Wednesday, August 17, 2016


வட இந்தியப் பயணம்…. ( 4 )

 

தில்லி விமானநிலையம் போய்ச்சேர்ந்து, பெட்டிகளை எடுத்துக் கொள்ளும்போது மதியம் 3 மணி… எங்களுக்கு 4.30 மணிக்கு, டேராடூனுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம்… வேகவேகமாக செக்-இன் கவுன்டரை நோக்கி நடந்தோம்… பெட்டிகளைக் கவுன்டரில் கொடுத்துவிட்டு, ஆளுக்கொரு சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டோம்… விமானநிலையத்திற்குள் எப்போதுமே விலை அதிகமாகத்தானே இருக்கும்.. ஒரு சாண்ட்விச்சின் விலை 200 ரூபாய்… :)

 

தில்லி விமானநிலையத்தைப் பற்றி அவசியம் நான் குறிப்பிட்டாக வேண்டும்…. சர்வதேச தரத்தில் மிகுந்த கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது…. எல்லாத் தளங்களிலும் கார்ப்பெட் போட்டிருக்கிறார்கள்…. படு சுத்தம்… ! ஒலிப்பெருக்கி இல்லாத Noise free zone.  ப்ளாஸ்மா திரையில், நம்முடைய விமானம் எந்த வாசலில் நிற்கிறது என்று பார்த்து ஏறிக்கொள்ள வேண்டியதுதான்…!

 

குட்டி ஸ்பைஸ்ஜெட் விமானம்… அறுபதுபேர் இருந்திருப்போம்…. தில்லியிலிருந்து ஒருமணிநேரப் பிரயாணம் டேராடூன்… உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரம்… ஊட்டி போல இருக்கிறது… மிகச்சிறிய விமானநிலையம்… டேராடூனிலிருந்து ரிஷிகேஷ் 30 கி.மி. டாக்ஸிக்கட்டணம் 700 ரூபாய்… ஒன்றரைமணிநேரப் பிரயாணம்… ரிஷிகேஷ் வரை சாலை பரவாயில்லை… டாக்ஸி ஓட்டுநரிடம் நாட்டுநடப்புப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தேன்… சமீபத்தில்தான் உத்தராகண்ட் மாநில சட்டசபையை முடக்கி வைத்திருந்தது மத்திய அரசு… உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் காங்கிரஸ் அரசே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளது… “ ஹரீஷ் ராவத் திறமையான முதலமைச்சர்… “ என்றார் ஓட்டுநர்… வனத்துறைக்குச் சொந்தமான சாலையில் சென்று கொண்டிருந்தோம்…. அந்தச் சாலையை ஏழுமணிக்கு மூடிவிடுவார்களாம்… சிறுத்தைப்புலி மற்றும் கரடி நடமாட்டம் உள்ள பகுதியாம்… கரடியைப் பார்க்கவில்லையே என்று எனக்குப் பெரிய குறைதான்… :)

 

ரிஷிகேஷ் எல்லையைத் தொட்டவுடன், கங்கையின் ஆர்ப்பாட்டச் சப்தம் கேட்டது… :) “ ஒருவாரமாய் மழைக் கொட்டித் தீர்க்கிறது… அதனால் தண்ணீர் பிரவாகமாய் ஓடுகிறது…” என்றார் ஓட்டுநர்… தபோவன் பகுதியில், ஆனந்தம் ரிசார்ட் ஹோட்டலில் நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம்… பெட்டிகளை வைத்துவிட்டு, சாப்பிட வெளியே சென்றோம்… எப்போதும் போல சப்பாத்தி, சப்ஜி சாப்பிட்டோம்… கத்ராவைவிட ரிஷிகேஷில் உணவுப்பண்டங்களின் விலை அதிகம்… சுவையும் சுமார்தான்… சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால் மழை பொத்துக்கொண்டு கொட்டுகிறது.. அரைமணிநேரத்துக்கும் மேலாக அங்கேயே நின்று கொண்டிருந்தோம்… மழை கொஞ்சம் குறைந்தவுடன், வேகவேகமாக ஹோட்டலுக்கு ஓடினோம்… :) மறுநாள் காலை தேவப்பிரயாகை செல்லவேண்டும் என்ற என்னுடையப் பிரயாணத் திட்டத்தைப் புரட்டிப் போட்டது மழை…

 

இடைவிடாத மழையில் நாளை எப்படி கங்கா ஸ்நானம் செய்யப் போகிறோம் என்ற யோசனையிலேயே தூங்கிப்போனேன்…. காலையில் சிறிது மழை விட்டிருந்தது…. இதுதான் நல்ல சமயம்… போய் கங்கா ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடலாமென்று கிளம்பினோம்… லக்ஷ்மண் ஜூலாவைக் ( தொங்கு பாலம் ) கடந்தால், அந்தப்பக்கம் லக்ஷ்மண் ஜூலா ஸ்நான் காட்… நாங்கள் மறந்துபோய் பாலத்திற்கு முன்பாகவே, ஒரு ஸ்நான் காட்டில் குளிக்கலாமென்று படிகள் இறங்கி விட்டோம்… பார்த்தால் குப்பையும், கூளமுமாக கங்கையை மிக அசுத்தமாக வைத்திருந்தார்கள்… துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாமல் மீண்டும் படியேறி வந்துவிட்டோம்… அக்கரையில் எல்லோரும் குளித்துக் கொண்டிருந்தனர்… அப்போதுதான் நாங்கள் செய்த தவறு எங்களுக்குப் புரிந்தது…. இன்னும் சிறிது தூரம் நடந்தவுடன், லக்ஷ்மண் ஜூலா பாலம் வந்துவிட்டது…. அதைக்கடந்து படித்துறைக்குச் சென்றோம்…

 

பழுப்பு நிறத்தில் மிகவேகமாகக் கங்கைப் பிரவாகமாய் ஓடிக் கொண்டிருந்தாள்… இந்தப் பரதகண்டத்தை வாழவைக்கும் தாய் என்கிறார்கள் கங்கையை…! 26 வருடங்களுக்கு முன்பு, அப்பாவோடு இங்கே வந்து ஸ்நானம் செய்தது என் நினைவுக்கு வந்தது…. அப்பாவும், விஜயன் மாமாவும் ஆளுக்கொரு பக்கமாய் என்னைப் பிடித்துக்கொண்டு, கங்கையில் முக்கியதை நினைத்துக் கொண்டேன்… :) ஐஸ்கட்டியாகக் குளிர்கிறது கங்கை…! திருவிசநல்லூர் ஸ்ரீதர் ஐயாவாள் கார்த்திகை அமாவாசை தினத்தன்று, அவர் வீட்டுக்கிணற்றில் கங்கையைப் பொழிய வைத்ததும் ஏனோ நினைவுக்கு வந்தது…. :)

 

தொடரும்….

No comments:

Post a Comment