விமானத்தில் ஏறும் சமயத்தில், ஒருபெண் என்னருகில் வந்து, “ நீங்க தமிழா…?..”  என்றாள்… நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்… ” பையனோட தமிழ்ல பேசிக்கிட்டிருந்தீங்க… அதான் கேட்டேன்…” என்றாள்… தேமதுரத் தமிழோசை இந்தியாவின் உச்சிவரைக் கேட்கும்… :)

 

தொடரும்….

No comments:

Post a Comment