Monday, August 8, 2016


வட இந்தியப் பயணம்….. ( 1 )

 

என் கணவருக்கு 1994 இல் தில்லிக்கு மாற்றலாகி, அங்கு சென்ற புதிதில்; ஹிந்தியில் பேசுவதற்குத் தடுமாறினேன்... ( ஹிந்தியில் விஷாரத் வரை படித்திருந்தும் J ) படிப்பது வேறு... பேச்சு வழக்கு வேறு என்பது அப்போதுதான் புரிந்தது... J போகப் போக கொஞ்சம் சுமாராக ஹிந்தி பேச ஆரம்பித்தேன்… 97 இல் திரும்பவும் சென்னைக்கு மாற்றலாகி வந்தபின், அந்த “ சுமார் “  ஹிந்தியும் சுத்தமாக மறந்தே போனது... சென்னையில் என்னுடைய சுமார் ஹிந்தியைக் கேட்பதற்கு ஆள் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்… J

 

கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு வட இந்தியப் பயணத்திற்காக, அண்மையில் ஜம்மு விமானநிலையத்தில் வந்திறங்கிய போது; இன்னும் ஒருவாரம் ஹிந்தி பேசியாக வேண்டுமே என்று ஒரே யோசனையாக இருந்தது… சோழநாட்டுப் பெண்ணாச்சே… சமாளிக்க முடியாமல் போய்விடுமா என்ன…? J அடுத்தடுத்து ஃப்ரீபெய்ட் டாக்ஸி கவுன்டரில், டாக்ஸி ஓட்டுநரிடம், பிற்பாடு ஹோட்டலில்… என்று வரிசையாகப் பேச ”சுமார்” ஹிந்தி கைகொடுத்தது…! சித்திரமும் கைப்பழக்கம்…செவ்விந்தியும் நாப்பழக்கம்… J

 

சென்னையிலிருந்து தில்லி, பின்பு தில்லியிலிருந்து ஜம்மு விமானப்பயணம்… ஜம்முவிலிருந்து கத்ரா வரை 48 கி.மீ. கார்ப்பயணம்… மலைப்பாங்கான பிரதேசம்.. பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், மலையைக் குடைந்து சாலைகள் அமைத்திருக்கின்றனர்… இராணுவ ரோந்து வாகனங்கள், ஜம்மு—கத்ரா சாலையின் முக்கியமான இடங்களில் நிற்கவைக்கப்பட்டுள்ளன…. ரபி நதி ஓடுகிறது…. சிறிதளவே நீரோட்டம்…

 

கத்ராவில் ஹோட்டல் வைஷ்ணோதேவியில் முன்பதிவு செய்திருந்தோம்… காலை 6.30 மணிக்கு சென்னையில் விமானம் ஏறிய நாங்கள், ஹோட்டலை வந்தடைந்தபோது மணி 2.30… வசதியான அறை… கீழே உள்ள ரெஸ்ட்டாரென்டில் மதிய உணவு உண்டோம்… மூலி ( முள்ளங்கி ) பராத்தா, ஆலு பராத்தா என்று பிரமாதமான சாப்பாடு… விலையும் நியாயமாகவே இருந்தது… சிறிதுநேர ஓய்வுக்குப்பின், மாலை 7.30 மணிக்கு வைஷ்ணோதேவி கோவில் யாத்திரை செல்வதற்குப் பயணமானோம்…

 

ஹோட்டலிலிருந்து ஒரு மாருதிவேனில் , எங்களைக் கோவிலுக்குப் போகும் பாதையருகே இறக்கி விட்டார்கள்… அங்கிருந்து 14 கி.மீ. யாத்திரை செல்லவேண்டும்… கோவிலுக்குப் போவதற்கான இலவச அனுமதிச்சீட்டு வாங்குவதற்கு, ஒரு கி.மீ, தூரம் வரை மிகப்பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது…. நாங்கள் ஜம்மு விமான நிலையத்திலேயே, அங்கிருக்கும் கவுன்டரில், எங்கள் மூவருக்கும் அனுமதிச்சீட்டு வாங்கிவந்து விட்டோம்… அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், கூட்டம் மிக அதிகம்… என் கணிப்புப்படி 75,000 பேர் அன்று வந்திருப்பார்கள்… கூட்டமான கூட்டம்… ! இதில் ஆங்காங்கே ஆடவருக்கும், மகளிருக்கும் தனித்தனியாகக் காவல் பரிசோதனை வேறு… எல்லாம் முடிந்து யாத்திரையை ஆரம்பிக்கவேண்டும்… என் மகன் வருண், தன்னால் 14 கி.மீ நடக்கமுடியாதென்றும்; தான் குதிரையில் வருவதாகவும் சொல்லிவிட்டான்… மொழி தெரியாத இடத்தில், மகனைக் குதிரையில் தனியாக அனுப்ப எனக்குத் தயக்கமாக இருந்ததால்; நானும் குதிரையிலேயே போக முடிவு செய்தேன்… என் கணவர் கணேஷ் பாதயாத்திரையாகச் சென்றார்…

 

ஒரு குதிரைக்கு 1200 ரூபாய்… குதிரையின் சாப்பாட்டுக்கான கொள்ளுக்கு 100 ரூபாய் என்று ஒரு குதிரைக்கு 1300 ரூபாய்… இது மேலே செல்வதற்கு மட்டும்… திரும்பி வருவதற்கு வேறு குதிரை அமர்த்திக்கொள்ள வேண்டும்… குதிரையில் போவது சாதாரணமான விஷயமல்ல… இரண்டு தொடைகளிலும் பயங்கரமான வலியெடுக்கும்… சேணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதால்,கைகள் காய்த்துப்போய்விடும்… படு அவஸ்தையான பயணம்… இரண்டுமணிநேரப் பிரயாணத்திற்குப் பிறகு, குதிரைக்கு அரைமணிநேரம் ஓய்வு… குதிரைக்கு கொள்ளு தரப்பட்டது…. என் குதிரையின் பெயர் பப்லு… J வருணின் குதிரையின் பெயர் சேட்டக்… J  நாங்களும் இறங்கி தண்ணீர், பழரசம் குடித்தோம்… ஜெய் மாதா தீ என்று கோஷமிட்டுக்கொண்டே கூட்டம் நடந்து செல்கிறது….

 

பலர் மூட்டை முடிச்சுகளுடன் ஏறிவந்து, பாதிவழியில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்துறங்கி; காலையில் எழுந்து மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றனர்… மேலே போகப்போகக் குளிர்கிறது… கம்பளிப் போர்வைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன… ஆயிரக்கணக்கில் மக்கள் கம்பளி போர்த்தி உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது… குதிரையில் சென்றதால் ஒரு பொட்டுத்தூக்கம் கூட எங்களுக்கு வரவில்லை….

 

தொடரும்….

 

No comments:

Post a Comment