Thursday, April 28, 2016


எத்துணை வகையினும், நன்மை பயக்கக்கூடிய நல்ல பொருள்களை உனக்குத் தெரிவித்தேன். நீ அவற்றை அறியும் ஆற்றல் இல்லாதவனாயினைஎன் தகைவனே.. என் பிழை பொறுத்தருள்வாய்..” என்று இராவணனை நோக்கிச் சொல்லிவிட்டு, விபீஷணன் இலங்காபுரியை விட்டு நீங்கினான்அனலன், அனிலன், அரன், சம்பாதி என்ற அமைச்சர்களாகிய நால்வரும் விபீஷணனோடு சேர்ந்து கொண்டனர்…. இந்நால்வரும் விபீஷணனின் மாமன்மார் என்று கூறுவாரும் உண்டு

 

ஐவரும் வாநரப்படையுடன், இராமன் தங்கியிருந்த அக்கரைக்கு ( தனுஷ்கோடி ) விரைவாகச் சென்றனர்மறுகரையை அணுகி, தீபஒளியில் கடலானது, பாற்கடல்போலக் காட்சியளித்த அந்த காட்சியை இரசித்தவாறே, வாநரப் பெருஞ்சேனையை கண்களாற் பார்த்தான் விபீஷணன்  ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும் ஒருபுறம் நிறுத்தி, வாநரச்சேனையை மறுபுறம் நிறுத்தி எண்ணினால்; வாநரக்குலமே எண்ணிக்கையில் மிகுந்ததாக இருக்கும் போலிருக்கிறது….” என்று வாநரப்படையை வியந்த வண்ணம் தன் மந்திரிமாரைப் பார்த்துக் கூறினான்

 

அறம் வழுவாது நிற்கும் இராமபிரானிடம் நான் அன்பு பூண்டுள்ளேன்நல்ல கீர்த்தியினால் வரும் வாழ்வன்றி, பழியை விளைக்கும் வாழ்வை நான் விரும்ப மாட்டேன்இராவணன் என்னை வெகுண்டு விரட்ட, நான் அவனைத் துறந்தனென்…. இந்நிலையில் நான் செய்ய வேண்டியது என்ன…?..” என்று மந்திரிமாரை வினவினான்….

 

” எப்பார்க்கும் ஒப்பாரில்லாத தரும்மூர்த்தியான ஸ்ரீ இராமபிரானைத் தரிசித்தலே, இனி நாம் செய்ய வேண்டிய கடமை.. மாட்சியின் அமைந்தது அதுவேயாம்.. மற்று வேறு இலை..” என அமைச்சர்கள் நால்வரும் தெளிவாகச் சொன்னார்கள்…

 

” நல்ல உரைகளை மொழிந்தீர்கள்…” எல்லையில் பெரு குணத்து இராமன் தாளினை புல்லுதும் புல்லிய பிறவி போகவே…” அளவிறந்த நற்பண்புகளையுடைய இராமபிரானது அடியிணைகளை, நம்மைப் பற்றியுள்ள இந்த அரக்கர் பிறப்பு தவிரும்படித் தழுவுவோம்..” என்றான் விபீஷணன்…

 

“ முன்புறக் கண்டிலேன் கேள்வி முன்பிலேன்

அன்புறக் காரண மறிய கிற்றிலேன்

என்புறக் குளிருநெஞ் சுருகு மேலவன்

புன்புலைப் பிறவியின் பகைஞன் போலுமால்..”

யுத்த காண்டம்…. வீடணன் அடைக்கலப் படலம்…

 

“ இதற்கு முன்பாக நான் அவ்விராமபிரானைத் தரிசித்ததில்லை… அவனைப் பற்றி முன்பு கேட்டறிந்ததுமில்லை… அங்ஙனமிருந்தும் அப்பிரானிடம் அன்பு உறக் காரணம் ஒன்றும் அறியாதவனாக உள்ளேன்…. அவனை நினைக்கும்போதே, என் உடல் எலும்புகள் குளிர்ந்து போகின்றன… நெஞ்சு அனலிலிட்ட மெழுகாக உருகுகின்றது… அந்த இராமபிரான் இழிவான பிறப்பை வென்றொழிக்கவல்ல விரோதி போலத்தான் தோன்றுகிறான்….” புன்புலைப் பிறவியின் பகைஞன்….!

 

ஒருவரைப் பார்க்காமல், பேசாமல், அவரைப்பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலேயே; அவர்பால் அன்பு தோன்றுமாயின் அஃது அப்பிராகிருத நட்பு எனப்படும்… அப்பூதியடிகளுக்கு அப்பர்பெருமான் மேலிருந்த அன்பும், கோப்பெருஞ்சொழன், பிசிராந்தையார் நட்பும் இவ்வகைத் தன்மையன…

 

“ என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவுஇல் காதல்

அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என் கொல்? அறிதல் தேற்றேன்…” என்று கிஷ்கிந்தா காண்டத்தில், இராமனைக் கண்ட மாத்திரத்தில் அநுமனுக்குத் தோன்றிய அகவுணர்வை இங்கு ஒப்பு நோக்கலாம்…

 

“ நன்னெஞ்சே! நம்பெருமாள் நாளும் இனிதமரும்

அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது

முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்

பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே…”

திருமங்கையாழ்வார்…. பெரிய திருமொழி….

No comments:

Post a Comment